
வழக்கமாக போலீசாரிடம் தப்பிக்க, சிலர், 'ஹெல்மெட்' போடுவர். ஆனால், இங்கு ஒருவர், வாகனம் இல்லாமலேயே, 'ஹெல்மெட்'டுடன் நடமாடுகிறார்.
இவர் மட்டும் அல்ல, கேரள மாநிலம், கோழிக்கோடு, மலாபுர பகுதியில், 'ஹெல்மெட்' அணியாமல் யாரும் வெளியில் தலை காட்ட முடியாது. 'ஹெல்மெட்' இல்லாவிட்டால், காகங்கள் பறந்து வந்து தலையில் கொத்தி, காயம் ஏற்படுத்தி விடும்.
அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதற்காக, இங்குள்ள மரங்களை வெட்டினர். அந்த மரங்களில் வசித்த ஏராளமான காகங்கள், முட்டையிட்டு, குஞ்சு பொறித்திருந்தன. மரங்களை வெட்டி சாய்த்தபோது, காக்கை குஞ்சுகள் செத்தன; ஏராளமான முட்டைகளும் உடைந்தன.
இதனால், ஆத்திரம் அடைந்த காகங்கள், அவ்வழியாக யார் வந்தாலும், தலையில் கொத்த ஆரம்பித்தன. காகங்களின் தாக்குதலில் இருந்து தப்பவே, ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிந்து செல்வதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஜோல்னாபையன்