PUBLISHED ON : ஆக 20, 2023

''இந்த முறையாவது சீக்கிரம் போய் எழுதுங்க... இது தான் கடைசி சந்தர்ப்பம்ன்னு நெனச்சுக்கங்க... இன்னக்கி ஒருநாள் அக்கம் பக்கம் எது நடந்தாலும், ஆபிசுக்கு போற வழியப் பாருங்க...'' அடுக்கினாள், சாருமதி.
''சாரு ப்ளீஸ்... கொஞ்சம் மூச்சு விடேன்... மத்தவங்களுக்கு உதவ வேணான்னு சொல்ற ஒரே ஆள் நீயா தான் இருப்பே,'' என்றான், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும், திருவேங்கடம்.
''உங்கள உதவ வேணாம்ன்னு யாரும் சொல்லல... உங்களை விட்டா வேறு யாரும் இல்லேங்கிற நெனப்ப விடுங்கன்னு, தான் சொல்றேன்... நம்ம சூழ்நிலையை அனுசரிச்சு நடந்துக்கங்கன்னு தான் சொல்றேன்.''
சாருமதியும் நல்லவள் தான். அவள் குடும்ப சூழ்நிலை அப்படி. திருவேங்கடம் என்ற 'திரு'வுக்கு வாழ்க்கைப்பட்ட இரண்டாம் ஆண்டு, இந்த அரசு வேலை கிடைத்தது. 10 ஆண்டுகள் ஆயிற்று. வாடகை வீடு, மாதக் கடைசியில் கடன் என்ற சூழ்நிலையில், ஒரு பிரதிபயனுமின்றி பிறருக்கு உதவுவதையே உபதொழிலாக செய்து வந்தான், திரு. குடும்ப பட்ஜெட் போடும் மனைவிக்கு வரும் இயல்பான கோபம் தான் சாருமதிக்கு வந்தது.
இன்று, பதவி உயர்வுக்கான தேர்வு எழுதவிருக்கிறான், திரு. போன முறை தேர்வு எழுத போன போது, அவசரமாக ஓர் அறுவை சிகிச்சைக்கு, 'ஓ பாசிடிவ்' ரத்தம் தேவைப்படுகிறது என கேள்விப்பட்டான். மருத்துவமனை சென்று ரத்தம் கொடுத்துவிட்டு தேர்வு ஹாலுக்குப் போனபோது ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது. 10 மதிப்பெண் குறைவில், பதவி உயர்வு பறி போனது.
கிடைத்திருந்தால் மாதம், 3,000 ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்திருக்கும். அது மற்றவருக்கு உதவியதால் பறிபோனதை எண்ணி விரக்தியும், வேதனையும் தான் மிஞ்சியது சாருமதிக்கு.
பஸ் நிறுத்தத்திற்கு இன்னும் ஐந்து நிமிட நடை. இந்த முறை எப்படியாவது நல்ல முறையில் தேர்வு எழுதிவிட வேண்டும். பதவி உயர்வு கிடைத்தால் பல பிரச்னைகளுக்கு முடிவு கட்டி விடலாம்.
மூன்றாவது படிக்கும் மதுமிதாவிற்கு அப்பாவுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்ற கனவு. முதல் வகுப்பு படிக்கும் மதிவாணனுக்கு வீடியோ கேம் விளையாட ஆசை.
பிள்ளைகளின் கனவுகளைக் கூட நிறைவேற்ற முடியாத அப்பாவாக இருப்பது கூட அவனுக்கு அதிக வருத்தமில்லை. சாருமதியின் மாதக் கடைசி பற்றாக்குறை பிரச்னைகளை ஒழிக்க முடியாதவனாக இருப்பது குறித்து தான் தீவிரமாக வருத்தப்பட்டான்.
ஏற்கனவே இருமுறை எழுதி இருப்பதால் இத்தேர்வு அவனுக்கு மிகவும் பரிச்சயமாகி விட்டது. அதனால், இந்த முறை அதிக நம்பிக்கையோடு இருந்தான். அவன் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்வுக்குழு தலைவராக உதவிப் பொதுமேலாளர் மேகநாதனை நியமித்திருக்கின்றனர்; அவனுடைய பிரிவு அதிகாரி தான், அவர்.
பஸ் நிறுத்தத்தில், கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. சிலர் இறங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த, சென்னை செல்லும் விரைவுப் பேருந்து ஒன்று நின்றது. ஓரிருவர் கீழே இறங்குவதற்குள், பலர் முண்டியடித்து மேல ஏற, அதில் ஒருவனாக அந்த பஸ்சில் பயணித்தான், திரு.
பத்து நிமிட பயணத்தில் பஸ் திடீரென நிற்க... பஸ்சில் சல சலப்பு...
