
கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
சிருஷ்டிகளின் சிகரங்கள்
இரண்டு...
இந்த
இரண்டையும் நேசிக்காத
இதயங்கள் இருக்க முடியாது!
அவை -
பிறவியின் மதிப்பை
பிரதிபலிக்கும் அடையாளங்கள்
இணைப்பையும், பிணைப்பையும்
ஏற்படுத்தும் உறவுப் பாலங்கள்!
அளவாய் இருக்கையில்
ஆனந்தக் களிப்பையும்
அதிகமாகையில்
அச்சத்தில்
தவிப்பையும் தருபவை!
இரண்டையும்
ஒற்றை நாமத்தாலேயே
உலகம் அழைக்கிறது!
குழந்தையும், பணமும்
'செல்வம்' என்று தானே
கொண்டாடப்படுகின்றன!
இவை இல்லாதிருப்போரின்
இதய வலி
சொல்லில் விவரிக்க
முடியாத சோகமானது!
தக்கார் தகவிலார் என்பது
எச்சத்தால் காணப்படுவது
வாழ்வின், 'உச்சமாகவும்'
வாழ்ந்ததன், 'எச்சமாகவும்'
அமையும் அடையாளங்கள்!
இவை இல்லாதவர்களை
உலகம் அலட்சியப்படுத்துகிறது
இருப்பவர்களோ
உலகை அலட்சியப்படுத்துகின்றனர்!
இந்த நிலை மாற -
கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்
காசு, பணத்தை மட்டுமல்ல
கடவுள் கொடையான
குழந்தைகளையும்!
—ஆர்.முரளி, ஸ்ரீவில்லிபுத்துார்.

