தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா -

நான், 32 வயது பெண். எனக்கு மூன்று அக்காக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வயது முறையே 35, 38 மற்றும் 40. மாவட்ட நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரிகிறார், கணவர். எனக்கு, 8 மற்றும் 5 வயதில் இரு பெண் குழந்தைகள். வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம்.

கடைசி அக்காவின் கணவர், சொந்தமாய் டாக்சி ஓட்டுகிறார். அவர்களுக்கும், 10 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள். மாமனார் கட்டிய சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

நடு அக்காவின் கணவர், டெய்லர். டெய்லரிங்கும், ஆண்கள் ஆயத்த ஆடையகமும் அடங்கிய, 'ஷோரூம்' வைத்திருக்கிறார். அவர்களுக்கு, 12 வயதில் இரு இரட்டை பெண் குழந்தைகள். இரண்டு சொந்த வீடுகளுடன் வசதியாக வாழ்கின்றனர்.

மூத்த அக்காவின் கணவர், அரசியல் கட்சியின் மாவட்ட செயலர். அவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில், இரு ஆண் குழந்தைகள். பங்களா, நான்கைந்து கார்களுடன் ராஜவாழ்க்கை வாழும் மூத்த அக்கா, பெண்கள் உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியை ஆக உள்ளார்.

'உங்கள் மூவருக்கும் பெண் குழந்தைகள். எனக்கு மட்டும் ஒன்றுக்கு இரண்டாய் ஆண் குழந்தைகள். நான் உங்களை விட அதிஷ்டசாலி. நான் இறைவனால் முழுமையாக ஆசிர்வதிக்கப்பட்டவள்...' என்ற தோரணை, மூத்த அக்காவுக்கு மிதமிஞ்சியிருக்கும்.

கடைசி அக்காவும், நடு அக்காவும் மூத்த அக்காவுக்கு எடுபிடி வேலை பார்ப்பர். நான் மட்டும் மூத்த அக்காவிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன்.

மூன்று அக்காக்களும் என்னை, 'பொறாமை பிடித்தவள், வயித்தெரிச்சல்காரி, புலம்பி' என்றே அழைப்பர். என் கண் பட்டால் எந்த காரியமும் விளங்காது என, என்னை கரித்து கொட்டுவர்.

மூத்த அக்கா, 20 பவுனில் நெக்லஸ் அணிந்திருப்பார். நான் சாதாரணமாக பார்த்தால், 'ரொம்ப பார்க்காதேடி இது கவரிங் நகை...' என்பார்.

நடு அக்காவிடம், 'என் கணவருக்கு சட்டை தைக்க, உன் கணவரை பார்க்க வேண்டும்...' என கூறினால், 'எங்க, 'டெய்லரிங் ஷோரூம்' நஷ்டத்துல ஓடுது. எவ கண்ணு வச்சாளோ, நீ தையல் கூலியை பைசா குறைக்காம குடுத்திடு...' என்பாள்.

எந்த அக்கா வீட்டுக்கும் மதிய நேரத்தில் போனால், சாப்பாட்டு தட்டை எடுத்து முதுகுக்கு பின் ஒளிப்பர். 'இன்னைக்கி கறி சோறெல்லாம் இல்லை. வெறும் ரசம் தான்...' என்பர்.

'பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்கின்றனர்?' என கேட்டால், 'எவ கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... படு மக்குகளா குப்பை கொட்டுதுக...' என, அங்கலாய்ப்பர்.

கடைசி அக்காவுக்கு போன் செய்தால், 'கொரோனா அவுத்து போட்டு ஆடுது. 20 மாசமா என் புருஷன் டாக்சி ஓட்டுறதில் போதுமான வருமானம் இல்லாம தத்தளிக்கிறாரு. பேசாம உன் வீட்டுக்கு நானும், புருஷனும், குழந்தைகளும் வந்திடலாம்ன்னு பாக்றோம். சோறு போடுவதான...' என்பாள்.

மூன்று அக்காக்களும் பேசும் பத்து வார்த்தைகளில் எட்டு வார்த்தை பொய். என் கண் படாமலிருக்க மூவரும் திருஷ்டி கயிறு கட்டியிருக்கின்றனர். வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மை கட்டி தொங்கவிட்டு இருக்கின்றனர். அக்காள்களின் கணவர்களும், குழந்தைகளும் என்னை இளக்காரமாகதான் பார்ப்பர்.

என், 70 வயது அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுவேன். அம்மா எனக்கு ஆறுதல் கூறும் வார்த்தைகளில் குத்திக்காட்டல் ஒளிந்திருக்கும்.

'நாலு பெத்தேன், மூணு ஊரை ஆளுதுக. ஒண்ணு அன்றாடங்காய்ச்சியா இருக்கு. அவங்களை பார்க்க உனக்கு வயித்தெரிச்சலாதான் இருக்கும். நீ அவளுக வீட்டுக்கு அடிக்கடி போகாதே. உன் புருஷனை லஞ்சம் வாங்கி வசதி வாய்ப்பை பெருக்க சொல்...' என்பாள்.

எங்களது, 1.5 சென்ட் இடத்தில், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் எல்.ஐ.சி., மூலம் வீடு கட்டி வருகிறோம். கிரஹபிரவேசத்துக்கு அம்மாவையும், மூணு அக்காள் குடும்பங்களையும் அழைக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். என் முடிவு சரிதானே அம்மா!

-- இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு -

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சகோதர உறவுகளுக்கு இடையே சீனப்பெருஞ்சுவர் எழுப்பிவிடும்.

நீ வெள்ளந்தி பெண். மூத்த சகோதரிகளை பார்த்து நீ கண்ணேறுபடவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உன் சகோதரிகளின் வீடுகளுக்கு அவசியமில்லாமல் போகாதே. குறிப்பாக உணவு உண்ணும் சமயங்களில் போகவே போகாதே. அவர்களிடம் போனில் பேசும்போது பணம், நகை, குழந்தைகள், வசதி வாய்ப்புகள் பற்றி தேவைக்கு அதிகமாக விசாரிக்காதே.

வார்த்தைகளை விகற்பம் தொனிக்காமல் சுயதணிக்கை பண்ணி பேசு. அவர்களிடம் உன் சொந்த பிரச்னைகளை சொல்லவே சொல்லாதே. ஆமை போல் உன் உணர்வுகளை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள். மொத்தத்தில் தாமரை இலை தண்ணீராக நடந்து கொள்.

பொருளாதார ரீதியாய் உயர்ந்து நிற்கும் மகன் அல்லது மகளை தான், அம்மாக்களுக்கு பிடிக்கும். அம்மாவிடம் புலம்புவதை நிறுத்து. அம்மா சொல்கிறாள் என்று, கணவரை, லஞ்சம் எனும் பிச்சை எடுக்க வைக்காதே.

கிரஹப்பிரவேசம் பண்ண போகும் வீட்டை, டப்பாவுக்குள் போட்டு மறைக்க முடியுமா?

உன் மூன்று சகோதரிகளையும், அம்மாவையும் முறைப்படி அழை. நீயும் பொருளாதார நிலையில் சோடை போகவில்லை. உன் வருமானத்திற்கேற்ப நீயும், சொந்த வீடு கட்டியுள்ளாய் என்ற எண்ணத்தை புதுவீட்டு கிரஹபிரவேசம் உன் சகோதரிகளுக்கிடையே ஏற்படுத்தட்டும்.

.

- என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us