sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இல்லறம் அது நல்லறம்!

/

இல்லறம் அது நல்லறம்!

இல்லறம் அது நல்லறம்!

இல்லறம் அது நல்லறம்!


PUBLISHED ON : ஜன 31, 2021

Google News

PUBLISHED ON : ஜன 31, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவாதியையும், சிவாவையும் ஏறிட்டாள், வக்கீல் சரோஜினி.

''மிஸ்டர், நீங்களே சொல்லுங்க.''

''எங்களுக்கு திருமணமாகி இன்னியோட ஒரு வருஷம், ஆறு மாசம், எட்டு நாள். இன்னும் சரியா சொல்லணும்னா, 10 மணி நேரம் ஆகுது, மேடம். ஆனா, இதுவரைக்கும் நான், ஒரு மணி நேரம் கூட நிம்மதியா, சந்தோஷமா இருந்ததில்ல.

''வெளில கொஞ்சம் நடிச்சிருக்கேன். அஜித் சொன்ன மாதிரி, எவ்வளவு நாள் நடிக்க முடியும்... அதனால, நாங்க விவாகரத்து பெற முடிவு பண்ணிட்டோம். அப்புறம் ஒரு ஜோக் மேடம்... இந்த ஒரு விஷயத்துல தான், நாங்க ஒத்து போயிருக்கோம்.

''அதாவது, தனித்தனியா வக்கீல் வேண்டாம்ன்னு, உங்ககிட்ட வந்திருக்கோம். ப்ளீஸ் மேடம்... புத்திமதி கூறாம, எங்க மனுவை பதிவு செய்து, விவாகரத்து வாங்கி கொடுக்கணும்,'' என்றான், சிவா.

சிரித்தாள், சரோஜினி.

''நல்லா பேசறீங்க, சிவா. ஆனா, காரணம் தெரியலியே?''

''ஐயோ மேடம்... உலகத்துல இல்லாத எந்த பெரிய காரணமும் கிடையாது. இரண்டு பேருக்குமே புரிதல் இல்லை. ஆகவேண்டியதை பாருங்க, மேடம்,'' கை கூப்பினான், சிவா.

சுவாதியிடம், ''நீங்களாவது காரணத்த சொல்வீங்களா, இல்லை, சிவா மாதிரி தானா?'' என்றாள், சரோஜினி.

''ஓ.கே., மேடம்... மேலோட்டமா சொல்றேன். நான், சிவாங்குற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரணும்கிறேன். ஆனா அவரு, திருமண வாழ்க்கை ஒரு பகுதின்னு பிடிவாதமா இருக்காரு... ஆளுக்கொரு எண்ணம்... அதனால, சேர்ந்திருக்க வாய்ப்பில்லை,'' என்றாள்.

சில நொடிகள் யோசித்தாள், சரோஜினி.

''மிஸ்டர் சிவா, இது புத்திமதி இல்ல... இந்த பிரிவால பல பேர், வருத்தப்படுவாங்க... அது உங்களுக்கு சரியா படுதா?''

''மேடம்... இவ்வளவு நாள், வருத்தப்பட வைக்காம இருந்தத நெனச்சு சந்தோஷம்.''

''மத்தவங்கள விட, என்னோட நிம்மதி, எதிர்காலம் எனக்கு முக்கியம் மேடம்,'' என்றாள், சுவாதி.

''எனக்கென்னவோ நீங்க, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கிட்டு இருக்கலாம்ன்னு தோணுது. இது, என்னோட ஆசை... அதனால, நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். சரி, நான் ரெண்டு விண்ணப்பம் தர்றேன். கையெழுத்து போட்டு, நாளைக்கு ஐகோர்ட் பார்ல, அறை எண், 278ல வந்து, என்னை பாருங்க,'' என்ற சரோஜினி, இரண்டு விண்ணப்பங்களை அவர்களிடம் கொடுத்தாள்.

''ஏன் மேடம்... இப்பவே, கையெழுத்தை போட்டுடறோமே,'' என்றாள், சுவாதி.

''இல்ல, நாளைக்கு எடுத்து வாங்க.''

சரோஜினி சொல்ல, இருவரும் விடைபெற்றனர்.

வெளியே வந்ததும், ''வந்ததுக்கு தேங்க்ஸ்,'' என்றான், சிவா.