'என்னாச்சு... என்னாச்சு?' என, எல்லாரும் எட்டிப் பார்க்க, முன்னே நின்று கொண்டிருந்த இரு பஸ்களுக்கு முன்னால் சாலையின் மறு பக்கத்தில் சிறு கும்பல். பஸ்சிலிருந்து சிலர் இறங்கி ஓட, அவனும் ஓடினான்.
''இப்பத்தான்... இப்பத்தான் சார் பாத்துகிட்டே இருக்கும் போதே மரத்துல மோதிடுச்சி.''
சாண்ட்ரோ கார் இடது புறமாக சாலையிலிருந்து நழுவி மரத்தில் மோதி, முன் பக்கம் மொத்தமாக நசுங்கிப் போயிருந்தது.
''எதிரே ஒரு மண் லாரி, அந்த பஸ்சை ஓவர் டேக் செஞ்சான்... அதனாலே இவர் டக்னு லெப்ட்ல திருப்பியிருப்பார் போல... சடார்னு மரத்துல மோதிருச்சி.''
அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, உதவ தயாராக இல்லை. போய் குனிந்து பார்த்தான், திரு. டிரைவர் சீட்டில் இருந்தவர், ஸ்டீயரிங்கோடு நசுங்கி போயிருந்தார். மண்டையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மோதிய வேகத்தில் அவர் இறந்து போயிருக்க வேண்டும்!
உள்ளே கையை விட்டு, டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருந்தவனைத் தொட்டுப் பார்த்தான், திரு; துடிப்பு இருந்தது.
போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கார், சாலையின் ஓரமாகப் போய் விபத்திற்குள்ளாகி இருந்தது. பிரச்னை தன் வழியில் இல்லை என்றவுடன் நின்றிருந்த பஸ்செல்லாம் புறப்பட ஆயத்தமானது; சுற்றி நின்ற கூட்டமெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது.
அவனுடன் பஸ்சில் வந்த சிலர், 'சார்... பஸ் கிளம்பிருச்சி வாங்க... வாங்க...' என்று அழைத்தபடியே ஓடிப் போயினர். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சக மனிதனை தவிக்கவிட்டுச் செல்கிறோமே என்ற உறுத்தல் சிறிதுமின்றி அனைவரும் ஓடிப்போக, அந்த இடம் வெறிச்சோடிப் போனது.
சாலையோரம் நின்றிருந்த சிலரை பார்த்து, ''சார் கொஞ்சம் வாங்க ப்ளீஸ்...'' என்றான், திரு.
'உதவி பண்றதப் பத்தி இல்ல சார்... பின்னாடி கோர்ட்டு, கேசுன்னு அலைய முடியாது... அதான்...' என்றபடியே இருவர் வர, மூவருமாய் சேர்ந்து கதவை இழுக்க... ஆட்டம் கண்டது.
சென்னையை நோக்கிச் செல்லும் வாகனங்களை நிற்கும்படி சைகை செய்தான். பொருட்படுத்தாமல் போன வண்டிகள் ஏராளம். சில வண்டிகள் விஷயம் கேள்விப்பட்டு பதிலே சொல்லாமல் வேகமெடுத்தன.
டிராவல்ஸ் கார் ஒன்று நிற்க, டிரைவரிடம் விஷயத்தை விளக்கினான். அவர் மனமிரங்க, அடுத்த, 20 நிமிட பயணத்தில் ஆஸ்பத்திரியை அடைந்தனர்.
டாக்டரிடம் விஷயத்தை திரு சொல்ல, அவர் அவனை யாரென்று விசாரித்தார். அவன் தன் ஐ.டி., கார்டை காண்பித்தவுடன் விரைந்து செயல்பட்டார், டாக்டர்.
அதற்குள் நர்ஸ் ஓடி வந்து, ''அந்த ஆக்சிடெண்ட் கேஸ் கூட யார் வந்தது?'' என்று கேட்க, ''நான் தான் சிஸ்டர்... என்ன?'' என்றான்.
''அவருக்கு உடனே ரத்தம் ஏத்தணும். 'ஓ' பாசிடிவ் ரத்தம் உள்ள யாரையாவது கூப்பிட்டு வாங்க!''
''என்னோடதும், 'ஓ' பாசிடிவ் தான்... எடுத்துக்கங்க...'' என்றான்.
''இன்னும் ஒருத்தர் வேணும்...''
''கொஞ்சம் போன் கொடுங்க ப்ளீஸ்,'' என்றவன், ஆபிசில், 'ஓ' பாசிடிவ் உள்ள பாஸ்கரை அழைத்தான்.
'திரு... உனக்கு இன்னக்கி தேர்வு ஆச்சே... போகலியா?''
