PUBLISHED ON : ஜூன் 28, 2020

தென் அமெரிக்க நாடான பெருவில், லிமா என்ற நகரில்,
லா ரோசா நாடிகா என்ற பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது; பணக்காரர்களுக்கான ஓட்டல் இது. இந்த ஓட்டலுக்கு, ஒரு இளம்பெண், தன் காதலருடன் சாப்பிடச் சென்றார். அங்கு வந்த ஊழியர், இருவருக்கும், ஓட்டலில் என்னென்ன உணவு வகைகள் உள்ளன என்பதை குறிப்பிடும், 'மெனு கார்டை' கொடுத்தார்.
இளம் பெண்ணுக்கு கொடுத்த, 'கார்டில்' உணவு பொருட்களின் விலை குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது காதலருக்கு கொடுக்கப்பட்டதில், விலை குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓட்டல் முதலாளியிடம், 'இப்படி வெவ்வேறு, 'கார்டு'களை ஏன் தருகிறீர்கள்?' என, இளம்பெண் கேட்டார்.
அதற்கு அவர், 'இங்கு ஜோடியாக வருவோரில், ஆண்கள் தான், 'பில்'லுக்கு பணம் செலுத்துவர். பெண்கள், சாப்பிடுவதுடன் சரி; பணம் தருவது இல்லை. எனவே, ஜோடியாக வருவோரில், பெண்களுக்கு தரும், 'மெனு கார்டில்' விலையை குறிப்பிடுவது இல்லை...' என, கிண்டலாக பதில் அளித்தார். அந்த பெண்ணுக்கு அவமானமாகி விட்டது.
பெண்களை அவமதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதுமாகவும் கூறி, ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த இளம் பெண்ணுக்கு, 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்தும்படி, ஓட்டல் நிர்வாகத்துக்கு, கோர்ட் உத்தரவிட்டது. பெண்களை இளக்காரமாக கருதிய ஓட்டல் உரிமையாளர், அபராதத்தை செலுத்தி, அழுது புலம்புகிறார்.
— ஜோல்னாபையன்