அவனை பார்க்காமலேயே தெருவில் போன ஆட்டோவை கை தட்டி அழைத்தாள், சுவாதி.

'என்ன திமிர்...' என, நினைத்த சிவா, 'பல்சரில்' ஏறி, 'பீச்'சுக்கு விரைந்தான்.

சுவாதியின் ஆட்டோ, அவள் தோழி வினிதாவின், 'லேடீஸ் ஹாஸ்டல்' நோக்கி சென்றது.

விஷயம் அறிந்து, உரிமையாக அறிவுரை தந்தாள், வினிதா.

''ஏண்டி... விவாகரத்து ஆகட்டும்; அப்புறம் இங்க வரலாம். அதுவரைக்கும், நீ, உன் வீட்ல இரு... அதுக்கு உனக்கு உரிமை இருக்குடி.''

''அடி போடி இவளே... அந்த உரிமை தான் வேண்டாம்ன்னு, வக்கீலைப் பார்த்துட்டு வர்றேன்... விவாகரத்து கிடைக்க நாளானாலும், மனசளவுல பிரிஞ்சாச்சு,'' வெறுப்பாக சொன்னாள், சுவாதி.

''ஊர்ல இருக்குற உன் அப்பா - அம்மாவுக்கு, இதுவரைக்கும் இந்த விஷயம் தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் தெரியாம இருக்கட்டுமே... நானே வேற ஹாஸ்டலுக்கு போகணும்ன்னு நெனச்சுகிட்டு இருக்கேன். அதுவரைக்கும் நீ, உன் வீட்டிற்கு தாராளமா போகலாமே... ப்ளீஸ்,'' என்று கெஞ்சினாள், வினிதா.

''சரி,'' என்று, தன் வீட்டிற்கு சென்றாள், சுவாதி.

இரவு மணி, 9:00 - கதவை திறந்த சிவா, கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தான்.

உள்ளே வந்தவள், ''சிவா... இனிமே நாம தனி தான்... நான் இங்க, தங்க மட்டும்தான் செய்வேன்... அதுவும், சட்டப்படி விவாகரத்து கிடைக்கிற வரைக்கும்... இது, உன் வீடு. அதனால, நான் பணம் கொடுப்பேன்...'' என்று சொல்லி, தான் வாங்கி வந்த, 'பார்சலை' பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான், சிவா.

''சரி... நீ, 'பிரேக்கிங் நியூஸ்' பார்க்கல... நீயே கேளு...'' என்று, 'டிவி'யின் சத்தத்தை அதிகரித்தான்.

'கொரோனா தொற்று, சமூக பரவலாக மாறாதிருக்க, திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது, மத்திய அரசு. இன்றிரவு, 10:00 மணி முதல், 30 நாட்களுக்கு தொடரும்... ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும்.

'கடைகள், அலுவலகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லுாரிகள், நீதிமன்றங்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை இயங்காது. மின்சாரம், பால், மருத்துவமனைகள் மட்டும் மிக மிக அவசியத்தின் படி இயங்கும். பொதுமக்கள், சாலைகளில் திரிவது, குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்...' என்றது, 'டிவி' செய்தி.

'என்ன இது... சே, எங்கு செல்வது... இனி, சிவா முகத்தில் விழிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதற்கு, இடி விழுந்தது போலல்லவா இருக்கிறது...' கையை பிசைந்தபடி யோசித்தாள்.

குழப்பத்துடன் சமையலறைக்கு சென்றான், சிவா.

ஏதும் இல்லை.

''இங்க பாரு... இப்ப வெளியில டிபன் கூட கிடைக்காது. மீதி இருந்தா கொஞ்சம் கொடு... இல்லேன்னா பரவாயில்லை,'' என்றான்.

'சரி... இரண்டு இட்லி கொடுத்தால் குறைந்தா போய் விடுவோம்...' என்று, மீதியை சுருட்டி வைத்து, சிவாவிடம் கை காட்டினாள்.

பிறகு, இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வெவ்வேறு அறைகளில் துாங்கச் சென்றனர்.

