PUBLISHED ON : மார் 06, 2022

முன்பொரு பிறவியில், பெரும் செல்வந்தராக பிறந்திருந்தார், புத்தர். தர்மம் செய்வதில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். தர்மவானான அவருக்கு அப்போது, 'அவிஷஹ்யர்' என்று, பெயர்.
தர்மத்தில் அவர் தீவிரமாக இருந்தபோது, ஒருநாள் இரவு, அவர் வீட்டிலிருந்த எல்லாவற்றையும் திருடிச் சென்று விட்டனர், திருடர்கள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் விழித்தெழுந்த தர்மவான், பொருட்கள் அனைத்தும் களவாடப் பட்டிருப்பதை கண்டார்.
ஒரு அரிவாளும், கயிற்றாலான ஒரு கூடையும் மட்டுமே இருந்ததை கண்டு, 'இதுவாவது இருக்கிறதே...' என்று மகிழ்ந்தார்.
'இதைக் கொண்டு ஏழைகளுக்கு நம்மாலான தர்மத்தைச் செய்யலாம்...' என்ற எண்ணத்தோடு, காட்டிற்குச் சென்றார்.
அரிவாளால் நிறைய புற்களை வெட்டி, தலையில் சுமந்து நகரத்திற்கு வந்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை, தர்மம் செய்யத் துவங்கினார்.
ஒருநாள், தெய்வீக புருஷன் ஒருவர், தர்மவான் முன் தோன்றி, 'நீங்கள், தர்மம் செய்தே உங்கள் சொத்தைக் கரைத்து விட்டீர்கள். திருடு போனதை விட, தர்மம் செய்தே நீங்கள் கரைத்தது அதிகம்.
'பணக்காரராக இருந்தபோது தர்மம் செய்தீர்கள் சரி, இப்போது தான் எல்லாம் போய் விட்டதே. ஏதோ கிடைக்கும் இந்தக் காசையாவது, உங்களுக்காக வைத்துக் கொள்ளக் கூடாதா...' என்றார்.
'சொர்க்கத்து செல்வம் முழுதையும் கொடுத்தால் கூட, தர்மம் செய்வதில் செலவழிப்பேனே தவிர, எனக்காகச் சேர்த்து வைக்க மாட்டேன்...' என்றார், தர்மவான்.
வந்த தெய்வீக புருஷன் விடவில்லை. தர்மம் செய்வதை தடுக்கவே பார்த்தார்.
'நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தர்மம் செய்வதில் உள்ள ஆனந்தம், வேறு எதிலும் கிடையாது. எனக்கு சொர்க்கம் கூட வேண்டாம்; தர்மம் செய்யும் மனம் மட்டும் இருந்தால் போதும்.
'செல்வம் எப்படி நிலையில்லாததோ, அதுபோல, வாழ்க்கையும் நிலையில்லாதது. ஆனால், தர்மம் நிலையானது. ஆகையால், நான் தர்மம் செய்வதை விட மாட்டேன்...' என்றார்.
எதிரில் இருந்த தெய்வீக புருஷன், தேவேந்திரனாக மாறினார்.
'நான் தேவேந்திரன். உங்களைச் சோதனை செய்வதற்காக, பல கஷ்டங்களை கொடுத்தேன். தர்மம் செய்வதில் உறுதியான நீங்கள், ஏழ்மை நிலையிலும் உங்கள் தர்மத்தை விடவில்லை.
'ஆகையால், உங்கள் சொத்துகளை எல்லாம், மறுபடியும் உங்களுக்கே திருப்பித் தருகிறேன். நீங்கள் தொடர்ந்து தர்மம் செய்யலாம்...' என்று கூறி, தர்மவானின் சொத்துகள் அனைத்தையும் அவரிடமே ஒப்படைத்து, அங்கிருந்து மறைந்தார், தேவேந்திரன்.
எந்த நிலையிலும் நல்லவர்கள், தாங்கள் செய்து வரும் நல்லதை நிறுத்த மாட்டார்கள்; நல்லதே செய்வர். அப்படிப்பட்ட நல்லவர்களின் கூட்டுறவை வேண்டுவோம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
இளநீர் அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டால், உயர்ந்த பதவி உங்களை தேடி வரும்.
