PUBLISHED ON : மார் 06, 2022

மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தான், ஹரிஷ். மலர் என்ற பெயர் தெரிய, காதில் வைத்து, ''சொல்லு,'' என்றான்.
''என்னத்த சொல்றது, எத்தனை நாளைக்கு தான் நான், அப்பா வீட்டுலேயே இருக்கிறது. வேற வீடு பாருங்க; அந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன். என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது, ரெண்டு மாசமா சொல்றேன். ஆனா, நீங்க புரிஞ்சிக்க மாடேங்கறீங்க,'' என சொல்லி, போனை வைத்து விட்டாள்.
அதற்கு மேல் அவளிடம் பேசி பிரயோஜனமில்லை. புரோக்கரிடம் பேசி, வேறு வீடு பார்க்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான், ஹரிஷ்.
மலர், சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இப்போது இருக்கும் வாடகை வீட்டுக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. வீட்டு உரிமையாளர் கீழேயும், இவர்கள் முதல் மாடியிலும் இருந்தனர். வீட்டு உரிமையாளர் பாபுவுக்கு, மனைவியும், பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உண்டு.
பாபு, நல்லவர். போலீசில் இருந்து ஓய்வு பெற்றவர். வாடகை என்று கேட்டதே இல்லை. இவர்களாக பார்த்து, 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவர். சில நாட்கள், குடித்து விட்டு, தடுமாற்றத்துடன் வரும் பாபு, வண்டியை படியில் ஏற்ற சிரமப்படுவார்.
அப்போது, வண்டியை மேலே ஏற்றி, அவரையும் கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து வருவான், ஹரிஷ்.
'தேங்க்ஸ் பிரதர்...' என்பார்.
அவர் மனைவி லட்சுமி, பாபு வீட்டில் இருந்தால், சாந்த சொரூபியாகவும், அவர் வெளியே சென்று விட்டால், அவர் மீதான கோபத்தை இவர்கள் மீது காட்டுவார்.
'மலர், உன் பாப்பாவை கண்டிக்க மாட்டியா... கேட்டை படார் படாரென அடிக்கிறா... நேத்து கேட்டைத் திறந்து போட்டுட்டா; மாடு உள்ளே வந்து, பூச்செடியை தின்னுட்டு போயிட்டு...' என்பார்.
ஒருநாள், 'நேத்து ஒரு செயின் போட்டுருந்தியே... அது உங்க அப்பா வீட்டுல போட்டதா, சார் வாங்கி போட்டதா?' முகத்தை உற்றுப் பார்த்தபடி கேட்பார்.
'சார் தான்...' என்றதும், ஏக்கம் வெடிக்கும்.
'எங்க வீட்டுக்காரரும் போலீசில் இருந்தவர் தான். பேரு தான் போலீஸ், ஒன்றுக்கும் லாயக்கில்ல...' என்பார்.
அடுத்த அஸ்திரமாக, 'உன் வீட்டுக்காரர், லஞ்சம் கிஞ்சம் வாங்குவாரா...' என்பார்.
'சேச்சே... என்ன பேசுறீங்க... என் வீட்டுக்காரர், ஜென்டில்மேன்...'
'அது எப்படி, பவுன் விற்கிற விலையில் பொண்டாட்டிக்கு டிசைன் டிசைனா வாங்கி போடுறார்? புடவை கூட, ஒரு விழாவுக்கு கட்டினதை மறுபடி நீ கட்டி, நான் பார்த்ததே இல்லையே...' என்பார்.
மற்றொரு நாள், 'தண்ணி ரொம்ப பயன்படுத்தாதே மலர். அதிகமா தண்ணி பயன்படுத்தினால் தரித்திரம் சேரும்...' என்றிருக்கிறார்.
இதையெல்லாம் அலுவலகம் முடிந்து, ஹரிஷ் வந்த பின், அவனிடம் சொல்லி, 'நாம சீக்கிரமா வீடு மாறிடுவோம்...' என்பாள், மலர்.
'அந்த அம்மாவை ஒரு வெகுளியா நினைச்சுக்க... நீ அதிகமா பேச்சு வெச்சுக்காதே...' என்றான். அதன்படி, பேசாமல் இருந்தும் பார்த்தாள்.
சில நாள் கழித்து அந்த அம்மா, 'ஏண்டியம்மா, முகம் கொடுத்து கூட பேச மாட்டேன்ற... நான், 'பென்ஷன்' வாங்குறவர் பொண்டாட்டி. நீ அப்படியா, பணம் கொழிக்கிறவ...' என்றார்.
அதன்பிறகு அந்த அம்மாவை, மலருக்கு சுத்தமாய் பிடிக்காமல் போனது.
