sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 22, 2013

Google News

PUBLISHED ON : டிச 22, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு,

சகோதரிகளான எங்கள் இருவரையும், உங்கள் மகள்களைப் போல் பாவித்து, நாங்கள், இந்த உலகத்தில் வாழ, வழி சொல்லுங்கள். நாங்கள் இருவரும், தோழிகள் போலதான் பழகுவோம். எங்களுக்குள் எப்பொழுதும் சிறு சண்டை கூட வந்தது கிடையாது. எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் மிகவும் பொறாமைப்படுவர். நிறைய தடவை என்னையும், என் அக்காவையும் பிரிப்பதற்காக, என்னைப் பற்றி அவளிடமும், அவளைப் பற்றி என்னிடமும் கோல் மூட்டி இருக்கின்றனர். எங்களுக்குள் இருந்த புரிதல் காரணமாக, எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை.

எங்களுடைய பிரச்னை என்னவெனில், எங்கள் பெற்றோர், என்னையும், என் அக்காவையும் சரியாக கவனிப்பதில்லை. அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் தான் முக்கியம். எங்கள் இருவருக்கும், தொட்டதற்கெல்லாம் தினமும் அடி, உதை தான்.

நான் பி.எஸ்சி.,யும், என் அக்கா பி.ஏ.,வும் படிக்கிறோம். எங்களுக்கு தோழிகள் நிறைய பேர் உண்டு. அவர்கள், தினமும் குறைந்தபட்சம், ஒரு பத்து தடவையாவது தொலைபேசியில் அழைத்து விடுவர். தோழிகள் போன் செய்யும் போதெல்லாம், அம்மா, அப்பா எங்களை அசிங்கமாகத் திட்டுவது, மறு முனையில் இருப்பவர்களுக்குக் கேட்டு, சங்கடப்பட்டு போனை, 'கட்' செய்து விடுவர்.

எங்களை மிகவும் சந்தேகப்படுவர் எங்கள் பெற்றோர். இதை, ஒரு சாக்காக வைத்து, எங்கள் சின்ன அண்ணன், அவன் நண்பர்களிடம், எங்கள் வீட்டு போன் நம்பரை கொடுத்து, பேசச் சொல்வான். நாங்களும் பேசுவோம். அவன், அங்கு, ஸ்பீக்கர் போனில், பேசுவது அனைத்தையும் கேட்டு, வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் போட்டுக் கொடுப்பான்.

தினமும், வீட்டில், இந்த பிரச்னை நடப்பதால், அக்கம் பக்கமெல்லாம் ஒரு மாதிரியாக பேசுகின்றனர். இதனால், ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் என்று எல்லா இடங்களிலும், எங்களைப் பற்றி தப்பாகப் பேசுகின்றனர். காரணம், எங்கள் அண்ணன், நாங்கள் யாருடனோ லாட்ஜில் இரண்டு நாள் தங்கினோம் என்று, ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறான்.

இதைத் தாங்க முடியாத நாங்கள், தற்கொலைக்கு முயற்சி செய்தோம்; காப்பாற்றி விட்டனர். இப்படி, வீண் புரளிகளை, எத்தனை நாட்கள் தான் தாங்கிக் கொண்டிருப்பது... நாங்கள் வாழ்வதா, சாவதா... என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.

எங்கள் அண்ணன்கள், இருவரும் வேலைக்குப் போகாதவர்கள். எங்களை விரட்டி விட்டால், சொத்துக்களை, தாங்கள் அனுபவித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். எங்களுக்குப் பணம் தேவையில்லை. உண்மையான அன்பு மட்டுமே தேவை.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்.


அன்புள்ள மகளுக்கு —

'எங்களுக்கு பணம் தேவையில்லை. எங்களை புரிந்து, உண்மையான அன்பு செலுத்துகிறவர்கள் மாத்திரம் போதும்' என்று, கண்ணீர் மல்க எழுதிய, உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

உன் பிரச்னைகளுக்கு தீர்வு பற்றி ஆராய்வதற்கு முன், சகோதரிகளான உங்கள் இருவரையும் மனம் திறந்து பாராட்டுகிறேன். ஏன் தெரியுமா? நீங்கள் சகோதரிகளாக இருந்தாலும், தோழிகளாகவும் இருக்கிறீர்கள்.

மற்றவர்கள் உங்களை பிரித்து விட நினைத்தாலும், உங்களுக்குள் இருந்த புரிதல் மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை காரணமாக, மற்றவர்கள் வெட்கி தலைகுனியும்படி, நீங்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...

கல்லுாரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் உங்கள் இருவருக்கும், மற்றவர்களின் நடத்தைகளை, குணங்களை, எதிர்பார்ப்புகளை, பேசுகிற பேச்சின் தன்மைகளை புரிந்து கொள்ளும் அறிவு இருக்கிறது. எனவே, நீங்கள், உங்களின் வயசுக்கு ஏற்ற அளவு, உலகத்தையும், ஓரளவு புரிந்து வைத்திருப்பீர்கள்.

