sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உறவு பகை!

/

உறவு பகை!

உறவு பகை!

உறவு பகை!


PUBLISHED ON : ஜூன் 23, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 23, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. இன்னும் நான்கு நாட்களில் மதிவதனிக்கு திருமணம்; உறவினர் வர தொடங்கினர். அனைவரும் சந்தோஷமாய் பேசி, சிரித்து, மணப்பெண்ணை கிண்டலடித்து என, நேரம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும், தன்னுடைய அம்மாவின் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை என்பதை கவனித்த மதிவதனி, துணுக்குற்றாள். என்னவாக இருக்கும் என்று குழம்பியவள், அம்மாவிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

''அம்மா உன்கிட்ட பேசணும்... மொட்டை மாடிக்கு வா,'' சொன்னவள் நொடியும் தாமதிக்காமல், மரகதத்தை இழுத்துக் கொண்டு மாடி ஏறினாள். என்ன பேசப் போகிறாள் இவள் என்ற யோசனையுடன், மகளைப் பார்த்தாள் மரகதம்.

''அம்மா உனக்கு, இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? நான் கட்டிக்கப் போற மாப்பிள்ளையை உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு... கல்யாணத்தை நிறுத்திடலாம்.''

மதிவதனி பேசியதைக் கேட்ட மரகதம் துடித்து போனாள்.

''என்ன பேச்சு பேசறடி? ஒரே பொண்ணு நீ... சீரும், சிறப்புமா கல்யாணம் செய்யப் போறோம். இப்போ போய் அபசகுனமா பேசிக்கிட்டு,'' பதறி கண் கலங்கி நின்ற அம்மாவை, ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள் மகள்.

''அப்புறம் ஏன் உன் முகத்தில் சந்தோஷத்தையே காணோம்?''

''நீயே சொல்லுடி நியாயத்தை ... ஊரெல்லாம் பத்திரிகை வச்சு வாய் நிறைய வான்னு அழைத்தாச்சு... ஆனா, எனக்குன்னு பொறந்த வீட்டில் இருக்கற, ஒரே ஜீவன் என் அண்ணன். அவரைக் கூப்பிட, முரண்டு பிடிக்கிறார் உன் அப்பா.''

அம்மாவின் வருத்தம் என்னவென்று புரிந்தாலும், அப்பா சின்னராசுவின் பிடிவாதமும் மதிவதனி அறிந்தது தான்.

ஊரே மெச்சும் மாமன், மச்சானாக வளைய வந்தவர்கள் தான் சின்னராசுவும், மரகதத்தின் அண்ணன் தீரனும். ஒரு வருஷம் முன், ஊரில் நடந்த ஒரு திருமணத்தில் உறவினர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திருமண விருந்து முடிந்து, வெற்றிலையை மென்றபடி சிரித்துப் பேசிக் கொண்டு சின்னராசுவும், தீரனும் உறவினர் மத்தியில் சென்று அமர்ந்தனர். இவர்களை கண்டவுடன் பேச்சு இவர்கள் பக்கம் திரும்பியது. ஊரிலும், உறவிலும் பெரியவராக மதிக்கப்படும் ஒருவர், சின்னராசுவிடம், 'உனக்கு வெளியில மாப்பிள்ளை தேட வேண்டிய கவலை இல்லை... உன் பெண்ணுக்கு தீரன் மகனையே கட்டிக்கலாம்...' என்று பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டார்.