மறுநாள் காலை, 7:00 மணி -

சுவாதி கண் விழித்தபோது, டீயின் மனம் அவள் நாசியை துளைத்தது. கட்டில் அருகில் டீபாயில், சுடச்சுட காத்திருந்தது; ஆசையாக பருகினாள்.

சிவா தான் தயாரித்திருப்பான். ஆனால், அவனுக்கு இது பிடிக்காதே... 'என்னது பல் விலக்காம இப்படி இருக்கறதா நாகரிகம்... வியாதி தான் வரும்...' என்று, எரிந்தல்லவா விழுவான்.

டீ குடித்த பின், ஹாலுக்கு வந்தாள்.

டீ கப்பை காட்டி, ''என்ன இது?'' என்றாள், சுவாதி.

''உட்கார் சொல்றேன்.''

''தோ பாரு... இந்த, 'சிச்சுவேஷன்' எல்லாருக்கும் புதுசு... 'ஹவுஸ் அரெஸ்ட்' மாதிரி இதுல நாம மாட்டிக்கிட்டோம்... ஏற்கனவே நமக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. நாம ஒருத்தர ஒருத்தர் அடிச்சுக்கிட்டு, கட்டிப்புரண்டு ரொம்ப, 'ரப்பிஷா' நடந்திருக்கோம்...

''இதுல, இத மேலும் மேலும், 'டெவலப்' பண்ண வேண்டாம்ன்னு, முடிவு செஞ்சிருக்கேன். ஆமாம், நான் எப்படி இருக்கணும்ன்னு, நீ சொல்லியிருந்தியோ, அதே மாதிரி இருக்க முயற்சி செய்யப் போறேன். இது, சமாதானம் இல்ல... இந்த, 30 நாளும் நிம்மதியாக போக...

''அதுக்காக, நான் விரும்பின மாதிரி நீ நடந்துக்கணும்ன்னு, கேட்க மாட்டேன். இத்தனை நாள்ல, என் மனசு உடைஞ்சு போச்சு. அது ஒட்டாது. அதனால, நீ பழைய மாதிரி எப்படி வேணும்னாலும் இரு. நான் ஒரு சவாலா இருந்து பார்க்க போறேன்,'' என்றான், சிவா.

புரியாமல் பார்த்தாள், சுவாதி.

'என்ன சொல்கிறான்... ஒரு மாதம் மட்டும் நடிக்க போகிறானா... சரி, இவனை போலவே எனக்கும்தானே மனசு விட்டுப் போயிடுச்சு... இந்த ஒரு மாதம், அவனே இறங்கி வந்து, பணிவிடை செய்வதை ஏன் தடுக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டாள்.

''சிவா... உன் பேச்சுலயும் ஒரு, 'பாயின்ட்' இருக்கு... இதுக்கு ஒத்துக்கறேன்... மனுஷனோட பிறவி குணம் மாறாது,'' என்ற சுவாதி, தன் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை சிவாவிடம் கொடுத்தாள். விவாகரத்தில் தான் பிடிவாதமாக இருப்பதாக, காட்டிக் கொண்டாள்.

'ஏன், ஆம்பள சமைக்கக் கூடாதா...' பழைய நாட்களின் கேள்விக்கு பதிலாக, சமையலறைக்கு சென்றான், சிவா.

டைனிங் டேபிளில் இருந்த ரசத்தை சாப்பிட்ட சுவாதி, ''உப்பு அதிகமா தெரிஞ்சா, கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழியணும்... சரியாயிடும்,'' என்றாள்.

டேபிளை சுத்தம் செய்த சிவாவை கொஞ்சம் புதிராக பார்த்தாள்.

'ஆம்பள, சில வேலைகளைத்தான் செய்யணும். அதனால தான் கடவுளே... வித்தியாசமா படைச்சு வெச்சிருக்கான்...' என்று சொன்னவனா இவன்.

துணிகளை, 'வாஷிங்மிஷினில்' போட்டு, 'சர்ப் டப்பா'வை கவிழ்த்தான்.

''ஐயோ... நாலு துணிக்கு இவ்வளவா?'' ஓடி வந்து தடுத்தாள், சுவாதி.

''எல்லாம் பட்டுதானே தெரிஞ்சுக்கணும்,'' என்றபடியே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், சிவா.

இரவு, சப்பாத்திக்கு மாவை பிசைய ஆரம்பித்தான்.

