
மகனும், மருமகளும் அலுவலகம் சென்ற பின், ஊஞ்சலில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தாள் அபிராமி. வாசலில் வந்து நின்ற ஆம்புலன்ஸ், அவளது கவனத்தை கலைத்தது.
உரிமை கோராதவர், ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் சேவையை, அவள் செய்து வருவதால், இதுபோன்ற வாகனங்கள், அவள் வீட்டின் முன் நிற்பது வழக்கம்.
வண்டியிலிருந்து இறங்கிய ஆம்புலன்ஸ் டிரைவர், ''மேடம்...ரோட்டுல நடந்து வரும் போது, ஒருத்தர் மயங்கி விழுந்துட்டார்ன்னு எங்களுக்கு தகவல் வந்துச்சு. அவரை ஆஸ்பத்திரியில சேர்த்த ஒரு மணி நேரத்தில், நினைவு திரும்பாமலேயே இறந்துட்டார். அவர் சட்டைப் பையில, உங்க விலாசம் எழுதிய துண்டு சீட்டு இருந்துச்சு. ஒரு வேளை, உங்களுக்கு தெரிஞ்சவரா இருக்குமோன்னு தான், வழக்கமா செய்ய வேண்டியத எல்லாம் செய்துட்டு, பாடியை கொண்டு வந்திருக்கேன்,'' என்றான்.
அவன் கையிலிருந்த துண்டுச் சீட்டை வாங்கிப் பார்த்தாள்; தன் விலாசம் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவள், ''கொஞ்சம் கதவைத் திறங்க... யாருன்னு பாக்கலாம்,'' என்றாள்.
டிரைவர் ஆம்புலன்ஸ் கதவை திறக்க, பிரீசரில் இருந்த உடலைப் பார்த்தவளுக்கு, ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது. உடலில் இருந்த சக்தியெல்லாம், வெளியேறி விட்டதைப் போன்ற ஒரு உணர்வு, 'இந்த பாவிய இந்தக் கோலத்திலா பாக்கணும்....' என நினைத்தவளுக்கு, ஒரு கணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பிரீசரில் சடலமாக கிடந்தான் சிவராமன். முறுக்கு மீசையை, நாள்பட்ட தாடி மறைத்திருந்தது; சட்டையின் நிறம் இன்னதென்று தெரியாத அளவுக்கு, அழுக்கு படிந்திருந்தது.
பிணமாக கிடப்பவன் தனக்கு தாலி கட்டியவன் என்று கூற முடியுமா... சுதாரித்துக் கொண்டவள், துண்டுச்சீட்டை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அது டாக்டரம்மா கையெழுத்து. 'என்னைத் தேடி சிவராமன், டாக்டரம்மா வீட்டிற்கு போயிருக்கணும். அவங்ககிட்ட விலாசத்தை வாங்கி, என்னை தேடி வரும் வழியில் மயங்கி விழுந்திருக்கணும்...' என யூகித்துக் கொண்டவள், ''இவர் யாருன்னு எனக்கு தெரியல... இவரிடம், எப்படி என் வீட்டு விலாசம்...'' என்று இழுத்தாள்.
''மேடம்... இவருக்கு சொந்த பந்தம்ன்னு யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதனால, சாவு தன்னை நெருங்கிட்டதுன்னு உணர்ந்ததும், அப்படி செத்துட்டா அனாதைப் பிணமா போகக் கூடாதுன்னு, உங்க சேவைய கேள்விப்பட்டு, உங்க விலாசத்தை வாங்கி வெச்சிருக்கலாம்,'' என்று தன் யூகத்தை சொன்னான் டிரைவர்.
'நல்ல வேளை... நான் உளறி வைப்பதற்குள் இவனே இதற்கு ஒரு தீர்வு சொல்லி விட்டான்...' என நிம்மதி பெருமூச்சு விட்டவள், ''கொஞ்சம் இருப்பா... இந்த உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யறேன்,'' என்றவள், தன்னுடன் இணைந்து இந்த சேவையைச் செய்யும் மற்றொரு பெண்ணுக்கு போன் செய்து, ''இப்போ டிரைவர், ஒரு பாடிய கொண்டு வருவார். நான், அவசர வேலையா வெளியே போகணும். நீங்க கொஞ்சம் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துடறீங்களா... அடக்கம் செய்ய வேணாம்... எரிச்சிடுங்க. செலவுக்கு பணம் கொடுத்தனுப்பறேன்,'' என்றாள்.
''தம்பி... அவங்க, பாடியை இடுகாட்டுக்கு கொண்டு வரச் சொல்லிட்டாங்க; இந்த பணத்தை அவங்ககிட்ட கொடுத்திடுங்க,'' என்று பணத்தை நீட்டியவள், அவனுக்கும் தனியாக, 500 ரூபாய் கொடுத்தாள்.