இரண்டு மாதங்களுக்கு முன், விடியற்காலையில் நெஞ்சுவலி என்ற பாபுவை, ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்த்தான், ஹரிஷ்.
ஆனால், வழியிலேயே அவர், 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்து விட்டதாக சொன்னார், டாக்டர்.
உடனடியாக அவன் போன் செய்தது, மலருக்கு தான். அவர் இறந்து விட்டதையும், கூட்டமாக கூடி மக்கள் அழுவதை பார்த்தால், குழந்தை பிரியா பயப்படும் என்பதற்காக, உடனே ஆட்டோ பிடித்து, அப்பா வீட்டிற்கு செல்லும்படி கூறி விட்டான்.
டிபார்ட்மென்டில் இருந்தவர் என்பதால், இறப்பிற்கு அவரது நண்பர்கள், கொஞ்சம் உறவினர்கள் மட்டுமே அன்று வந்தனர். அந்த அம்மாவின் நடவடிக்கைகள் உறவினர்களுக்கு பிடிக்காததால், அந்த வீட்டிற்கு அதிகம் வர மாட்டார்கள்.
அவரது ஒரு தம்பி, அக்கா இரண்டு பேர், அவர்களது பையன்கள் உட்பட உறவினர்கள் வந்து பார்த்து, அடக்கம் செய்ததும், போய் விட்டனர்.
அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு, முன் நின்று, வேண்டிய உதவிகள் செய்து முடித்தான், ஹரிஷ். அன்று மாலையே அவனும், மாமனார் வீட்டுக்கு சென்று விட்டான். தினமும் அங்கிருந்து அலுவலகம் போய், இங்கே வந்து பேப்பர் எடுத்து, கொஞ்ச நேரம், 'டிவி' பார்த்து, மீண்டும் மாமனார் வீட்டிற்கு சென்று விடுவான்.
சில நாட்கள், ஹோட்டலில் சாப்பிட்டு இங்கேயே படுத்து விடுவதும் உண்டு. இரண்டு நாட்களாக அவன் இங்கேயே தங்கி விட்டதால், போன் செய்து, வேறு வீடு பார்க்க சொல்கிறாள், மலர்.
உடனே, புரோக்கருக்கு போன் செய்து, ''கொஞ்சம் சீக்கிரம் வீடு பாருங்கள்,'' என்றான்.
ஹோட்டலில் சாப்பிட்டு வரலாம் என, 'டிவி'யை அணைத்து கிளம்பினான். வாசலில் நின்ற அந்த அம்மா, ''சார், நாளைக்கு, 16ம் நாள் காரியம் வச்சிருக்கோம்... படத்திறப்பு, 11:00 மணிக்கு. மலரை அழைச்சிட்டு நீங்களும் வாங்க,'' என்றார்.
''சரிங்க,'' என்று தலையாட்டி, மாமனார் வீட்டிற்கு சென்றான்.
காலையில், மாமனாரும், மாமியும் இருக்கும்போது, நிதானமாய், ''நான் ஆபீசுக்கு விடுப்பு போட்டிருக்கேன், மலர். வா போயிட்டு படத்திறப்பு முடிஞ்சதும், வெளியே வந்துடுவோம். நீ அங்கு சாப்பிடக் கூட வேண்டாம்.
''அந்த அம்மா எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும். நமக்குன்னு ஒரு தரம் இருக்கு. அஞ்சு வருஷம் அங்க இருந்துட்டோம். வீட்டை காலி பண்ண போறோம். இறுதியா அங்கு நடக்கிற விழாவில் கலந்துக்கிறது தான் மரியாதை. 'வீடு இருக்கு'ன்னு வரச்சொல்லி இருக்கான், புரோக்கர். அதையும் பார்த்துட்டு வருவோம்,'' என்றான், ஹரிஷ்.
''ஆமாம் மலர்... மாப்பிள்ளை சொல்றதும் சரிதான். போகாம இருக்கக் கூடாது. செத்த அன்னைக்கும் நீ முன்னாடியே கிளம்பி வந்துட்டே... மறுபடி நீ அந்த அம்மாவை பார்க்க போகலை,'' என்றார், அப்பா.
அரைமனதோடு ஒப்புக் கொண்டாள், மலர்.
முதலில், புரோக்கர் சொன்ன வீட்டைப் பார்க்க சென்றனர், ஹரிஷும், மலரும்.
வீட்டு உரிமையாளர் வசதியானவராக இருந்தார்.