சின்னராசுவுக்கும், மதிவதனியை தீரனின் வீட்டிற்கு மருமகளாய் அனுப்பி விட்டால், சொந்தத்தில் கொடுத்த திருப்தியுடன், பெண்ணையும் உள்ளூரிலேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், அவள் பிறந்ததிலிருந்து உண்டு. எப்போது திருமண பேச்சைத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, தானே சந்தர்ப்பம் அமைய, அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

'என் பொண்ண... என் மாப்பிள்ளைய தவிர யாரு கட்டுவான்?' என்று நம்பிக்கையோடு நெஞ்சு நிமிர்த்தி சொன்னார். தீரனும், 'ஆமாம்... எம் பிள்ளை கேசவன் தான், உன் வீட்டு மாப்பிள்ளை!' என்று, வாக்கு கொடுக்காமல், 'இப்ப எதுக்கு இந்த பேச்சு?' என்றபடியே, அந்த இடத்தை விட்டு நழுவினார். தீரனின் பேச்சு, சின்னராசுவுக்கு என்னவோ எங்கோ தவறு என்று எண்ண வைத்தது.

சின்னராசு நினைத்தது போலவே, இரண்டே நாளில் கேசவன் தன்னுடன் படித்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாய், வீடு தேடிவந்து சொன்னார் தீரன்.

'வேத்து ஜாதி பொண்ணைக் கட்டிகிறேன்னு சொல்றான்... வெட்கம் இல்லாம நிச்சயம் செய்ய நாள் குறிச்சிட்டு, எங்களை அழைக்க வந்துட்டியா? அவன் மனசை மாத்தி, சொந்தம் வீட்டு போகாம இருக்க, எம் பொண்ண கட்டி வைக்கிறத விட்டுட்டு, வந்துட்டான் பாரு செய்தி சொல்ல...' தான் நினைத்தது நிறைவேறாது என்று புரிந்து கொண்ட சின்னராசு கோபத்துடன் கத்தினார். அவரை சமாதானப்படுத்த முயன்றார் தீரன். ஆனால், அவர் சொல்வது எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை சின்னராசு.

'போதும் உனக்கும், எனக்கும் இருந்த உறவு... இனி, உன் வீட்டு வாசப்படியை நாங்க யாரும் மிதிக்க மாட்டோம்... நீயும் இந்த வீட்டுக்கு வராத... முதலில் வெளியில் போ...' என்றபடி வாசலைக் காட்ட, அப்போது எது சொன்னாலும் பிரச்னையில் முடியும் என்று உணர்ந்த தீரன் கண்களால் மரகதத்திடம் விடை பெற்று சென்றார்.

அண்ணன் பின்னே சமாதானம் செய்யும் நோக்கோடு செல்ல முயன்றவளை, இழுத்து நிறுத்திய சின்னராசு, 'போறதுன்னா அப்படியே போய்டு... திரும்ப இந்த வீட்டில் கால் வைக்காதே...' என்று சத்தம் போட, பெட்டிப் பாம்பாய் அடங்கி போனாள். அதன் பிறகும், சின்னராசுவை சமாதானம் செய்யும் நோக்கோடு தீரன் அவரை, பொது இடங்களில் சந்தித்து பேசிப் பார்த்தும் தோல்வியே கிட்டியது. கேசவன் திருமணத்திற்கு மனைவியுடன் போய் அழைத்தும், சின்னராசு தானும் போகவில்லை, மரகதத்தையும் போகவிடவில்லை.

கேசவன் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்தே மதிவதனிக்கு திருமணம் கூடி வந்தது. மகளுக்கு திருமணம் நிச்சயமானதும், கணவனுக்கு தெரியாமல் தன்னுடைய அண்ணனை சந்தித்து விஷயத்தை சொல்லி இருந்தாள் மரகதம். ஆனாலும், சின்னராசு வந்து அழைத்தால் மட்டுமே, திருமணத்திற்கு தன்னால் வர இயலும் என்று உறுதியாய், அவர் சொல்லி விட்டார். இது சம்பந்தமாக கணவனிடம் கண்ணீர் விட்டு அழுதும், எந்த பலனும் இல்லை. அதே கவலையில் இருந்தவளால், திருமண வேலையில் முழுமனதாய் ஈடுபட முடியவில்லை.

''என்ன அம்மாவும், பொண்ணும் இங்க வந்து நிக்கறீங்க?''