''இல்லை... நீ உடனே, வா...'' என்றவன், ஆஸ்பிட்டல் முகவரி சொன்னான்.
எல்லாம் முடிந்து வெளியே வர மதியமாகி விட்டது. அடிப்பட்டவர் பிழைத்துக் கொண்டது மனதிற்கு நிறைவாய் இருந்தது.
மனசு கேட்காமல் தான் சென்று பார்த்தான்.தேர்வு ஹாலில் ஒருவரும் இல்லை. 'மேக நாதனைப் பார்க்கலாமா?' என்று யோசித்தான். 'பிழைக்கத் தெரியாதவனா இருக்கியே...' என, சத்தம் போடுவார்.
சாருவிடம் என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்பது தான் பெரும் கவலையாக இருந்தது. தேர்வு எழுதவில்லை என்றால் அவளால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது. யோசித்தபடியே வந்தான்.
வேலை நாட்களில், மாலை 4:30 மணிக்கெல்லாம் அவனை வீட்டில் பார்ப்பது அபூர்வம். சாருவுக்கு சந்தோஷமாகி விட்டது.
''அப்பாடா... என்ன அதிசயம்! நல்லா எழுதினீங்களா?''
''ம்ம்... நல்லா எழுதியிருக்கேன்...'' முகம் பார்க்காமல் சொன்னான்.
''என்ன ரொம்ப டல்லா இருக்கீங்க? என்ன விஷயம்?''
''ஒண்ணுமில்ல... கொஞ்சம் டயர்டா இருக்கு; அவ்ளவு தான்!''
''கவலைப்படாதீங்க... இந்த முறை நீங்க ஜெயிச்சிருவீங்க!''
இரவு முழுக்க உறக்கம் வரவில்லை திருவுக்கு. தன்னுடைய பொய்யால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தோஷமும், நம்பிக்கையும் அவனை உறுத்தியது. அவளுக்கு உண்மை தெரிய நேர்ந்தால் தேர்வு எழுதவில்லை என்பதைவிட, தான் ஏமாற்றப்பட்டதை தாங்கிக் கொள்ளவே முடியாது. யோசித்தபடியே உறங்கிப் போனான்.
''ஏங்க... எழுந்திருங்க...'' உலுக்கினாள், சாரு.
''உங்களத் தேடி யாரோ வந்திருக்காங்க...''
கடிகாரத்தைப் பார்த்தான். காலை, 7:00 மணி.
''யாரோ கார்ல வந்திருக்காங்கப்பா...'' காதில் கிசுகிசுத்தாள், மதுமிதா.
மேகநாதனும், அவர் மனைவியும் அமர்ந்திருந்தனர்.
''குட்மார்னிங் சார் நீங்களா... எங்க வீட்டுக்கா?'' பரபரத்தான்.
அவர்களை அறிமுகப்படுத்தினான், சாருவிடம். இருவருக்கும் வணக்கம் சொன்ன சாரு, காபி எடுத்துவரச் சென்றாள்.
வாடிப்போன முகத்தோடு இருந்த மேகநாதன் எழுந்து, அவன் கைகளைப் பற்றி, ''ரொம்ப நன்றி திரு... நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க தெரியுமா?'' என்று சொல்கையில் அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்து அவர் மனைவியும் லேசாய் விசும்ப...
''சார்... என்னாச்சு சார்?'' என்றான் பதறியபடி.
''நேத்து நீ காப்பாத்துனது என்னோட பையனைத்தாம்பா.''
''மை காட்... அது உங்க பையனா?''
''இன்னும் அரைமணி தாமதிச்சிருந்தாக் கூட பிழைச்சிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னாரப்பா. நீ உண்மையிலே தெய்வம்ப்பா...'' இரு கை குவித்து அவனை கும்பிட்டார்; பதறிப் போனான், திரு.
''சார்... நான் செஞ்சது சாதாரண விஷயம்... இதுக்குப் போய்...''
''இது உம் பெரிய மனசுப்பா... நீ தேர்வு எழுத வராம எங்கேயோ போயிட்டேன்னு திட்டிகிட்டிருந்தேன். ஆனா, விதி எப்படி விளையாடி இருக்கு பாத்தியா?''
சாருவை ஓரக்கண்ணால் பார்த்தான், திரு; சாருவின் கண்களில் கண்ணீர்.
மேகநாதன் மனைவி, சாருவின் கன்னத்தை பிடித்தபடி, ''அம்மா... நாங்க தவமிருந்து பெத்த ஒரே பிள்ளைம்மா, அவன். அவனுக்கு மறு ஜென்மம் கொடுத்திருக்காரம்மா, உன் புருஷன். நீ ஏழேழு பிறவியும் மகராசியாய் இருப்பாய், மகளே...'' என்று உணர்ச்சிப் பெருக்கோடு ஆசீர்வதித்தார்.