சரி, இப்பொழுது உங்களின் பிரச்னைக்கு வருவோம்.

ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தற்கொலை, பிரச்னைகளுக்கு தீர்வாகி விடாது. மாறாக பிரச்னைகளை அதிக அளவு, துாண்டி விடக் கூடியது.

சவால்களை சந்திக்க தயார் நிலையில் இல்லாதவர்கள், கோழைகள், மன உறுதியில்லாதவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான், இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்வர். இதுவும் ஒருவகையான மனநோய் தான்.

எனவே, முதலில், நீங்கள் இருவரும், இந்த தேவையில்லாத எண்ணங்களை கை விட்டு, வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து, வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவித்து, பின் இறப்பதுதான் என்பதை உணர வேண்டும். கவியரசர் கண்ணதாசன் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், 'உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...'

ஆம் மகளே... இந்த சிந்தனையின் அடிப்படையில், தைரியமாக சவால்களை சந்திக்கும் மனப்பக்குவத்தை, துாய சிந்தனைகளை, பாசிட்டிவ் எண்ணங்களை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, உன் பிரச்னையின் அடிப்படை காரணங்களை கண்டுபிடிக்க வேண்டும். வெளி உலகத்தில், எப்பொழுதும் ஜாலியாக, ஜோவியலாக, மற்றவர்களின் அன்பையும், நட்பையும் சம்பாதிக்கிற உங்களை, உங்களது பெற்றோர் அசிங்கமாக திட்டுகின்றனர். ஏன் தெரியுமா? தினமும் உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளே காரணம்.

வயசுப் பெண்கள், இப்படி ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருந்தால், எந்த பெற்றோர் தான் பொறுத்துக் கொள்வர். மகளின் எதிர்கால வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமோ என்ற பயம் இருக்கத்தானே செய்யும். உங்கள் மீது, உங்கள் பெற்றோருக்கு இருக்கும் பாசம் தான், கண்டிப்பாக மாறுகிறது என்பதை, முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த பிரச்னை, உன் சின்ன அண்ணன்... உங்கள் இருவருக்கும் எல்லா வழியிலும் தொந்தரவு தருகிறார். அவரே, அவரது நண்பர்களின் உதவியோடு, உங்கள் வீட்டிற்கு போன் செய்து, அசிங்கமாக பேசுகிறார்... ஏன் இப்படி சொந்த சகோதரிகளிடம் நடந்து கொள்கிறார்! அவரின் எதிர்பார்ப்பு என்ன... இந்த செய்கையின் பின்னணி என்ன என்பதை, உடனே நீங்கள் கண்டறிய வேண்டும்.

ஒருவேளை நீங்கள் சொன்னது போல, சொத்துக்காக கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், உங்களின் கூடப்பிறந்தவர் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், அது சொத்துக்காக மாத்திரம் இருக்காது. மன அளவில், ஏதோ வகையில் மிக ஆழமாக பாதிக்கப்பட்டும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. உங்களிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்.

ஏதோ ஒருவகையில், அவரது வளர்ச்சிக்கு, மகிழ்ச்சிக்கு நீங்கள் இருவரும் தடையாக இருக்கிறீர்கள் என்று அவர் கருதலாம். எனவே, காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். உங்களிடம், ஏதோ ஒரு பெரிய குறை இருக்கத்தான் செய்கிறது.

வீட்டில் உள்ள அனைவரையும் உங்களுக்கு எதிராக நடந்து கொள்ள எது துாண்டுகிறது என்பதை, முதலில் கண்டுபிடியுங்கள்.

உங்களின் அன்றாட நடவடிக்கைகளை, பழக்கவழக்கங்களை, பேசும் வார்த்தைகளை, தோழிகள் வட்டத்தை, நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எல்லாம் நன்கு அலசி ஆராய்ந்து, உன் வீட்டினரை எது எது கோபப்படுத்த வைக்கிறது என்பதை, பாரபட்சம் இல்லாமல் பட்டியலிட்டு எழுதுங்கள்.

பின், அவைகளை களைய முற்படவேண்டும். இது, உடனே சட்டென்று நடந்து விடாது. மெல்ல மெல்லத்தான் இவைகளை களைய வேண்டும்.

நல்ல குணங்களையும், கல்வியறிவையும் கொண்டுள்ள நீங்கள், இவைகளை மூலதனமாக கொண்டு 'எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் பயப்படாமல், நியாயமாக நடந்து கொள்வேன். கோழைத்தனமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன். நடத்தைகளை சுயமதிப்பீடு செய்து, நடைமுறைக்கு ஒத்து வருகிற மாதிரி மாற்றியமைத்துக் கொள்வேன்' என்று, மனதுக்குள் சூளுரைத்துக் கொள்ளுங்கள், உங்களது பிரச்னைகள் அனைத்தும் தூள் தூளாக பறந்து, மனஅமைதியும், நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும்.

இவைகள் அனைத்தும் உனக்கும், உன் சகோதரிக்கும் கிடைக்க, இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

என்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us