/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விவ'கார'மானவர்களுக்கு விடை கொடுப்போம்!
/
விவ'கார'மானவர்களுக்கு விடை கொடுப்போம்!
PUBLISHED ON : நவ 15, 2015

நேர விரயங்களுள் முக்கியமான பத்தை பட்டியலிட்டால், அவற்றுள், முதலில் இருப்பது எதிரிகளுடன் மல்லுக்கட்டுவது தான்!
ரயில், பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில், டாக்சியில் பயணிக்க நேர்ந்தால், பலருக்கும், இவ்வாகன ஓட்டிகளுடன் மல்லுக்கட்டிய அனுபவமே மிஞ்சுகிறது.
இதோடு விஷயம் முடிந்து விடுவது இல்லை. அந்த ஓட்டுனரோடு நடந்த விவாதங்கள், 'பிளாஷ்பேக்' போட்டபடி பலமுறை நெஞ்சிலேயே ராட்டினமாய் சுழல்கின்றன; திரும்பத் திரும்ப வலம் வருகின்றன. அவர் பேசிய விஷயம் மூலம் நாம் காயப்பட்டிருந்தால், அதுவேறு பாடாய்ப் படுத்தி தொலைக்கிறது.
'சே... என்ன பேச்சு பேசிப்புட்டான் அவன்...' என நினைக்க நினைக்க, மனம் பொருமுகிறது. 'சக்கையாய் நம்மை ஏமாத்திட்டான்; நம்மை ஏகமாய் முட்டாளாக்கி விட்டானே...' என, ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது.
என்ன நடந்தாலும், அதை மனதிலிருந்து உதிர்த்து எறிந்து விடுகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் இதோடு முடிகிறதா? இதன் பாதிப்பு, அன்று முழுவதும், ஏன் பின்னரும் தொடர்கிறது.
இதனால், யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. பிறரது சிறு சிறு செயல்கள் கூட, எரிச்சலில் முடிகின்றன.
ஒரே ஒரு காலைப் பொழுதில் கடந்து போகிற ஓர் ஓட்டுனரே, இத்தகைய மனிதர்களை இந்தப் பாடுபடுத்தினால், காலம் பூராவும் நம்மோடு உறவென்றும், நட்பென்றும், தொழில் என்றும் பயணிக்கின்றவர்களை எண்ணிப் பாருங்கள். இவர்கள் மரியாதை தெரியாதவர்களாகி விட்டால், இவர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் இவர்களின் அறியாமையை, என்னவென்று சொல்வது?
வாழ்க்கைப் பாதை என்பது ஊர்ப்பயணம் போன்றது தான். சில நேரங்களில், சில ஊர்களுக்கு அவசியம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில், நாம் விரும்பும் பாதையில் தான், பயணிக்க இருக்கிறோம்.
ஓர் ஊருக்கு இப்படியும் போகலாம்; மாற்றுப் பாதையிலும் போகலாம் என்கிற வாய்ப்பு இருக்குமானால், எந்த வழி சிறந்தது, எது நல்ல பாதை, எது பாதுகாப்பானது, எது சுற்றுப்பாதை என்றெல்லாம் கேட்கிற நமக்கு, நம் வாழ்வில் குறுக்கிடுகிற விவகாரமானவர்களைத் தவிர்த்து, பயணிக்க வேண்டும் என்கிற உணர்வு, ஏனோ ஏற்படுவது இல்லை.
கல்லும், முள்ளும், பள்ளமும், சகதியும் நிறைந்த பாதை வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கத் தெரிந்த நமக்கு, நம்மைக் குறுக்கிடும் விவகாரமானவர்களிடம் இருந்து விலகிப் போகும் எண்ணம், ஏனோ வருவது இல்லை.
மாறாக, விவகார மனிதர்களை அடக்கி, ஒடுக்க வேண்டும்; அவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேகத்தில், இவர்களோடு மல்லுக்கட்டுகிற பாதையையே, பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இது அவசியமில்லை. 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது தான் சரி. இந்த துஷ்டனை வெல்ல, இன்னொருவன் எங்கோ பிறந்திருக்கிறான்; ஆக, இவனை வெல்வது, அவர் வேலையே தவிர, நம் வேலை அல்ல!
இவர்களோடு மோதிக் கொண்டிருப்பதிலேயே, நம் ஆற்றலைச் செலவிட்டு விட்டால், அப்புறம் சாதிக்க நினைப்பவற்றைச் சாதிக்க முடியாதபடி, சக்தியற்றுப் போய் விடும் வாய்ப்பு இருக்கிறது.
உடம்பில் உள்ள கலோரிகள் போலவே, மனதிற்கும் எல்லை (கலோரி)கள் உண்டு. இவை நம் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டுமே தவிர, வீணே மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதில் அல்ல!
லேனா தமிழ்வாணன்