
'அண்ணாவின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்' நூலிலிருந்து: ஜஸ்டிஸ் கட்சிக் காலத்தில், வடமாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார், அண்ணாதுரை. ஹரித்வார் சென்ற பின், அங்கிருந்து, அசாம் மாநிலத்திற்கு சென்றனர். வழியில், பிரம்மபுத்திரா நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியை கடப்பதற்கு, சிறிய கப்பல் அளவிற்கு பெரிய படகு ஒன்று இருந்தது. அதில், இரண்டு தாழ்வாரப் பகுதிகளிலும் தேநீர் கடை இருந்தது.
படகில் பயணம் செய்த அண்ணாதுரை, தேநீர் குடிப்பதற்காக ஒரு கடைக்குச் சென்றார். அந்தக் கடை அருகில் இருந்த சக பயணி ஒருவர், அண்ணாதுரையின் சட்டையைப் பிடித்து, 'என்ன வேண்டும்?' என்று, சைகை மூலம் கேட்டார். காரணம், மொழிப் பிரச்னை!
தேநீர் குடிக்கப் போவதாக ஜாடையிலேயே தெரிவித்தார், அண்ணாதுரை.
உடனே அவர், 'உங்களைப் பார்த்தால், இந்து போல் தெரிகிறது. இந்துவாகிய நீங்கள், ஒரு முஸ்லிம் கடையிலா தேநீர் குடிப்பது...' என்று, உருது மொழியில் கேட்டார். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல், அவரிடமிருந்து தன்னை விடுவித்து, முஸ்லிம் கடைக்குள் சென்றார், அண்ணாதுரை.
முஸ்லிம் கடைக்காரர், அண்ணாதுரையை பார்த்து, எதிர்கடைக்கு செல்லுமாறு சொன்னார். குழம்பியவாறு, 'ஏன்?' என்று கேட்டார் அண்ணாதுரை. அதற்கு அவர், 'நீங்கள் இந்து; நான், முஸ்லிம். நான், உங்களுக்கு தேநீர் கொடுத்தால், நீங்கள் போன பின், எதிர்க்கடைக்கார் என்னிடம் சண்டைக்கு வருவார்...' என்றார்.
வட மாநிலங்களில், அன்று, மதவெறி எந்த அளவுக்கு இருந்தது என்பதை இந்நிகழ்ச்சி, அண்ணாதுரைக்கு உணர்த்தியது.
கடந்த, 1971ல், 'கலைமகள்' இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டியிலிருந்து: 'தமிழை, 'காட்டுமிராண்டி பாஷை' என்று குறிப்பிட்டீர்களே...'
'ஆமாம் சொன்னேன்; என்ன தப்பு... இருவர் சண்டை போடும் போது, தமிழில் எப்படி திட்டுறான்... சண்டைக்காரனை மட்டுமா திட்டுறான்... அவன் அம்மா, அக்கா, பெண்டாட்டி என, எல்லாரையுமல்லவா இழுக்கிறான்... அதே மாதிரி, சண்டை வந்து இங்கிலீஷ்ல திட்டினா, 'இடியட், நான் சென்ஸ்'ன்னு திட்டலாம். தமிழில திட்டுற மாதிரி அவ்வளவு கேவலமான வார்த்தைகளால திட்டுறதுண்டா... கிராமங்கள்ல பொம்பளைங்க சண்டை போடும் போது, பேசுறதைக் கேட்டாத் தான் நான் சொல்றது புரியும்...' என்றார்.
அப்போது, அருகில் இருந்த அவரது உதவியாளர், 'இங்கே சென்னையில மட்டும் என்ன வாழுதாம்... அதை விட மோசமாயிருக்கு...' என்றார்.
'இந்தி மீது இருந்த துவேஷம், தமிழ் மொழி மீது அன்பா மாறிடுச்சு; அதுதான் உண்மை. வீட்டுல குழந்தைகள் எல்லாம் இங்கிலீஷ்ல பேசணும்; அது, நாகரிகத்தை கொண்டு வருது. ஏன், திருக்குறளை எடுத்துக்குங்க... நான் மட்டும் தான் குறளைக் கண்டிக்கிறேன்!'
'ஏன் கண்டிக்கிறீர்கள்?'
'குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றிடுமேன்னு தான். ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது, திருக்குறள். அது, பெண்ணை, ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. திருக்குறள்ல பெண்ணொழுக்கம் பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கு; ஆனா, ஆண் ஒழுக்கம் பத்தி ஏதாவது சொல்லியிருக்கா... 'தாம் வீழ்வார்...' என்ற குறளைப் பாருங்க... அது தான் மோட்சம் என்கிறார் வள்ளுவர். அந்த காலத்து நாகரிகம் அப்படி. இந்த காலத்துக்கு திருக்குறள் கருத்துகள் ஒத்துவருமா?
'நான் குறள் மாநாடு நடத்தியதாலே, சில பேர் என்னைக் கண்டிச்சாங்க; கருணாநிதி கூட, 'அதை (குறள்) ஒண்ணையாவது விட்டு வைக்கக் கூடாதா?'ன்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது குறள்; அதை, அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்ன்னா, எப்படி?
'ஆடு தின்கிறவன், மாடு தின்னக் கூடாதா... ஆடு திங்கிற புல்ல தான், மாடும் தின்கிறது. ஆனா, மாட்டுக் கறி சாப்பிட்டா, 'பாவம்'ன்னு சொல்றாங்க. காரணம், மதக் கட்டுப்பாடு தானே... திருடினா பாவம்ன்னு சொன்னா போதாது; திருட வேண்டிய அவசியம் இல்லாத வகையில, சமுதாய நிலைய மாத்தணும்...'
- இப்படி குறிப்பிட்டுள்ளார் ஈ.வெ.ரா.
'கி.வா.ஜ., சிலேடைச் சுவை' நூலிலிருந்து: மேடை சற்று உயரமாகவும், அதன் மறுபக்கத்தில் படியும் இருந்தது. இதைக் கவனிக்காத, கி.வா.ஜ., எப்படி மேடை மேல் ஏறுவது என்று யோசித்தபடி நின்று விட்டார். இதைக் கண்ட விழா அமைப்பாளர், 'இப்படி வந்து ஏறுங்கள்...' என்று, படியை சுட்டிக் காட்டினார்.
'இப்படி என்று தெரியவில்லை; இப்போ, இப் - படி ஏறுகிறேன்...' என்று சொல்லி, படி ஏறி மேடைக்கு போனார்.
நடுத்தெரு நாராயணன்

