/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரா
/
நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரா
PUBLISHED ON : டிச 22, 2013

சமீபத்தில், என் சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திரா, என்னை, தொலை பேசியில் அழைத்து, 'அந்த நாள் படம், 'டிவி' யில் போடுகின்றனர். உடனே பாருங்க...' என்றார். பாட்டு இல்லாமல், படங்கள் எடுப்பது பற்றி, இப்போது, பெருமையாக பேசுகின்றனர். ஆனால், கிட்டத்தட்ட, 59 ஆண்டுகளுக்கு முன்பே, வீணை எஸ்.பாலசந்தர் - சிவாஜி இருவரும் இணைந்து, பாடலே இல்லாத, அந்த நாள் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து, புரட்சி செய்திருக்கின்றனர்.
எஸ்.பாலசந்தரின் மகன் ராமன், என் சகோதரர் ராஜேந்திராவுடன் ஒன்றாக படித்தவர். எஸ்.பாலசந்தர் எங்கள் குடும்ப நண்பர். ஒரு முறை, அவர் வீட்டில், நாங்கள் டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த போது, 'சிவாஜி போன்ற, திறமை உள்ள நடிகரால் தான், அந்த நாள் மாதிரியான, படத்தில் நடிக்க முடியும். ஒரு காட்சியில், வீட்டின் சொந்தக்காரரின் மனைவியை, பூங்காவில் சந்தித்து, காதலிப்பது மாதிரி நடித்து, ஏமாற்றுவார். தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரியும் முகத்தில், ஒரு கண்ணில் காதல், வெளிச்சம் படாத கண்ணில் ஏமாற்றுகிற வஞ்சம்... அவருடைய கேரக்டர் புரிவதற்காக வைக்கப்பட்ட அமர்க்களமான, 'ஷாட்' இது. இன்றைக்கும், அந்த நாள் படம் பாருங்க, நான் சொல்வதை நீங்களும், ரசித்து, உணர முடியும். நல்ல திறமையான இயக்குனர்களால், நன்கு கையாளப் பட்டால், 'சிவாஜி ஹாலிவுட் நடிகர்களுக்கு சவாலாக இருப்பார்...' என்று கூறினார்.
எஸ்.பாலசந்தர் - சிவாஜி இணைந்து மேலும் படங்கள் செய்திருந்தால், தமிழ் திரை உலகிற்கு பெரும் பொக்கிஷங்களாக அவை இருந்திருக்கும்.
அந்த நாள் படத்தில் தேசத்துரோகி, திரும்பிபார் படத்தில் வெறுக்கக்கூடிய காமுகன், ரங்கோன் ராதாவில் தகாத உறவுக்காக, மனைவியை பைத்தியமாக்கும் கெட்டவன், கூண்டுக்கிளி படத்தில், ஸ்டைலிஷ் வில்லன், பெண்ணின் பெருமை படத்தில், கொடூர வில்லனாக நடித்திருப்பார் சிவாஜி.
நடிகனாக, திரை உலகில், முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் ஹீரோ அந்தஸ்து பெற்று, எதிர்மறை பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கும், தைரியம், மனப்பக்குவம் எத்தனை நடிகர்களுக்கு வரும்! சிவாஜி முழுமையான நடிகர். தன்னுடைய, 'இமேஜ்' என்ன ஆகுமோ என்று அவர் பார்க்கவில்லை, கொடுக்கப்படும் பாத்திரங்களுக்கு, பொருத்தமாக நடித்தார். தொழில் மேல் விருப்பம் உள்ள நடிகர்கள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கமல், அடிக்கடி சொல்வது, 'தமிழ் திரை உலக வரலாற்றை, சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்....' என்று. உண்மையான பேச்சு.
சிவாஜிக்கு பின் வந்த அத்தனை நடிகர்களுக்கும், சிவாஜி முன்னோடியாக இருந்திருக்கிறார். அத்தனை நடிகர்களிடமும், ஏதோ ஒரு விதத்தில் சிவாஜியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்று யாராவது சொன்னால், அது மனசாட்சிக்கு விரோதமாக சொல்லப்படும் பொய் என்பது, என் தாழ்மையான கருத்து.
நெகடிவ் ரோல் பற்றி பேசும் போது, சிவாஜி பிலிம்சின் சொந்தப் படமான புதிய பறவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன் சொந்த படத்தில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தார் சிவாஜி.