சின்னராசுவின் குரல் கேட்டு, திரும்பிய மரகதத்தின் முகத்தை ஆராய்ந்தார். கண்கள் அழுது, சிவந்து இருந்தது தெரிந்தது. எதற்காக அழுது இருப்பாள் என்று யூகிக்க முடிந்தாலும், அவளை வேண்டுமென்றே வார்த்தைகளால் சீண்டினார்.

''ஆமா, பொண்ணு கல்யாணம் ஆகி, வேற வீட்டுக்கு போவாங்கற விவரம் கூட தெரியாதவ பாருங்க நான்,'' பேசும்போதே குரல் உடைந்து அழும் அம்மாவை பரிதாபமாய் பார்த்தாள் மதிவதனி.

''அப்பா, கல்யாண நேரத்துல அம்மா இப்படி சோகமா இருந்தா, நான் எப்படி சந்தோஷமா மண மேடையில உட்காருவது? கொஞ்சம் உங்க பிடிவாதத்தை தளர்த்திகோங்க அப்பா... மாமாவை போய் அழைச்சா தான் என்ன? நட்போட இருந்தவங்க தானே நீங்க ரெண்டு பேரும்.''

கெஞ்சும் மகளையும், கலங்கிய கண்களுமாய் நிற்கும் மனைவியை பார்த்தவர் என்ன நினைத்தாரோ, ''சரி, சரி நீ போய் நல்ல புடவையா கட்டிக்கிட்டு வா... உன் அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம்.''

மகளை திரும்பி நன்றியுடன் பார்த்தவள், வேகமாய் கீழே இறங்கி ஓடினாள்.

தீரனின் வீட்டில்...

''ஐயா, அம்மா யாரும் வீட்டிலே இல்லையே... கதிரவன் ஐயா சம்சாரத்துக்கு புள்ள பிறக்கப் போகுது, அது தாய் இல்லா பொண்ணு... அதான் அம்மாவை துணைக்கு கொண்டு விட , ஐயா அவங்க ஊருக்கு போய் இருக்கார்.''

கூப்பிட போன நேரத்தில், அண்ணன் ஊரில் இல்லாதது பெரும் ஏமாற்றமாய் இருந்தது மரகதத்துக்கு. இருந்தாலும், செய்தி சொன்ன வேலையாளிடம், தாங்கள் கல்யாணத்துக்கு கூப்பிட வந்ததை, அண்ணனுக்கு சொல்லிவிடுமாறு சொல்லிவிட்டு வந்தாள்.

''அம்மா, கவலைப்படாதே, மாமாவை மொபைலில் கூப்பிட்டு சொல்லிடலாம்,'' சமாதானம் சொல்லிவிட்டு, தன்னுடைய மொபைலில் நம்பரை அழுத்தினாள் மதிவதனி.

''நீங்க ரெண்டு பெரும் பேசுங்க... நான் நாளைக்கு, அவரு ஊருல இருந்து வரட்டும்... நேரா போய் கூப்பிடறேன். மொபைலில் கூப்பிடறது மரியாதை இல்ல.''

மதிவதனி மேற்கொண்டு பேசும் முன், ஏதோ அவசர வேலை இருப்பதை போன்று வேகமாய் வெளியேறினார் சின்னராசு.

மாப்பிள்ளை அழைப்பு அன்று மதியம், உறவினர்களுக்கு மண்டபத்தில் விருந்து நடந்து கொண்டிருந்தது. பந்தி கவனித்து கொண்டிருந்த சின்னராசுவிடம், அரக்க பறக்க ஓடி வந்த மரகதம், ''மதிக்கு அண்ணன் போன் செய்துச்சு... அண்ணன் ஊரில் இருந்து வந்துடுச்சாம்... பேரன் பொறந்து இருக்கானாம். அண்ணி ஊருல தான் இருக்காங்களாம் நாம போய் கல்யாணத்துக்கு அழைச்சுட்டு, அப்படியே சாப்பிட கூப்பிட்டு வரலாம் கிளம்புங்க.''

