PUBLISHED ON : நவ 12, 2017

ஆன்மிக பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர், ஜபல்பூர் நாகராஜ சர்மா!
ஜோதிர்லிங்க தரிசனங்கள், 12; அட்சர சக்தி பீடங்கள், 51; அதிசய ஆலயங்கள்,
அருள் தரும் அஷ்ட விநாயகர், நதி மூலங்கள், கதம்ப வனம் மற்றும் ஆன்மிக அலைகள் என, ஏழு அற்புதமான ஆன்மிக புத்தகங்களை எழுதியவர், ஜபல்பூர் நாகராஜ சர்மா.
இந்த புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள கோவில்கள் அனைத்திற்கும், நேரில் போய் தங்கியிருந்து, விவரம் சேகரித்து, தேவையான படங்கள் இணைத்து எழுதியுள்ளார்.
மேலும், பக்தர்கள் எவ்வாறு அங்கு போய் தரிசனம் பெற்று திரும்புவது என்பது பற்றி, எளிய முறையில் சொல்லும் புத்தகங்கள் தான் இவை!
அதிலும், '51 அட்சர சக்தி பீடங்கள்' என்ற புத்தகம், ஆன்மிகவாதிகள் பலரது உள்ளத்திலும், இல்லத்திலும் வீற்றிருக்கும் அற்புதமான புத்தகம்.
கடந்த, 1927ல் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், படிக்கும் காலத்தில் சுதந்திர வேட்கை காரணமாக, மதுக்கடைகளை எதிர்த்தும், எரித்தும் கசையடி பெற்றவர். அப்போது, அவர் எழுதிய வீரியமிக்க கவிதைகள், பத்திரிகைகளில் வெளியாயின.
படித்து முடித்து, மத்திய பிரதேச மாநிலத்தில், மின் பொறியாளராக பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகள் வட மாநிலத்தில் இருந்ததன் காரணமாக, இவரது பெயருடன், ஜபல்பூரும் ஒட்டிக் கொண்டது.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அங்குள்ள பல கோவில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை, தமிழக பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி அனுப்ப, அவை வெளியாகி, வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி, இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, பின் புத்தகங்களாக வந்து, வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சி மகாபெரியவர் அருளால், ஸ்ரீ ஆதிசங்கரரின் குருவான, கோவிந்த் பகவத் பாதர் இருந்த குகையை, ஏழு ஆண்டு தேடலுக்கு பின் கண்டறிந்து, 79ல் உலகிற்கு அறிமுகம் செய்தார். இவரது சாதனைகளில் இதுவும் ஒன்று. 2,500 ஆண்டுகள் பழமையான நர்மதா நதிக்கரை அருகில் ஆதிசங்கரர் துறவறம் பெற்ற இந்த குகையை வந்து பார்த்த அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், குகையை கண்டறிந்த இவரை, தன் மாளிகைக்கு வரவழைத்து, கவுரவித்தார்.
பணி ஓய்வுக்கு பின், தன் பிள்ளைகள் இருக்கும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களில், தற்போது மாறி மாறி இருந்து வரும் நாகராஜ சர்மா, எழுத்துப் பணியில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.
தேடி வந்து விரும்பி கேட்பவர்களுக்கு எழுதிக் கொடுக்கிறார். இன்று போல இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஆன்மிகத்திற்கான தன் சேவையை இவர் தொடர வேண்டும்!
தொடர்புக்கு: 044 - 2474 0353
எல்.முருகராஜ்

