PUBLISHED ON : ஜூன் 28, 2020

நம் அண்டை நாடான சீனாவில் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது வழக்கம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களை, கரப்பான் பூச்சியை சாப்பிட வைக்கும் தண்டனை எல்லாம் கொடுப்பர்; இது, சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சீனாவின் பீஜிங் நகரில் செயல்படும் ஒரு அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், அதிக பொருட்களை விற்ற, தங்கள் ஊழியர்களை வித்தியாசமான முறையில் கவுரவித்துள்ளது.
அதிகமான பொருட்களை விற்ற ஊழியர்களை, அலுவலகத்தில் உள்ள ஒரு மேடையில் அமர வைத்து, அவர்களின் கால்களை துடைத்து, சுத்தம் செய்து, கவுரவித்தனர். ஊழியர்களின் கால்களை சுத்தம் செய்தவர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான். இந்த விபரம் தெரியவந்ததும், அந்த நிறுவனத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்தது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களோ, 'நன்றாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையோ, போனசோ கொடுத்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும். கால்களை சுத்தம் செய்வது எல்லாம் விளம்பரத்துக்காக... இதனால், எங்களுக்கு ஒரு பைசாவுக்கு கூட பயன் இல்லை...' என, புலம்புகின்றனர்.
- ஜோல்னாபையன்

