PUBLISHED ON : டிச 13, 2020

சித்த புருஷர் ஒருவர், பாடல்கள் எழுதுவார்; அற்புதமாக இருக்கும். விபரம் புரிந்தவர்கள், அவர் பாடல்களையும், அவரையும் பாராட்டினர்; மற்றவர்கள், சித்தரின் குணநலன்களைப் பாராட்டினர்.
சில பாடல்களை எழுதி, பாண்டிய மன்னரை பார்க்கச் சென்றார், சித்தர். அவருக்கு தகுந்த மரியாதை அளிக்காமல், பாடல்களைப் படிக்கச் சொன்னார், மன்னர். பொறுமை இழக்காமல் பாடல்களைப் படித்தார், சித்தர்.
கேட்கக்கேட்க, மன்னருக்கு உள்ளத்தில் பொறாமைத்தீ மூண்டது. வாய் வார்த்தைக்கு கூட ஏதும் சொல்லவில்லை; சாதாரணமாக, இவ்வாறு பாடி வரும் புலவர்களுக்கு அளிக்கும், சிறிய அளவிலான நன்கொடையைக் கூட வழங்கவில்லை.
மனம் வருந்திய, சித்தர், அரண்மனையை விட்டு வெளியேறி, கோவிலை அடைந்தார்.
'சோமசுந்தரப் பெருமானே... பாண்டிய மன்னன், கல்வி-, கேள்விகளில் சிறந்தவன் என, கேள்விப்பட்டு, சில பாடல்களுடன் அவனைப் போய்ப் பார்த்தேன். அவனோ, மதியாமல் மரம் போலிருந்து, அடியேனை அவமதித்தான். இந்த அவமானம் உனக்குத்தான்...' என்று, தன் மனக்குமுறலை வெளியிட்டு, நகரை விட்டு வெளியேறினார்.
மன்னர் செய்த தவறு, மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மன வருத்தத்தை உருவாக்கியது. அதே விநாடியில், அவர், தேவியோடு மதுரைக்கு வெளியே போய் அமர்ந்தார்.
அடியார்கள் மூலம் தகவலறிந்த மன்னர், அதிர்ந்தார்.
கோவிலுக்கு சென்று பார்த்தார், மன்னர். அங்கு தெய்வம் இல்லை. உடனே, ஊருக்கு வெளியே ஓடினார்.
அங்கே எழுந்தருளியிருந்த இறைவனை தரிசித்து, 'தெய்வமே... அடியேன் அறியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். தயவுசெய்து தாங்கள் மீண்டும் பழையபடி, ஆலவாய் கோவிலில் எழுந்தருள வேண்டும்...' என, கண்ணீர் சிந்தி வேண்டினார்.
மன்னரின் திருந்திய உள்ளம் கண்டு மனம் இரங்கினார், சொக்கநாதர்; அன்னை மீனாட்சியுடன் மறுபடியும் மதுரை கோவிலில் எழுந்தருளினார். இழந்ததைப் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர், மக்கள்.
அதன்பிறகு, அவைக்கு வந்தவர்களிடம் அன்போடும், மரியாதையோடும் நடக்கத் துவங்கினார், மன்னர்.
இது ஏதோ, மதுரை மாநகர தகவலல்ல. ஏழெட்டு மாதங்களாக அடைபட்டுக் கிடந்து, ஆரோக்கியம், மகிழ்ச்சி, சுதந்திரம் என, அனைத்தையும் இழந்திருந்த நமக்கு, இப்போது சற்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது; மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் தேடி வரத் துவங்கிஇருக்கின்றன.
தேடி வந்தவற்றை தக்க வைத்துக் கொள்ள, பொறுப்புடன் செயல்படுவோம்;
தெய்வம் அருளும்; ஆரோக்கியமும், அமைதியும் வளரும்!
ஆன்மிக தகவல்கள்!
மாலையில், வீட்டில் விளக்கேற்றுவதற்கு முன், தான, தர்மம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கேற்றிய பின், தான, தர்மம் செய்யாதீர்.
பி. என். பரசுராமன்