PUBLISHED ON : ஜூலை 24, 2022

திக்குவாயா...
இனி இல்லை பிரச்னை!
மதுரைக்கு, 30 கி.மீ., துாரத்தில் உள்ளே பாண்டியராஜபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பாலசுப்ரமணியம். அவர் கூறுகிறார்:
கிராமத்தில் அனேகம் பெருசுகளுக்கு, நான் தான் பொழுதுபோக்கு. 10 பேர் சுற்றி உட்கார்ந்து, சிறிய பையனான என்னை கூப்பிட்டு ஏதாவது கேட்பர். நான் பயந்து திக்கித்திக்கி பேசினால், அதை ரசித்து சிரிப்பர். வீட்டிற்கு சென்றதும் தனியே உட்கார்ந்து அழுவேன்.
திக்குவாய்க்கு, 95 சதவீதம், பரம்பரை தான் காரணம் என்று கூறினர். என் தாத்தாவிற்கு முன், யாருக்கோ இருந்திருக்கிறது.
எங்க அத்தையும் திக்குவாய். அத்தைக்கு பிறகு எனக்கும் வந்திருக்கிறது. வகுப்பறையில், ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால், எனக்கு சரியான பதில் தெரியும்; ஆனாலும், சொல்ல முடியாது; மாணவர்கள் சிரிப்பர்.
பொள்ளாச்சியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில், 'டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' படித்தேன். ஒவ்வொரு வகுப்பிற்கும், 'அட்டன்டண்ஸ்' எடுப்பர். என், பெயரை கூப்பிடும்போது, என்னால் பதில் சொல்ல முடியாது, தலைகுனிந்து நிற்பேன்; அனைவரும் சிரிப்பர்.
பொருளாதார சூழ்நிலையை மீறி, வெறி பிடித்தவன் போல பலவகை வைத்தியங்கள் எடுத்தும் பயனில்லை.
'மதுரா சுகர்ஸ்' நிறுவனத்தில் வேலை செய்து வந்தார், பெரியப்பா. படிப்பு முடிந்ததும், அவர் சிபாரிசில், நேர்முகத் தேர்வின்றி அங்கு எனக்கு வேலை கிடைத்தது.
திக்குவாயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று, 1986ல், ஒரு பத்திரிகையில் கட்டுரை வெளிவந்திருந்தது. அதை படித்ததும், பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் எழுதினேன்.
'பி.பி.சி., கொடுத்த கட்டுரை அது; அவர்களைக் கேட்டால் மற்ற தகவல் தெரியும்...' என்று, அந்த ஆசிரியர் பதில் எழுதியிருந்தார்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ பெல் என்ற இன்ஜினியர், சொந்த முயற்சியால் தன்னை குணப்படுத்தி கொண்டவர். என்னைப் பற்றியும், என் குறைகள் பற்றியும் அவருக்கு விளக்கமாக எழுதி உதவுமாறு கேட்டேன்.
'சிகிச்சை பெற, 20 மாதங்கள் வரை, 'அப்பாயின்மென்ட்' இல்லை; ஏற்கனவே, 'புக்கிங்' ஆகிவிட்டது. 1988 செப்டம்பரில் புதிய, 'பேட்சில்' பதிவு செய்து கொண்டால் நல்லது...' என்று பதில் எழுதினார்.
'சரி...' என்று அவருக்கு பதில் கடிதம் எழுதிப் போட்டேன்.
பல சிரமங்களுக்கு இடையே லண்டன் புறப்பட்டேன்.
விமானத்தின் உள்பக்கம் எப்படி இருக்கும் என்று கூட, எனக்கு தெரியாது. லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கினேன். வழி கேட்டு பாதாள ரயிலில் பயணம் செய்து, பி.பி.சி., நிலையத்துக்கு சென்றேன். அங்கு, தமிழ் பிரிவில் பணிபுரியும் ஆனந்தி சூரியபிரசாத் என்பவர், மிகவும் உதவியாக இருந்தார்.
'மனிதனின் உள் மனதில் தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். நமக்கு பேச்சு வராது என்ற எண்ணம், பயம் தானே போய்விடும்...' இதுதான், ஆண்ட்ரு அளித்த சிகிச்சையின் மையக்கருத்து. தினமும், 15 சதவீதம் முன்னேற்றம் தெரிந்தது.
என்னால் நம்ப முடியவில்லை; ஆறு நாட்களுக்குள் நான் தெளிவாக பேசினேன். ஒரே, 'த்ரில்'லாக இருந்தது. தொலைபேசியை பார்த்து பயந்து, வாழ்வில் ஒரு நாளாவது பேசுவேனா என்று பயந்த நான், ஆனந்தி சூரியபிரசாத்துடன் போனில் பேசினேன்; பாதி பேசும்போதே மகிழ்ச்சியில் அழுது விட்டேன்.
இந்தியாவிலிருந்து, தனியாக இங்கு வந்து, முழுமையாக குணமடைந்த ஒரு இந்தியனாக, நான் பட்ட கஷ்டங்களை, பி.பி.சி.,க்கு பேட்டி அளித்தேன்.
'பி.பி.சி., தமிழோசை' நிகழ்ச்சியில், சங்கரமூர்த்தி என்பவர், பேட்டி எடுத்தார். அந்த பேட்டி, ஏழு நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்டது. உலகமெங்கும் என் குரல் கேட்டு இருக்கும் என்பதை, என்னால் நம்ப முடியவில்லை.
லண்டனில் இருந்து திரும்பும்போது, ஒரு பெரிய குறையை நம்மிடம் இருந்து நீக்கி விட்டோம். இது ஒரு சாதனை, இனி வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது, என்றார்.
ராமாயண ராமர் மற்றும் சீதையுடன் பிரத்யேக சந்திப்பு பற்றி அடுத்த இதழில்...
— தொடரும்
தமிழகத்தில் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆர்.எல்.ரமணி என்ற சீனியர் அட்வகேட் மற்றும் ரஜத் சேர்ந்து, கோயம்புத்துார், சென்னை, திருப்பூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் விருதுநகர் என்ற பல நகரங்களில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாட் வரி பற்றியும், அதன் நுணுக்கங்களையும் விவரித்து, 'தினமலர்' நாளிதழ் சார்பில் கூட்டங்கள் நடத்தினர்.
அறிமுகப்படுத்தும் ஒருவரி திட்டத்தை மக்களிடையே விளக்குவது, அரசு செய்ய வேண்டிய பணி. மக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, 'தினமலர்' நாளிதழ், இந்த முயற்சியை மேற்கொண்டது. விளக்கக் கூட்டங்களில் வாட் வரியைப் பற்றி விளக்கங்கள் அளித்து, வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு அங்கேயே பதிலளித்தனர்.
தொடர்ந்து, 10 வாரங்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு, ரஜத் மற்றும் சீனியர் அட்வகேட் ரமணி இருவரும், 'தினமலர்' ஞாயிறு பதிப்பில் விளக்கங்கள் அளித்தனர்.
எஸ். ரஜத்