ஆம்புலன்ஸ் போனதும், 'எந்தப் பெண்ணிற்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது...' என, எண்ணியவளுக்கு, இவ்வளவு நாட்களாக அவள் மனதில் உறங்கிக் கொண்டிருந்த, பழைய நினைவுகள் மேல் எழும்பியது.
அபிராமியின் அப்பா சமையல்காரராக வேலை செய்து வந்தார். வேலை இருந்தால் தான் வீட்டில் அடுப்பெரியும். மருத்துவம் பார்க்க வசதியில்லாமல், அபிராமியின் அம்மா விஷக் காய்ச்சலில் இறந்த போது, இவளுக்கு வயது, 10; அதன்பின், பாட்டியிடம் வளர்ந்தாள். சில ஆண்டுகளில், பாட்டியும் இறந்து விட, படிப்பு பாதியிலேயே நின்று போனது.
மனைவியும், தாயாரும் அடுத்தடுத்து இறந்து போன தால், 'தான் உயிரோடிருக்கும் போதே, அபிராமிய ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுத்துடணும். தாயில்லாத பெண், புகுந்த வீட்டிலாவது, கண் கலங்காமல் சந்தோஷமாக வாழ, கடன்பட்டாவது வசதியான இடத்தில கட்டிக் கொடுத்துடணும்...' என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு, நண்பரின் வடிவில், விதி விளையாடியது.
'நம்ம மிராசுதார் மகன் சிவராமனுக்கு, பெண் பாத்துக்கிட்டுருக்காங்க. நீ சரின்னா, அபிராமிக்கு அந்த இடத்தை ஏற்பாடு செய்துடறேன்...' என்றார்.
'அவன் சகவாசம் சரியில்லேன்னு கேள்விப்பட்டேனே...' என்று அபிராமியின் அப்பா இழுத்த போது, 'பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு வசதியிருக்கு. உன் மக அங்க ராணியாட்டம் இருப்பா... பணக்கார வீட்டு பிள்ளைன்னா, அப்படி, இப்படித் தான் இருப்பாங்க. கல்யாணமாயிட்டா எல்லாம் சரியாப் போயிடும்.
'நீ எதிர்பாக்கிற வசதியான மாப்பிள்ளை தேட, உனக்கு வசதியிருக்கா சொல்லு... கல்யாண செலவைக் கூட அவங்களே ஏத்துக்கிறாங்களாம். கட்டின புடவையோடு உன் மகள அனுப்பி வைச்சா போதும். வலிய வர்ற சீதேவிய தள்ளி விடாத சொல்லிட்டேன்...' என்று கூற, இது குறித்து அபிராமியிடம் அபிப்ராயம் கேட்டார் அப்பா.
'அப்பாவுக்கு பாரம் இல்லாமல் இருக்கணும். அதே நேரத்தில், உள்ளூரிலேயே திருமணம் செய்து கொண்டால், அப்பாவையும் பாத்துக் கொள்ளலாமே...' என நினைத்து, சம்மதித்தாள் அபிராமி.
திருமணம் முடிந்த பின்தான் தெரிந்தது, தான் எப்பேர்ப்பட்ட நரகத்தில் விழுந்து விட்டோம் என்று! முதலிரவன்றே குடித்து விட்டு வந்திருந்தான் சிவராமன். சிகரெட் நாற்றம் வேறு சகிக்கவில்லை.
வாரத்தில் ஓரிரு நாட்கள் தான் வீட்டிற்கு வருவான். மற்ற நாட்களில் பண்ணை வீட்டில், தொடுப்புகளுடன் கும்மாளம் அடிப்பான். அதுபற்றி அபிராமி ஏதாவது கேட்டால், அடி, உதை தான். அப்பாவிற்கு தெரிந்தால் வேதனைப்படுவாரே என நினைத்து, எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கிக் கொண்டாள். ஆனால், அபிராமி வீட்டு வேலைக்காரன் மூலம், விஷயத்தை அறிந்த அப்பா, 'வசதியான இடம்ன்னு, உன்னை பாழுங் கிணத்திலே தள்ளிட்டேனே...' என்று புலம்பியவர், 'நான் வந்து சிவராமனைக் கேட்கிறேன்...' என்றார்.
'வேணாம்பா... அவர் உங்கள அவமானப் படுத்தினா என்னால தாங்க முடியாது...' என்று மறுத்து விட்டாள் அபிராமி.
இது தெரிந்த சிவராமன், 'என்ன... உங்கப்பன்கிட்ட என்னைப் பற்றி சொல்லி அழுதியாமே... உனக்கு அவ்வளவு திமிரா...' என்று கேட்டு, சிகரெட் துண்டால் சூடு வைத்து சித்ரவதை செய்தான்.
