தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதோ ஒரு அதிசயம்!

இதோ ஒரு அதிசயம்!

இதோ ஒரு அதிசயம்!


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 28 - ஆடி அமாவாசை

மேல் நோக்கி ஒரு பொருளை எறிந்தால், அது கீழ் நோக்கி வந்து விடும் என்பது தான், இயற்கை நியதி. புவிஈர்ப்பு விசையே இதற்கு காரணம் என்கிறது, அறிவியல்.

ஆன்மிகத்தில், இதை ஆகர்ஷண சக்தி என்பர். ஆனால், மேலே தள்ளப்படும் குறிப்பிட்ட சில பொருட்கள் கீழே வருவதில்லை. புவிஈர்ப்பு விசையையும் மீறி, மேலே இருக்கும் சோமாதித்ய மண்டலத்துக்கு சென்று விடுகிறது. இந்த அதிசயம், அமாவாசையன்று நிகழும். அவ்வாறு சென்று சேரும் பொருள் என்ன தெரியுமா?

சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் நாள், அமாவாசை. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம். அதிலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகியவை, மிக முக்கியமானவை.

அமாவாசை நாட்களில் கடல் அலைகள் மேல் நோக்கி எழும். இதற்கு, சூரியனும், சந்திரனும் இணைந்து தங்கள் ஈர்ப்பு விசையை மேல் நோக்கி இழுக்கும். அப்போது, கடல் நீர் மட்டம் உயரும். அலைகள் உயரமாக எழும்.

இந்த அறிவியல் தத்துவத்தை தான், நம் முன்னோர்கள் ஆன்மிகத்துக்கும் எடுத்துக் கொண்டனர். இந்த நாளில் எள்ளும், நீரும் இறைத்து, முன்னோருக்கு உணவாக அளிக்கின்றனர். இது மேல் நோக்கி செல்வதாக நம்புகின்றனர். அவ்வாறு அது செல்லும் இடம், பிதுர்லோகம் அல்லது சோமாதித்ய மண்டலம் எனப்படும்.

சோமன் என்றால் சந்திரன்; ஆதித்யன் என்றால் சூரியன். அமாவாசையன்று இருவரும் இணையும் லோகமாக, பிதுர்லோகம் கருதப்படுகிறது. கடல் அலை எப்படி மேல் நோக்கி எழுகிறதோ, அதே போல, நாம் முன்னோருக்கு தரும் இந்த உணவும், புவிஈர்ப்பு விசையையும் மீறி, பிதுர்லோகத்திலுள்ள முன்னோரை அடைவதாக நம்பினர், சான்றோர். மேலே வீசினாலும் கீழே விழாத பொருட்கள் இவைகளே.

ஆடி அமாவாசை, தட்சிணாயணம் என்னும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணத்தின் துவக்கத்தில் வருகிறது. தட்சிணாயணத்துக்கும், உத்ராயணத்துக்கும் இடையில் வருவது புரட்டாசி மகாளய அமாவாசை. தை அமாவாசை, சூரியனின் வடக்கு நோக்கிய பயணமான உத்ராயண காலத்தின் ஆரம்பத்தில் வருவது.

ஆக, சூரியனின் பயண காலத்தை மூன்றாகப் பிரித்து, ஆரம்பம், மத்தி, முடிவு என்று அழகாக பிரித்தனர், நம் முன்னோர். மூன்று வேளையும் அவர்களுக்கு உணவளிக்கப் படுகிறது. நாம் தினமும் மூன்று வேளை உணவு உண்பதன் தத்துவம் கூட இதுவே.

அமாவாசையன்று கடல், மேல் நோக்கி எழும் என்பதால், கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் உத்தமம். இதனால் தான் நாடு முழுவதும் இருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் இன்னும் பல கடற்கரைத் தலங்களுக்கு வருகின்றனர், மக்கள்.

நம் கண்களுக்கு தெரியாமல் முனிவர்கள், நதிக்கரைகளுக்கு, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வருவதாக ஐதீகம். அவர்களுடன் இணைந்து நாமும் பக்தி சிரத்தையுடன் தர்ப்பணம் செய்யும்போது, அதன் பலன் அளவிட முடியாததாக உள்ளது.

இதற்காக அதிகம் செலவிட வேண்டாம். கொஞ்சம் எள் எடுத்து, தர்ப்பணம் செய்யுங்கள். அன்று குல தெய்வத்தையும் மனதில் நினைத்து வணங்குங்கள். நம் முன்னோர் நமக்கு நல்லாசி அருளுவர்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us