''நாங்க யாரும் வீட்டு பக்கம் வரமாட்டோம். 10ம் தேதிக்குள்ள வாடகையை வங்கி கணக்குல போட்டுருங்க... ரெண்டு மாச, 'அட்வான்ஸ்' கொடுங்க போதும். எப்ப வீடு காலி பண்றீங்களோ, அதுக்கு ஒரு மாசம் முன்ன சொல்லிடுங்க,'' என்றார், வீட்டு உரிமையாளர்.
அவரது பேச்சு இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
''சரிங்க ஐயா,'' என்றாள், மலர்.
அவரிடம் சாவியைப் பெற்று உள்ளே போய் வீட்டை பார்த்தனர். வீடு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வெளியில் வந்து காரில் அமர்ந்திருந்தவரிடம், ''இன்று மாலையே, 'அட்வான்ஸ்' பணத்தோடு உங்கள் வீட்டுக்கு வருகிறேன்,'' என்றான், ஹரிஷ்.
இருவரும் விடைபெற்று, அவர்கள் முன்பு இருந்த வீட்டுக்கு சென்றபோது, படத்திறப்பு முடிந்திருந்தது.
''பந்தி போட்டாச்சு... போய் சாப்பிடுங்கள்,'' என்றார், லட்சுமி அம்மா.
''நான் மேலே போகிறேன். நீங்கள் போய் சாப்பிடுங்கள்,'' என்று, ஹரிஷின் பதிலை எதிர்பார்க்காமல் மாடிக்கு போய் விட்டாள், மலர்.
சாப்பிட்ட பின், மாடிக்கு போனான். 'டிவி' பார்த்தபடி படுத்திருந்தாள், மலர்.
''நான் உப்புமா தயார் பண்ணி சாப்பிடுகிறேன். வெயில் தணிந்து போவோம்,'' என்றாள்.
பெட்டில் படுத்தவுடன் துாங்கி போனான், ஹரிஷ்.
மலர் எழுப்பியபோது, மாலை, 3:00 மணி.
''அவங்க வந்திருக்காங்க,'' என்றாள், மலர்.
''யார்?'' என்றபடி எட்டி பார்த்தான்.
வாசல் படியில் அமர்ந்திருந்தார், லட்சுமி அம்மா.
வெளியே சென்றவனை கண்களால் ஜாடை காட்டி அழைத்தாள், மலர்.
''என்ன?'' என்றபடி உள்ளே போனான்.
''வீடு காலி பண்ண போற விஷயத்தை சொல்லிடுங்க... திடீர்னு சொல்றீங்களேன்னு கேட்பாங்க... எத்தனை மாச வாடகையை வேணும்னாலும், 'அட்வான்சில்' எடுத்துக்கிட்டு பாக்கியை கொடுக்கச் சொல்லுங்க,'' என்றாள்.
அந்த அம்மாவிடம் போய், ''ஏம்மா வாசலிலேயே உட்கார்ந்துட்டீங்க... உள்ளே வாங்க,'' என்றான்.
''இருக்கட்டும் பா,'' என்றார், லட்சுமி அம்மா.
''உங்க பொறுப்பு கூடிடுச்சு... அவர் இருந்து பாப்பாவுக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டு போய் இருந்தார்ன்னா, உங்களுக்கு எவ்வளவோ பாரம் குறைஞ்சிருக்கும்,'' அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்த அம்மா தலையில் அடித்து கதறினார்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
''என்ன இது... தைரியமா இருங்க...'' என்றவாறு, 'பிரிஜ்'ஜை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்து, ''குடிங்க,'' என்றான், ஹரிஷ்.
ஒரு வாய் குடித்து, பாட்டிலை மூடி ஓரமாய் வைத்தவர், ''அவர் இருந்த வரைக்கும் என்னை வெளியுலகம் தெரியாமலேயே வைத்திருந்தார். எல்லாமே அவர் பார்த்துப்பார்ன்னு நானும் இருந்துட்டேன். திடீர்னு அவர் போயிட்டார். எனக்கு உலகமே இப்ப இருட்டா தெரியுது.
''என்னை தாயா நினைச்சு, முன்னாடி நின்னு, என் பொண்ண ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க... இந்த உலகத்துல உங்க இரண்டு பேரையும் தவிர, யாரையுமே எனக்கு தெரியாது.
''வந்த சொந்தம் எல்லாம் விசேஷம் முடிஞ்சதும் கிளம்பிட்டாங்க... நீங்களும் என்னை அனாதையா விட்டுடாதீங்க,'' என்று அவர்களைப் பார்த்து, அந்த அம்மா பெருங்குரலில் கதற, விக்கித்துப் போய் மலரை பார்த்தான், ஹரிஷ்.
அந்த அம்மாவின் அருகில் போய் அமர்ந்து, அவரது தோள்களில் ஆறுதலாய் கை வைத்தாள், மலர்.
தங்க. நாகேந்திரன்