ஒரு முக்கியமான ரகசியத்தை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, குற்ற உணர்வோடு கூடிய சோகத்தை யும், கண்களில் மிரட்சியையும், முதல் சீனிலிருந்து காண்பித்து, நடித்திருப் பார். படத்தின் பிரபல இயக்குனர் தாதா மிராசி, (சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் மற்றும் ரத்த திலகம் படங்களை இயக்கியவர்.) 'என்னுடைய ஹீரோ, மிகச் சிறந்த நடிகர்...' என்று சிவாஜியை பெருமையோடு குறிப்பிடுவார். அந்தப்படத்தில், 'ப்ளாஷ்பேக்' காட்சியில், சிவாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பார் தாதா மிராசி.
அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
இந்தப் பாட்டு எழுதும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் சேர்ந்து, உட்கார்ந்து ஆலோசித்தனர். சரியான பல்லவி கிடைக்க வில்லை. அருகில் இருந்த சிவாஜி தான், 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்ற பல்லவியை, பாடலின் முதல் வரியாக எடுத்துக் கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கண்ணதாசனுக் கும் பொருத்தமான வரிகள் என்று படவே, இதுவே, பாடலின் பல்லவியாக ஆயிற்று; தமிழ் சினிமாவிற்கு புதுமையான பாடல் காட்சி கிடைத்தது.
இன்றைக்கும், இப்படம் இளைஞர்களை கவரக்கூடிய படம்.
ஒரு முறை, எங்கள் நாடகத்திற்கு தலைமை தாங்க வந்த சிவாஜியுடன், ஒரு வடமாநில அழகான இளைஞர் கூடவே வந்திருந்தார். செகரட்டரி போல, சிவாஜியின் சிகரெட் டின்னை கூட, அவர் தான் வைத்திருந்தார். 'அவர் யார்?' என்று, என் தந்தை கேட்டார். 'இந்த பையனை பார்த்துக்கோ. இந்தியில் மிகப் பெரிய நடிகனாக வருவான்...' என்றார் சிவாஜி.
சிவப்பாக, அழகாக பைஜாமா, ஜிப்பா அணிந்து வந்த அந்த இளைஞர் தான், பிற்காலத்தில் இந்தியாவில் சிறந்த நடிகர் என்ற, பாரத் விருது பெற்ற, சஞ்சீவ் குமார். மிகப் பெரிய நடிகராக ஆனபின்னும், சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந் தாலும், டிபனோ, சாப்பாடோ சிவாஜியின் வீட்டில் தான், சாப்பிடுவார்.
*சிவாஜி நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூல் பெற்று, சாதனை படைத்த படம், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்த திரிசூலம். திரிசூலம் படத்தின் சாதனையை, எம்.ஜி.ஆர்., மனதார பாராட்டியதோடு, 'இந்தப்படத்தின் அதிக வசூல் மூலம், அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி, அரசின், மதிய உணவு திட்டத்திற்கு, பெரும் அளவில் உதவியிருக்கிறது...' என்று, சிவாஜிக்கு நன்றி கூறினார்.
* சிவாஜி, திலீப்குமாரை, அவருடைய சொந்தப் பெயரான, யுசுப் பாய் என்ற பெயரைச் சொல்லியே அழைப்பார். இருவரிடையே நல்ல புரிதலும், நல்ல நட்பும் இருந்தது. சிவாஜியின் நடிப்பு திறனை மிகவும் மதித்து பாராட்டுவார் திலீப்குமார். சிவாஜிக்கும், அவர் மீது நல்ல மரியாதை இருந்தது. சிவாஜி நடித்த, முரடன் முத்து இந்தி ரீ-மேக்கில், தீலிப்குமார் நடித்து, பெரிய ஹிட் ஆனது.
* பல வெற்றிப்படங்கள் இந்தியிலிருந்து, தமிழில் ரீ - மேக் செய்து, அவற்றில், சிவாஜி நடித்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.
* இந்தியில், கிலோனா என்ற திரைப்படம், தமிழில், எங்கிருந்தோ வந்தாள் (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
* தேவ் ஆனந்த் நடித்த, ஜானி மேரா நாம். தமிழில், ராஜா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்.
* ராஜேஷ் கண்ணா நடித்த, துஷ்மன் திரைப்படம், தமிழில், நீதி, (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்தர்.
* ஷம்மி கபூர் நடித்த, பிரம்மச்சாரி திரைப்படம், தமிழில், எங்க மாமா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
— தொடரும்.
எஸ்.ரஜத்