'இவனை பிரிந்து பிறந்த வீட்டிற்கு சென்றால், வாழாவெட்டி என்று ஊர் தூற்றும். வயதான காலத்தில் அப்பாவுக்கு பாரமாக இருக்கணுமே...' என நினைத்து, எல்லா துன்பங்களையும் பொறுத்து வந்தாள். ஒரு கட்டத்தில், அவன் அடி உதைகளை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தான் கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்து, அம்முயற்சியை கைவிட்டாள். கணவனின் கொடுமைகளுக்கு இடையே மகனும் பிறந்தான்.
இந்நிலையில், மகளை நினைத்து வருத்தப்பட்டே, உடல் நிலை பாதிக்கப்பட்டு, அவளுடைய அப்பாவும் இறந்து விட்டார்.
அப்பாவின் இறப்புக்கு சென்னையில் இருந்து வந்திருந்த அம்மா வழி உறவினரிடம், எல்லாவற்றையும் கூறி அழுதவள், 'மாமா... எங்கப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருப்பார். இந்தப் பாவிகிட்ட நான் படுற பாட்டை காண சகிக்காமலேயே போய் சேர்ந்துட்டார். நானும், அவரு வருத்தப்படக் கூடாதுன்னு தான் இத்தனை நாளும், இந்த அயோக்கியனோட குடும்பம் நடத்தினேன். இனி, இந்த ஆளோட ஒரு நிமிடம் கூட வாழப் போறதில்லன்னு தீர்மானிச்சுட்டேன்.
'நீங்க தான், என்னை சென்னைக்கு அழைச்சுட்டுப் போயி, எதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்கணும். பத்து பாத்திரம் தேய்ச்சாவது, என் பிள்ளையக் காப்பாத்திடுவேன்; மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க...' என மன்றாடினாள்.
அவளின் நிலையைக் கண்டு மனமிறங்கியவர், 'கவலைப்படாதேம்மா... எனக்கு தெரிஞ்ச டாக்டர், சமையலுக்கு ஆள் வேணும்ன்னு ரொம்ப நாளா, கேட்டுக்கிட்டிருக்கார். கணவன், மனைவி ரெண்டு பேருமே பெரிய டாக்டர்ங்க; உனக்கு சம்மதம்ன்னா சொல்லு சேர்த்து விடுறேன். ஆனா, உன் புருஷனை மீறி எப்படி வருவே...' என்றார்.
'அதை நான் பாத்துக்கறேன் மாமா; இதுக்கு மேல் நான் கோழையாக இருக்க மாட்டேன்...' என்றாள்.
அபிராமியின் முடிவைக் கேட்ட சிவராமன், கோபத்தில் துள்ளிக் குதித்தான்.
'எத்தனை நாளைக்கு, நானில்லாம வாழ்ந்திடப் போறேன்னு பாத்திடறேன்; என்னிக்காவது ஒருநாள், என் காலில் வந்து கதறத்தான் போறே...' என்று சவால் விட்டான்.
'அப்படி ஒரு நிலை ஏற்பட்டா, கடலில் விழுந்து உயிரை மாய்ச்சுப்பேனே தவிர, இந்த மண்ணை மீண்டும் மிதிக்க மாட்டேன்...' என்று கூறி, கைக்குழந்தையுடன் சென்னைக்கு வந்தவள் தான் அபிராமி.
அபிராமியின் நேர்மை, கடுமையான உழைப்பைக் கண்ட டாக்டர் தம்பதியினர், அவளை நன்றாக கவனித்துக் கொண்டதுடன், அவள் மகனை படிக்க வைக்க உதவியும் செய்தனர்.
இடையில் ஒருநாள், எப்படியோ அவள் இருக்கும் இடம் தெரிந்து வந்து கலாட்டா செய்தான் சிவராமன். டாக்டர் தம்பதியினர் அவனை விரட்டியடித்து, 'திரும்பவும் வந்தால் போலீசில் பிடித்துக் கொடுப்போம்...' என மிரட்டி அனுப்பி விட்டனர்.
மகன் கோபுவுக்கு விவரம் தெரிந்த பின், எல்லா விஷயத்தையும் எடுத்துக் கூறி, 'நீ நல்லா படிச்சு, முன்னுக்கு வரணும்கிறதுக்காகத் தான் இதை சொல்றேன்...' என்றாள்.
கோபுவும் அம்மாவின் கஷ்டம் உணர்ந்து நன்றாக படித்தாலும், அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில், 'தன் அப்பா உயிரோடு இருக்கையில், சுமங்கலியான அம்மா ஏன் பொட்டு வைத்துக் கொள்றதில்ல...' என்று நினைப்பான். இந்த விஷயம் அவன் மனதை நெருடிக் கொண்டேயிருந்ததால், ஒருநாள், அதைப்பற்றி தன் அம்மாவிடம் கேட்டான்.