''ரொம்ப தண்ணியா இருக்கு... என்ன இது கோதுமை கஞ்சியா போடப் போற நகரு,'' என்றாள் சுவாதி.

சப்பாத்தியை தயார் செய்தாள். சிவாவிற்கு, குருமா வேண்டும். சுவாதிக்கு, தேங்காய் சட்னி தான் பிடிக்கும். ஆச்சரியம், டேபிளில் குருமா இருந்தது.

''ரொம்ப ஆச்சரியப்படாத... நான் மாற மாட்டேன்... நீ, எங்க வீட்ட பத்தி, என் கேரக்டர பத்தி பேசினது, மறக்க கூடியதா என்ன?'' கோபமாக கேட்டாள், சுவாதி.

பதில் பேசாமல் நகர்ந்தான், சிவா. 'அங்கிருந்தால் முன்பு போல் பதிலுக்கு பேச வேண்டியிருக்கும். அவள் சொன்னது போல், பிறவி குணம் மாறாது தான்... இந்த ஒரு மாதம் அமைதியாக செல்ல, பணிந்து போவது தான் புத்திசாலித்தனம்...' என, மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.

சிவா குளிக்கும்போது, அவனுக்கு வந்த போனை எடுத்து பார்த்தாள், சுவாதி.

'ஆன்ட்டி...' என்ற பெயரை பார்த்ததும், கோபம் வந்தது.

சின்ன வயதில் துாக்கி வளர்த்தாளாம். அந்த உரிமையில் போன் பண்ணியே கொல்லுவாள்.

குளித்து முடித்து, போனில் அழைத்தது யார் என்று பார்த்தான், சிவா. ஆனால், எதுவும் பேசவில்லை.

கவனித்தாள், சுவாதி.

'மரியாதை, நன்றி என்று பதறுபவன்... ஏன் அமைதியாக இருக்கிறான்... எனக்காகவா...'

உடனே, தன் மொபைல் போனில், அழைப்பு வர, எடுத்தாள், சுவாதி.

''ஏம்மா... சிவா பேசல... அவன் போன் என்னாச்சு...'' என்றாள், ஒன்று விட்ட அத்தை.

எதுவும் பேசாமல் சிவாவிடம் கொடுத்தாள், சுவாதி.

''உனக்கு பிடிக்காதே.''

''இல்ல பேசுங்க,'' என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்தாள்.

'பிரியப் போகிறோம் என்றவுடன், சிவா, அவன் அத்தையுடன் பேசுவது, என்னை ஏன் பாதிக்கவில்லை...' என்று யோசித்தாள், சுவாதி. விடை தெரியவில்லை.

எதிலும் அதிக பற்று வைத்தால் துன்பம்தானோ?

அன்று வெள்ளிக்கிழமை -

காலையில், வியர்க்க வியர்க்க வீட்டை, துணியால் துடைத்தான், சிவா.

''ஏன், 'மாப்' இருக்கே?'' என்றாள், சுவாதி.

''ப்ச்... அதுல சுத்தமா துாசி போகாது,'' என்றவன், தொடர்ந்து துடைத்தான்.

'ஏண்டி... வேலைக்காரி தான் துடைக்கணுமா... நீ துடைச்சா ஆகாதா...' முன்பு கத்திய சிவா, ஞாபகத்திற்கு வந்தான்.

அன்றிரவு சாப்பிடவில்லை, சிவா. அவன் அறைக்கு சென்றாள், சுவாதி. சிறிது நேரத்திற்கு முன், அவளது மொபைல் போன் கை தவறி விழுந்து உடைந்தது. அது தொடர்பாக கேட்கலாம் என்று சிவாவை தேடினாள். கட்டிலில் ஓரமாக படுத்திருந்தான்.

''மணி, 8:00 ஆகிறது,'' பொதுவாக சொன்னாள்.

பதில் இல்லை.

சிவா முனகுவது கேட்க, அருகே சென்றாள். அனல் அடித்தது.

''ஐயோ...'' பதறியபடி, தனக்கு தெரிந்த டாக்டரை, சிவா போனில் அழைத்தாள், சுவாதி.