''திரு... தப்பா நெனச்சுக்காதே... இதை பிரதியுபகாரமா செய்யறதா நெனச்சுக்காதே... நீ செஞ்ச உதவிக்கு கைம்மாறா நான் எது செஞ்சாலும் போறாது. உன் குழந்தைகள், என் பேரப்பிள்ளைகள் மாதிரி. அவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. வித் யுவர் பர்மிஷன்... இங்க வாம்மா...'' என, மதுமிதாவை அழைத்து, அவள் கையில் ஒரு கவரை திணித்தார்.
''சார்... இதெல்லாம் வேண்டாம் சார்...'' என்று மறுத்தான், திரு.
''ப்ளீஸ் திரு... தயவு செஞ்சு மறுக்காதே... சாருமதி, என்னை உன் அப்பாவா நெனச்சுக்க... அடிக்கடி என் வீட்டுக்கு வாங்க!''
''காபி சாப்பிடாம கிளம்பறீங்களே...'' என்றாள், சாருமதி.
''இப்ப வேண்டாம்மா... இன்னொரு நாள் பையனோட வந்து உங்க வீட்ல விருந்தே சாப்பிடறோம். வரட்டுமா,'' என்றார், மேகநாதன்.
ஏமாற்றம், கோபம், பெருமிதம் எல்லாம் கலந்த உணர்ச்சிகளோடு கண்கள் கலங்க தன் கணவனைப் பார்த்தாள், சாருமதி.
''சாரி... சாரு... நான் தேர்வு எழுதலேன்னு சொன்னா நீ ரொம்ப வருத்தப்படுவேன்னு தான் மறைச்சேன்.''
''பரவாயில்லீங்க... ஒரு உயிர காப்பாத்தியிருக்கீங்க... எவ்வளவு பெரிய விஷயம்! இதோ மனசார வாழ்த்தினாங்களே அதுவே போதும்...'' என்றபடி மதுவிடமிருந்து கவரை வாங்கிப் பிரித்தாள்.
''அடக்கடவுளே... என்னங்க இது?'' திக்குமுக்காடிப் போனாள், சாரு.
அதை வாங்கிப் பார்த்தான், திரு. இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை.
''மைகாட்... என்ன ஆச்சு அவருக்கு...'' நெருப்பை தொட்டவன் மாதிரி பதறினான்.
''சாரு... இது நமக்கு வேண்டாம்... அவர்கிட்டயே கொடுத்துடலாம்... என்ன சொல்றே?'' என்றான்.
சிறிது நேரம் யோசித்த சாரு, பின், ''வேண்டாம்...'' என்றவள், ''இப்பவாவது நான் சொல்றத நீங்க கேட்டேயாகணும்...'' என்றாள்.
ஒரு வாரம் கழித்து மேகநாதன், வங்கிக்கு சென்று, திருவிற்கு கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார். நான்கு நாட்களுக்கு முன்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. மனம் நிறைந்து போனார்; ஆறுதல் அடைந்தார்.
திரு செய்த பேருதவிக்கு ஈடாக இல்லையென்றாலும், பதிலுக்கு கொஞ்சமாவது செய்த திருப்தியுடன் வீட்டிற்கு சென்றார். அன்றைய கடிதங்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் ஒரு கடிதம் அவர் கவனத்தை ஈர்க்க, பிரித்தார்...
அன்புடையீர்!
எங்கள் அமைப்பிற்கு உதவி வரும் திருவும், அவர் மனைவியும், இரு நாட்களுக்கு முன் வந்திருந்தனர். தாங்கள் எங்கள் அமைப்பிற்கு கொடுத்து உதவியதாக கூறி, இரண்டு லட்சம் ரூபாயை எங்களிடம் அளித்தனர்.
தான் உதவுவது கூட பிறருக்கு தெரியக் கூடாது என்று எண்ணும், தங்களைப் போன்றவர்களின் மூலம் தான், எங்களைப் போன்ற ஆதரவற்றவர்களையும், கைவிடப்பட்டவர்களையும் இறைவன் கைவிட்டு விடவில்லை என்பதை உணர்கிறோம். தங்கள் அன்பையும் ஆசீர் வாதத்தையும் என்றும் வேண்டுகிறோம்.
மிகவும் நன்றி!
இப்படிக்கு,
நிர்வாகி, உதவும் நெஞ்சங்கள்.
கடிதத்தின் மீது இரு சொட்டு கண்ணீர் பட்டென்று விழுந்து தெறித்தது.
வி. பரமசிவம்
