PUBLISHED ON : மார் 06, 2022

மதிப்புக்குரியவளே!
பெண்ணே உன்னை நீ மதி
பெறுவாய் என்றும் நிம்மதி
கீழாய் நினைப்போரை மிதி
மாறும் உந்தன் தலைவிதி!
தோலின் நிறம் நேசிக்கும்
தோழர்களை நிராகரி - உன்
உள்ளத்தை வாசிக்கும்
உறவே உனக்கு சரி!
முகநுால் காட்டாது அகம் - அதை
முற்றாக விலக்குவதே சுகம்
பொல்லாதோர் வலை விரிக்கும் களம்
சிக்கினால் சீரழிவே நிஜம்!
உடையழகும், நடையழகும்
உள்ளழகும் காட்ட
உற்றவன் ஒருவனுண்டு
ஊருக்கே காட்டுவதில்
உனக்கேதான் சிக்கலுண்டு!
விளையாட்டாய் பதிவு செய்த
வீடியோவால் விருப்பங்கள்
ஆயிரந்தான் வரக்கூடும்
எல்லாமே துாண்டில் தான்!
சொல்லாலே உனை வளைக்கும்
பொல்லாத போதைதான்
தொல்லைகளை தொடர்ந்து தரும்
வில்லன்களின் வேலை தான்!
அறிவோடு, அளவோடு அணுகாத
'ஆப்' எல்லாம் பொல்லாப்பே
அது தவிர்த்தால் நீ
பெறுவாய் நல் வாய்ப்பே!
நாகரிக உடைக்கில்லை தடை
நளினத்தை வெளிக்காட்டும்
வேண்டாத சிற்றுடைக்கு
கொடுப்போம் விடை!
ஊடக வெளிச்சம்
உன் மேல் படுவது
உயர்ந்தவள் நீயென
உலகிற்கு காட்டவே இருக்கட்டும்!
பெண்ணே உன்னை நீ மதி
பெறுவாய் என்றும் நிம்மதி
கீழாய் நினைப்போரை மிதி
மாறும் உந்தன் தலைவிதி!
ரா. துரைராஜன், புதுச்சேரி