''பயப்படாதீங்க... இந்த நேரத்துல நான் வர முடியாது. பாதுகாப்பா, நீங்க, 108க்கு போன் பண்ணிடுங்க... அவங்க நேரா, 'கொரோனா வார்டு'க்கு அழைத்துப் போயிடுவாங்க... முதல்ல, 'பாராசிட்டமால்' மாத்திரை கொடுங்க, கஞ்சி கொடுங்க,'' அறிவுறுத்தினார், டாக்டர்.

மாத்திரையை தேடி எடுத்தாள். கஞ்சி தயாரித்தாள். வலுக்கட்டாயமாக சிவாவிற்கு கொடுத்தாள். ஆனால், 108க்கு போன் செய்யவில்லை.

'கடவுளே... ஒருவேளை, 'கொரோனா'வாக இருந்தால்...' பயத்தில் சரியாக துாங்கவில்லை. விடியற்காலையில் அசந்து துாங்கினாள், சுவாதி.

விடிந்ததும் அருகில், டீ கப்; எழுந்து, சிவாவை தேடினாள்.

சுறுசுறுப்பாக, 'ஷேவ்' செய்து கொண்டிருந்தான்.

''தேங்க்ஸ்... சாதா காய்ச்சல் தான்.''

''சிவா... ஒரு விஷயம்...''

''சொல்லு.''

''இல்ல... இந்த, 10 நாள், நமக்கு நல்லாதானே போகுது... ஏன் இவ்வளவு நாள் எலியும், பூனையுமா இருந்தோம்?'' என்றாள், சுவாதி.

''இது ஒரு நிர்பந்தம்... வெளியில போக முடியாது. சண்டை போட்டா நிம்மதி இருக்காதுன்னு, நானே என்னை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிறேன். அதனால, ஒருத்தர் அடங்கி போனா ஏது பிரச்னை... இப்படித்தான் பல பேர் வாழ்க்கை நிர்பந்தம் இல்லாமலேயே தொடருது... சில பேர் வாழ்க்கை, 'பிரேக்' ஆயிடுது...

''மேலும், நமக்கு குழந்தையும் இல்ல... அதுவும் ஒரு காரணம்... சரி, எதுக்கு வீண் பேச்சு... இன்னும், 20 நாள், நான் அடங்கியே போறேன். இதோ வந்து குக்கர் வைக்கிறேன்,'' சொன்ன சிவா, தொடர்ந்து தன் வேலையை கவனித்தான்.

'இந்த நிர்பந்தத்தில், சிவா ஒரு தற்காலிக முடிவை கஷ்டப்பட்டு எடுக்கும்போது, நான் ஏன் அதுபோல் நினைக்க கூடாது... அவன் விருப்பம் என்ன... அவனது உறவினர்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அதை ஏன் அவனுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்து, பூர்த்தி செய்யக்கூடாது...

'அவன் வீட்டு விசேஷங்களுக்கு பிடித்தோ, பிடிக்காமலோ சென்றால், என்ன குடியா மூழ்கி விடும்... எனக்கு, கணவன் பணிவிடை செய்ய வேண்டும் என்ற, ஒரு விருப்பம் போல... அவன் வீட்டு மனிதர்களிடம் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லையே...

'ஒரு சோதனை முயற்சியாக, சிவாவின் இந்த மாற்றம், எனக்கு மன நிம்மதி, சந்தோஷம் தருவதை போல... ஏன், நானும் அவனுக்கு தரக்கூடாது...' தொடர்ந்து யோசித்தாள், சுவாதி.

உடனே, அவன் அத்தைக்கு போன் செய்து, 'கொரோனா' முடிந்ததும், வந்து பார்ப்பதாக கூறினாள்.

நம்பாமல் ஆச்சரியப்பட்டான், சிவா.

அடுத்து வந்த நாட்களில் அந்த புதிய உறவு பூத்தது. இருவரும் ஒரே அறையில் உறங்கினர்.

ஆசையாக, மனைவிக்கு சேவை செய்தான், சிவா.

'ஈகோ' இல்லாமல், சுவாதியும், அவன் உறவுகள் பற்றி அளவலாவினாள்.

முடிவாக ஒரு நாளில், விண்ணப்பங்களை, இருவரும் கிழித்து போட்டனர்.

கீதா சீனிவாசன்






      Dinamalar
      Follow us