''இப்படி அவசரப் பட்டா எப்படி? ரெண்டு பேரும் போய்ட்டா, வர்ற சொந்தக்காரங்கள யாரு வரவேற்று, சாப்பிட சொல்றது? நீதான் போனில் பேசிட்ட இல்ல. அதனால், நீ இங்க இரு... நான் போய் கூப்பிடறேன்.''

சின்னராசு சொன்னது நியாயமாக பட்டது மரகதத்துக்கு , ''அண்ணன் நான் வரலைன்னு கோச்சுக்காது... நீங்க போயிட்டு வாங்க,'' என்றவள், வந்திருந்த உறவினர்களை கவனிக்க சென்றாள்.

''வாப்பா சின்னராசு... இந்த வீட்டுக்கு வந்து, ஒரு வருஷம் ஆகி போச்சு, என் பேரன் வந்த நேரம், என் பேர்ல இருந்த கோபம் உனக்கு தீர்ந்து போச்சு, நம்ம மதி கல்யாணத்துக்கு நான் வராமலா?'' பேசி கோண்டே போனவர் எதிராளியிடம் இருந்து, எந்த பதிலும் வராமல் போகவே, யோசனையுடன் பேசுவதை நிறுத்தினார்.

''உன்னை கல்யாணத்துக்கு கூப்பிட வரலை நான்... வந்துடாதேன்னு சொல்ல வந்தேன். நீ ஊருக்கு போனது தெரிஞ்சுதான், அன்னைக்கு மரகதத்தை கூட கூட்டிட்டு வந்தேன், அவளும் உண்மைன்னு நம்பி அழறதை விட்டுட்டு, மதி கல்யாண வேலையில் கவனத்தை செலுத்தினா... என்னைக்கு நீ என்னை சம்பந்தி ஆக்கலையோ, உனக்கும், எனக்கும் அன்னைக்கே உறவு விட்டுப் போச்சு, இனி, அதை ஒட்ட வைக்க முடியாது. நான் பேசினதை, உன் தங்கச்சி கிட்ட சொன்னா, இந்த வயசுல அவ வாழாவெட்டியா <<உன் வீட்டுக்கே வந்துடுவா... அந்த அசிங்கம் தேவையான்னு யோசிச்சுக்கோ.''

இதை எதிர்பார்த்திராத தீரன், அதிர்ச்சியில் உறைந்து நின்றார். வெளியில் சென்றிருந்த வேலையாள் ராசப்பன் உள்ளே வரும் அரவம் கேட்ட பின்பே சுயநினைவு பெற்றார். அதற்குள் சின்னராசு கிளம்பி விட்டார்.

''சின்னராசு ஐயா என்னை வழியிலே பார்த்து, உங்க கூட என்னையும் கல்யாணத்துக்கு வர சொன்னாருங்கய்யா,'' என பவ்யமாய் ராசப்பன் சொல்ல, தன்னை வர வேண்டாம் என்று சொல்லி விட்டு, ராசப்பனிடம் தன்னை அழைத்ததாக காட்டிக் கொண்ட சின்னராசுவின் வன்மம் புரிந்தது.

திருமணத்திற்கு போகாமல் ஊருக்கு கிளம்பும், தன் முதலாளியின் நடவடிக்கை புரியாமல் விழித்தான் ராசப்பன். பெட்டியை தூக்கிக் கொண்டு முன்னே சென்றவன், தன்னுள் முணுமுணுத்துக் கொண்டான். 'பகை மறந்து, அந்த மனுஷன் வீடு தேடி ரெண்டு தரம் வந்து, கல்யாணத்துக்கு அழைச்சும், நம்ம ஐயாவுக்கு கோவம் போகலையே!'

