
'நிறைய ரத்தம் போயிருக்கு. யாராவது ரத்தம் தந்தாத்தான், ஓரளவு உயிர் பிழைக்க வாய்ப்பு. ஆனா, உங்க அம்மா ருக்மணிக்கு ரொம்ப அரிதான ரத்த வகை. எல்லா ஆஸ்பிட்டலேயும் கேட்டு பார்த்துட்டோம். ஒண்ணும், 'மேட்ச்' ஆகல. பத்திரிகையிலே கூட விளம்பரப்படுத்தி இருக்கோம்...' என, டாக்டர் கூறி விட்டார்.
'வயதாகி விட்டது, சும்மா மொட்டை மாடிக்கு போகாதேன்னு சொன்னா கேட்டா தானே, எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நான் காலேஜுக்கு போகும் நேரத்தில், வேலைக்காரியை ஏமாத்திட்டு, மொட்டை மாடிக்குப் போய், தடுக்கி விழுந்து...' என்ற நித்யாவிற்கு அழுகை வந்தது.
நித்யாவின் ரத்த வகை, அம்மாவிற்கு ஒத்து போகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், மொபைல் போனில் பேசி, ஒவ்வொரு சினேகிதியாக விசாரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, டாக்டர் அறைக்குள் நுழைந்தாள், ஒரு பெண்.
''டாக்டர், என் ரத்தத்தை எடுத்துக்கங்க. பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துட்டு, என் ரத்த வகையும் அதேதான்னு தெரிஞ்சு வந்தேன். யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். ரத்தம் கிடைச்சுடுச்சுன்னு மட்டும் சொல்லுங்க.''
டாக்டருக்கு ஏக மகிழ்ச்சி.
அவள் உள்ளே போனதும், சோகத்தோடு வந்த நித்யா, ''டாக்டர், இப்ப என்ன பண்றது?'' என்றாள்.
''கவலைப்படாதீங்க, ரத்தம் கிடைச்சாச்சு!''
''அப்படியா, டாக்டர்... யார் குடுத்தாங்க, நான் பார்க்கணுமே.''
''யாரோ ஒரு பொண்ணு, போய் பாருங்க.''
இவள் போனபோது, அந்தப் பெண் ரத்தம் கொடுத்துவிட்டு, பணம் வாங்காமல், ஓய்வு
எடுக்க வேண்டும் என்று சொன்னதையும் கேட்காமல், வெளியே போய் விட்டதாக, தகவல் கிடைத்தது.
'யார் அவள்?' யோசனையில் ஆழ்ந்தாள், நித்யா.
உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்து, ஓய்வில் இருந்தாள், அம்மா.
''யாரும்மா அது?'' மெல்ல கேட்டாள், நித்யா.
''யார்?''
''உனக்கு ரத்தம் கொடுத்தாங்களே, அவங்க யார்?''
சிரித்தாள், அம்மா.
''நான் மயங்கி கிடந்தப்போ, ரத்தம் கொடுத்தது யாருன்னு எனக்கு எப்படி தெரியும்?''
''தெரியும்மா, உன் நெஞ்சிலே இருக்கிற உறைந்து போன பழைய நினைவுகளை உரசிப் பாரு... நிச்சயம் புரியும். இத்தனை நாள், நான் தான் கோமாவில் இருந்திருக்கேன்னு நினைக்கிறேன்.''
இவள் பேசப் பேச, ருக்மணியின் கண்கள் மூடிக்கொண்டன.
கடந்த காலம் அவள் கண்களில் உறைந்திருந்தது. கடந்த கால ஈரத்தில் துளிர்த்த நினைவுகள் மெல்ல மெல்ல உருக ஆரம்பிக்க, யோசித்தாள், ருக்மணி...
அவள் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தபோது, சிறு பருவப் பெண்.
எஜமான் நல்லவர் என்று சொல்லப்பட்ட உண்மை, அதை நம்பிய பெண்மை, சீரழிந்த தாய்மை. சின்னாபின்னம் அடைந்த எஜமானி அம்மாவின் நம்பிக்கை எல்லாமே நடந்து முடிந்து விட்டன.
ருக்மணியின் அம்மாவிடம், 'உன் பெண்ணின் வயத்துலே வளர்ற குழந்தையின் பொறுப்பை, நான் ஏற்கிறேன். உண்மை தெரிந்தால், ஐயாவுடைய மானம் போயிடும். அவரிடம் சொல்ல வேண்டாம்.
'இந்த உண்மை நம்முடனேயே இருக்கட்டும். குழந்தையின் படிப்பு எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு. இந்த ரகசியம் நமக்குள் மட்டும் இருக்கட்டும்...' என்றார், எஜமானி அம்மா.
எஜமானி அம்மாவின் நம்பிக்கையை ஏற்று, சமாதானமடைந்து, மூன்று மாதக் கர்ப்பிணியான தன் மகளுடன் வீடு திரும்பினாள், ருக்மணியின் தாய்.
அன்று -
பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன், எஜமானி அம்மாவின் இல்லம் வந்தபோது, பாடையில் படுத்திருந்தாள், எஜமானி அம்மா.
யாரிடம் நீதி கேட்பது, நிகழ்ந்தது ஒரு மரணம் மட்டுமல்ல. அதன் பிறகு, காலண்டரின் தினசரி நாட்கள் கிழிபட, நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் மாறின... ஒவ்வொன்றும் இவைகள் கடந்த கால கணக்கு.
