தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பரின் நல்லெண்ண சேவை!

எங்கள் பகுதியிலுள்ள தாலுகா அலுவலகத்திற்கு அருகில், 'ஜெராக்ஸ்' கடை வைத்துள்ளார், ஓய்வு பெற்ற அரசு அலுவலரான, என் நண்பர். தன் பணிக்காலத்தில், மிகவும் நேர்மையான, கடமை தவறாதவர் என்று, நற்பெயர் பெற்றவர்.

பணி ஓய்வுக்குப் பின், வீட்டில் முடங்கிப் போகாமல், மன உற்சாகத்திற்காகவும், வீட்டு பொருளாதார தேவைக்காகவும், 'ஜெராக்ஸ்' கடை நடத்தி வருகிறார்.

அங்கே, வாடிக்கையாளர்கள் கண்ணில் படும்படி, கடைச் சுவரில், அரசின் பல்வேறு மக்கள் சேவைகளுக்கான மனுக்களை எப்படி அளிப்பது, அவற்றை யாரிடம் அளிப்பது, அந்த மனுக்கள் எத்தனை நாட்களில் பரிசீலிக்கப்பட வேண்டும், பரிசீலனை காலதாமதமானால், யாரிடம் முறையிட வேண்டும் என்றெல்லாம், தெளிவாக நகலெடுத்து, ஒட்டி வைத்துள்ளார்.

அது மட்டுமின்றி, லஞ்சம் கொடுக்காமல், நம் மனுக்களுக்கான தீர்வை பெறுவது எப்படி என்பதையும், லஞ்சம் கேட்டு நிர்பந்தித்தால், நாம் அணுக வேண்டிய அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களையும் விளக்கமாக நகலெடுத்து, ஒட்டி வைத்துள்ளார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதற்கான மேல்முறையீடு என, சகல விபர மாதிரிகளையும் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நண்பரின் நல்லெண்ண சேவை, பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது!

ஆர்.ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம்.

குழந்தைகளின், 'சைக்காலஜி!'

'என் மகள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை. என்னவென்று கேட்டு, கொஞ்சம் கண்டித்து வைங்க...' என்று, நான் ஒருமுறை மகள் படிக்கும், பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் கூறினேன்.

மகள் முன்னிலையிலேயே அவர் என்னிடம், 'அதெல்லாம் கிடையாது. என் மாணவர்கள் அனைவரும் சமர்த்து; சூப்பரா சாப்பிடுவாங்க. நீங்க பொய் சொல்லாதீங்க...' என்று சொல்லி, மகளைப் பார்த்து, 'நீ, சமர்த்து பெண் தானே... நல்லா சாப்பிடுவே தானே... பாரு உங்க அம்மா, பொய் சொல்றாங்க...' என்றார்.

'ஆமாம் மிஸ், நல்லா சாப்பிடுவேன்...' என்றாள், என் மகள்.

மகளை வகுப்பறைக்கு அனுப்பிய பின், என்னிடம், 'தப்பா எடுத்துக்காதீங்க. இது, குழந்தைகளின், 'சைக்காலஜி!' சாப்பிடலைன்னு கண்டித்து, அதட்டினால், குழந்தைகள் சாப்பிடாது. அவர்களிடம், 'பாசிட்டி'வா சொன்னால், மிஸ் நம்மளிடம் நம்பிக்கை வைத்திருக்காங்க என்று, நிஜமாகவே சாப்பிட ஆரம்பித்து விடுவர்.

'அப்படியே சாப்பிட அடம்பிடித்தாலும், 'உங்க மிஸ், உன்னைப் பற்றி நல்லவிதமா சொன்னாங்க. நீ, என்னடான்னா சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கறே...' என்று சொல்லிப் பாருங்கள். நல்லா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க...' என்றார்.

அவர் சொன்னபடி தான் நடந்தது. அடுத்த நாளிலிருந்து சமர்த்தாக சாப்பிட ஆரம்பித்தாள், என் மகள். குழந்தைகளை கண்டிப்பதை விட்டு, 'சைக்காலஜி' தெரிந்த அந்த தலைமை ஆசிரியை, நிஜமாகவே பாராட்டுகுரியவர் தான்.

- எம். அனீஸ் பாத்திமா, புதுக்கோட்டை.

ஹிந்தி கற்பது அவசியம்!

நண்பரின் மகன், தனியார் பள்ளியில் பயின்றவன். ஆங்கில மொழி பாடத்துடன், ஹிந்தியும் கற்பிக்கும் பள்ளி அது. நண்பருக்கு, ஹிந்தி தெரியாததால், வேண்டா வெறுப்பாய் தன் மகனை ஹிந்தி பயிற்றுவிக்க, டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார்.

'ஹிந்தி பாடம், நமக்கு தேவையில்லாத ஒன்று...' என, புலம்பியபடி இருந்தார்.

ஆனால், அவரது மகன், ஹிந்தி பாடத்தை நன்கு கற்று, தேர்வுகளில் வெற்றி பெற்று, 'ஹிந்தி பண்டிட்' என்ற தகுதியும் பெற்றான்.

கல்லுாரி முடித்ததும், அவனுக்கு பன்மொழி தெரிந்திருந்த தகுதியால், பல நிறுவனங்களும், பணிக்கு அழைத்தன. ஆனால், அவன் பெற்ற, ஹிந்தி பண்டிட் தகுதியால், வீட்டிலேயே, 'டியூஷன் சென்டர்' அமைத்து, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, ஹிந்தி பயிற்சி பள்ளியை திறம்பட நடத்தி, பணம் ஈட்டி வருகிறான்.

தன் மகனுக்கு கிடைத்த வாய்ப்பை கண்டு, தற்போது, நண்பனும் ஹிந்தி கற்க துவங்கி விட்டார். எனவே, ஹிந்தி மொழியையும் நாம் கற்றுக்கொள்வது, அவசியமே!

எம்.பி.தினேஷ், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us