PUBLISHED ON : அக் 03, 2010

பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள எந்த வலியையும் பொறுத்துக் கொள்வர் போலிருக்கு. மூக்கில் துவாரம் போட்டு மூக்குத்தி, காதில் துவாரம் போட்டு கம்மல் என அலங்கரித்துக் கொள்வது வழக்கம்தான். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு அழகி, தன் முகம் முழுவதும் குத்தி வித, விதமான நகைகளை மாட்டியுள்ளார்.
பிரபலமான இந்த அழகியின் பெயர் பெட் பர்ன்ஸ்; புகழ் பெற்ற பாடகி. சமீபத்தில், லண்டன் நகரில் நடந்த, 'பேஷன் ÷ஷா' ஒன்றில், தன் கணவர் மைக்கேல் சிம்சன் என்பவருடன் கலந்து கொண்டார். அப்போது எல்லாரது பார்வையும் பர்ன்ஸ் மீதுதான் விழுந்தது. காரணம், அவரது முகம்தான். இவர், தன் முகத்தில், கண் புருவத்தின் மீதும், நெற்றியிலும், கன்னங்களிலும் துவாரம் போட்டு, விதவிதமான நகைகளை அணிந்திருந்தார். பர்ன்ஸ் வயது 51. முதலில் லின் கார்லெட் என்பவரை திருமணம் செய்தார். 2006ல் அவரை விவாகரத்து செய்தார். கடந்த 2007ல் இவர், மைக்கேலை திருமணம் செய்தார். பத்து மாதங்களுக்குப் பின்னர் இருவரும் பிரிந்தனர்.சமீபத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்தனர்.
பர்ன்ஸ் 2000 முதல் 2004ம் ஆண்டு வரை பல முறை அழகூட்டும் அறுவை சிகிச்சைகளை செய்தார். ஆனால், அந்த அறுவை சிகிச்சைகள் அவர் எதிர்பார்த்த அளவு அழகை கூட்டவில்லை. உடனே, டாக்டர் மவுரிஸியோ வில் என்பவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். பர்ன்ஸ்க்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பவுன்ட் ( மூன்று கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆண்டுதான் இந்த பணத்தை பெற்றார் பர்ன்ஸ். இப்படி பல வழிகளிலும் விவகாரமான பர்ன்ஸ், இப்போது தன் முகத்தை மேலும் விகாரமாக்கியுள்ளார். முகத்தில் பல இடங்களிலும் ஓட்டை போட்டு நகை போடும் பழக்கம், நம்ம ஊர் பெண்களுக்கும் பரவாமல் இருந்தால் சரிதான்.
***