அவன் முணுமுணுப்பு தெளிவாய் தீரனின் காதுகளில் விழுந்தது. இவன் மட்டுமா பேசுவான். ஊரே பேச போகிறது என்ற எண்ணமே, அவரை வருந்த வைத்தது. மரகதம் கூட, 'நீ இப்படி செய்யலாமா அண்ணா?' என்று நிற்க வைத்து கேட்பாள். மதி கேட்கவே வேண்டாம். இனி ,'மாமா 'என்று ஒரு தரம் கூட கூப்பிட மாட்டாள், என எண்ணம் பலவாறு வந்து, மனதை குழப்பியது.

'கல்யாணத்துக்கு போகலையா?' என்று கேட்ட மனைவியிடம், 'பேரனை பார்க்கணும்ன்னு இருந்தது...வந்து விட்டேன்...' என்று ஏதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலும் அவரின் மனைவி, மருமகளிடம் கிசுகிசுத்தாள், 'உன் மாமனாருக்கு பிடிவாதம் அதிகம்ன்னு சொன்னேன் இல்ல...தங்கச்சி புருஷன் போட்ட சண்டையை நினைவு வச்சுக்கிட்டு, அவங்க அழைச்ச மரியாதைக்கு கூட விசேஷத்திற்கு போகாம...வந்து நிற்கிறார் பாரு.'

திருமணம் முடிந்த மறுநாள், மதிவதனியும், புது மாப்பிள்ளையும் மறு வீட்டிற்கு வரவிருந்தனர். விருந்துக்கு தேவையானதை சமையல் ஆளிடம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மரகதம். மொய் பணத்தை கணக்கு பார்த்து கொண்டிருந்த சின்னராசுவின் மொபைல் ஒலித்தது. எடுத்தவர் செய்தி கேட்டு அதிர்ந்தார்.

''எங்க போறோம்? பாதி வேலையை போட்டுட்டு எப்படி கிளம்பறது?'' என்று கேள்வி கேட்ட மரகதத்தை அடக்க பெரும் பாடுபட்டார். கார் தீரனின் வீட்டு முன்பு நிற்க, இறங்கிய மரகதம் சூழ்நிலையின் இறுக்கம் உணர்ந்து உள்ளே ஒடினாள். அங்கே, தீரனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

''எம் புருஷன் வந்து கூப்பிட்டும், நீ அவர் முன்னாடி பேசின பேச்சை எல்லாம் மனசுல வச்சு, மதி கல்யாணத்துக்கு கூட வராம இருந்துட்டியே அண்ணா... உன்னை கடைசியிலே, இப்படி பார்க்க வேண்டியதா போச்சே!'' அண்ணனின் உடலில் விழுந்து அரற்றும் மனைவியை பார்த்த சின்னராசுவுக்கு, திருமணத்திற்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டு, மற்றவர்களிடம் தீரனை அழைத்தது போல காட்டி கொண்டது, இப்போது உள்ளுக்குள் உறுத்தியது.

அப்போது கதிரவன், 'திடீர்ன்னு ரத்த கொதிப்பு அதிகம் ஆனதால், மாரடைப்பு வந்துடுச்சுன்னு டாக்டர் கூறினார்...' என்று சோகமாக யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். தான் பேசிய வார்த்தைகளால் தான், தீரனுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி இருக்கும் என்று உணர்ந்த போது, உள்ளுக்குள் எழுந்த துக்க உணர்வு, பெரும் கேவலாய் வெளி வந்தது சின்னராசுவுக்கு.

ஒரு வருடமாய் தேவையற்ற வீம்பினால், பிரச்னையை பெரிதாக்கி, தன்னுடைய நடவடிக்கையாலும், வார்த்தைகளாலும் ஒரு நல்ல மனிதனை நோக அடித்து, நல்ல உறவை இழந்து விட்ட சின்னராசுவுக்கு, காலம் முழுதும் அந்த உறுத்தல் தொடரும்!

***

நித்யா பாலாஜி






      Dinamalar
      Follow us