'திருமணம் செய்துக் கிட்டவங்க தான் சுமங்கலின்னா, திருமணமே செய்துக்காம இருக்காங்களே... அந்த பெண்கள் எல்லாம் சுமங்கலி இல்லயா... கல்யாணம் ஆனதினால மட்டும் ஒரு பெண் சுமங்கலி ஆகிடமாட்டா. எவ ஒருத்தி, புகுந்த வீட்டிலே சகல உரிமைகளுடன் சந்தோஷமா குடும்பம் நடத்தறாளோ, அவதான் உண்மையான சுமங்கலி. ஆணாதிக்கத்தில் சிக்கி மன உளைச்சலோட வாழ்ற எல்லாருமே பேருக்குத் தான் சுமங்கலிகள்.
'உங்க அப்பாவ போல ஒருத்தன கட்டிக்கிட்டவளைப் போய் கேட்டுப் பார்... 'நான் சுமங்கலியா இருக்கிறதும் போதும், படற அவஸ்தையும் போதும்'ன்னு சொல்வா. என்னைப் பொறுத்தவரை, கணவன் இல்லாதது கூட, ஒருத்திக்கு மகிழ்ச்சி தரும்ன்னா, அவளும் சுமங்கலி தான். எப்போ பொட்டு வைச்சுக்கணும்ன்னு எனக்குத் தெரியும்; படிக்கிறதை விட்டுட்டு உனக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்...' என்றாள்.
ஒரு சாதாரண குங்குமப் பொட்டு, தன் தாயின் மனதை, இவ்வளவு பாதிக்கும் என, அவன் நினைக்கவில்லை. 'நான் கேட்டது உன் மனசை புண்படுத்தியிருந்தா, என்னை மன்னிச்சுடும்மா... உன் நிறத்துக்கும், அழகான வட்ட முகத்துக்கும், அகலமா குங்குமப் பொட்டு வச்சா, அம்சமா இருக்குமேன்னு தான் சொன்னேன்...' என்று தழுதழுத்தான் கோபு. அதற்குப் பின், இதைப் பற்றி அம்மாவிடம் அவன் பேசுவதில்லை.
கோபுவுக்கு வேலை கிடைத்ததும், தன் அம்மாவை சமையல் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டான். சொந்தமாக வீடு வாங்கிய கையோடு, கோபுவுக்கு திருமணமும் முடித்து விட்டாள் அபிராமி.
அதன் பின், அவளுக்கு நிறைய ஓய்வு கிடைத்ததால், ஆதரவற்றோர் பிணங்களை அடக்கம் செய்யும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
மொபைல் போன் அழைப்பில், பழைய நினைவுகளிலிருந்து மீண்டவள், போனை எடுத்தாள். மறுமுனையில், ''மேடம்... சடலத்தை முறைப்படி எரியூட்டிட்டேன்,'' என்றாள் அவளுடன் இணைந்து சேவை செய்யும் சமூக சேவகி.
''ரொம்ப நன்றி,'' என்று கூறி மொபைல் போனை துண்டித்து விட்டு எழுந்தாள்.
'உலகில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, தறிகெட்டு நடந்து, கட்டிய மனைவியை வதைத்த ஆம்பிளைங்களுக்கு, அவளுடைய அருமை, கடைசி காலத்தில் தெரிவது மட்டும் மாறவில்லை. அப்படித்தான், எல்லாவற்றையும் இழந்து, இந்த ஆள் தஞ்சம் புக என்னைத் தேடி வந்திருக்கணும். அப்படி வரும் போது, வழியில் மயங்கி விழுந்திருக்கலாம்...' என எண்ணியவள், குளிப்பதற்கு, 'கெய்சரை' ஆன் செய்தாள்.
நிதானமாக தலைக்கு குளிக்க ஆரம்பித்தாள். இதுவரை, மனதில் புதைந்திருந்த துக்கம், கடந்த கால கசப்பான நிகழ்வுகள் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கரைந்து வெளியேறுவது போல் உணர்ந்தாள்.
மழை பெய்த பின் தெரியும் தெளிவான வானம் போல, அவள் மனம் நிர்மலமாக இருந்தது. குளித்து முடித்ததும், மனதுக்குள் ஒருவித நிம்மதி பரவ, கண்ணாடி முன் நின்று, நெற்றியில் பெரிதாக குங்குமத்தை இட்டுக் கொண்டவள், 'கோபு சொன்னது போல் குங்குமம் வைத்ததும், என் முகம் அழகாகத்தான் இருக்கிறது...' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ரா.சந்திரன்
தமிழ்நாடு மின் வாரியத்தில் மதிப்பீட்டு அலுவலராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், இவர் எழுதிய சிறுகதை, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.