ருக்மணியின் அந்தக் குழந்தையை, அனாதை இல்லத்தில் போட்டுவிட்டு இறந்து போனாள், அவளது அம்மா. ஆனால், கர்மா விடவில்லை.
மீண்டும் அதே எஜமான் வீட்டில், எஜமானியின் உடல் நலக்குறைவு காரணமாக, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும், 'கேர் டேக்கர்' ஆக வேலைக்குப் போவோம் என்று, ருக்மணி நினைக்கவே இல்லை. 15 வயது கூட ஆகாத அந்த சிறுமியின் கைகளில், நித்யா என்ற ஒரு குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு திணிக்கப்படுகிறது.
தாயாக சிலர் ஆசிர்வதிக்கப்படுகின்றனர். சில பதவிகள் தாமாக வருகின்றன. சில திணிக்கப்படுகின்றன.
ஒரு வயது நிரம்பிய தன் குழந்தையை, ருக்மணியிடம் ஒப்படைத்து, எஜமானின் இரண்டாவது மனைவி வனஜா, உடல் நலக் குறைவால் மரணிக்கும் தருணம்.
'தெரிந்தோ தெரியாமலோ என் கணவர் செய்த தப்புக்கு, நான் கேன்சர் நோயால் அவதிப்படுகிறேன். என் குழந்தைக்குப் பாலுாட்டக் கூட முடியாமல் போய் விட்டது. அதோ அந்த அறையில் தான் அவர், துாக்கு மாட்டி இறந்தார்.
'நான் அந்த அறையை திறப்பதே இல்லை. இன்று, அவரின் நினைவு நாள். நான் இருப்பேனோ, சாவேனோ தெரியவில்லை. இந்த குழந்தையை உன் குழந்தை போல் பார்த்துக் கொள்...' என்று கூறி, மூடி இருந்த அந்த அறையைத் திறக்க வைத்தாள்.
உள்ளே, எஜமான், 'லைப் சைஸ்' புகைப்படம் பெரிதாக. இவளால் அழக்கூட முடியவில்லை. அனாதைகள் உருவாகின்றனரா, உருவாக்கப்படுகின்றனரா?
இவளுக்குத் தெரியவில்லை.
கதையை சொல்லி முடித்தபோது, தன் கண்ணீரோடு, தாயின் கண்ணீரையும் துடைத்தாள், நித்யா.
''அம்மா, நீ எனக்கு என்னைக்கும் அம்மா தான். ஆனால், உனக்கு உயிர் கொடுத்தது யார் தெரியுமா? உன் மகள் தான். கவலைப்படாதே, ஒருநாள், கண்டிப்பா உன்கிட்ட கூட்டிட்டு வருவேன்,'' என்றாள், நித்யா.
''நித்யா, என் பாசத்தை பங்கு போடாதே. நீ ஒருத்தி மட்டும்தான் எனக்கு மகள். என் அம்மா, அந்த அனாதை இல்லத்தில் குழந்தையை விட்டுட்டு வந்த பிறகு, நான் நெனச்சே பார்க்கலை. வேண்டாம், நீ மட்டுமே எனக்கு பெண்ணா இரு. அது போதும் நித்யா.''
அன்று -
தன் வயதொத்த ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தாள், நித்யா.
''பூரணி தைரியமா போ. இதுதான் உன்னோட அம்மா. அம்மான்னு கூப்பிட பயப்படாதே.''
மெல்ல அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்தாள், பூரணி.
இவளை வேண்டாம் என்று ஒதுக்கி, அனாதை இல்லத்தில் விட்டவள், இந்த அம்மா தான். ஆனால், பத்திரிகை விளம்பரம் பார்த்து, அந்த அனாதை இல்லத்தின் தலைவியிடம் விசாரித்தாள்.
லெட்ஜரில் புகைப்படத்தைப் பார்த்து, அவள் துருவித் துருவிக் கேட்டபோது, உண்மைகள் வெளி வந்தன. எந்த அம்மாவை பார்த்து, ரத்தம் கக்க நாலு கேள்விகள் கேட்க நினைத்திருந்தாலோ, அது கேட்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி விட்டது.
என் அம்மாவின் ரத்தத்தில் உருவான பிண்டம், நான். அவளுக்கு ரத்தம் கொடுத்து, என் பிறவிக் கடனைக் கழித்து விட்டேன். கணக்கு சரியாகி விட்டது. இனி, பாக்கி ஏதுமில்லை. நித்யாவின் முயற்சியால் இந்தச் சந்திப்பு நேர்ந்து விட்டது.
அறைக்குள் நுழைந்து, கண்மூடி படுத்திருந்த தன் அம்மாவை பார்த்தாள், பூரணி.
'அம்மா...' என்று அழைக்க நினைத்தாள்; முடியவில்லை. தன் அம்மாவின் நெற்றியில் அவள் முத்தமிட்ட போது, உடல் ஜில்லிட்டுக் கிடந்தது.
புரிந்தது.
அம்மா என்று கூப்பிட நினைத்தவள், 'ஐயோ...' என்று கத்தினாள்.
நேசத்தை தன் நெஞ்சுக்குள் ஏற்றி, நிம்மதியாக கண் மூடி கிடந்தாள், பெற்றவள்.
விமலா ரமணி