PUBLISHED ON : ஜூன் 14, 2015

காதில் பூச்சுற்றும் வகையிலான ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு ஹாலிவுட்டில் இன்னும் கிராக்கி உள்ளது. இதுவரை, ஷான் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன் உள்ளிட்ட ஆறு கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
தற்போது, டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார். இவர், நான்கு படங்களில் நடித்து விட்டதால், 'ஆளை மாற்றுங்கப்பா...' என, ஹாலிவுட் ரசிகர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
இதனால், புதிய ஜேம்ஸ்பாண்டுக்கான தேடல், தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், மாஜி ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன், 'ஹாலிவுட்டின் பிரபல கறுப்பின நடிகரான இத்ரீஸ் எல்பா தான், ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு பொருத்தமான நடிகர்...' என, திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரின் வாக்கு பலித்து, இத்ரீஸ், ஜேம்ஸ்பாண்டாக நடித்தால், அந்த வேடத்தில் நடிக்கும் முதல் கறுப்பின நடிகர் இவராகத் தான் இருப்பார். ஆனால், இத்ரீஸ், 'ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நானா; பொருத்தமாக இருக்காது; சான்சே இல்லை...' என, மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
— ஜோல்னாபையன்.

