PUBLISHED ON : மார் 20, 2016

முழங்காலுக்கிடையில், தலையைப் புதைத்து, சத்தமே எழாமல், உடல் குலுங்க அழும், அம்மாவையே பார்த்தாள் தாமரை. மனசு பொங்க, தாயின் அருகே அமர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தாள். உதடுகள் துடிக்க, நடுங்கும் கரங்களினால், ஆதுரமாய் மகளின் கைகளைப் பற்றினாள் இந்திரா.
''அழாதம்மா...'' என்றாள் தாமரை. அடுத்த கணம், அடக்க மாட்டாமல் வெடித்துக் கதறிய சத்தம் கேட்டு, உள்ளேயிருந்து ஓடி வந்தனர், தேவகியம்மாளும், சந்துருவும்!
''யே தாமரே... உனக்கு எத்தனை முறை சொல்றது... அவகிட்டே போகாதன்னு... அவ பைத்தியம்டீ,'' என்று எரிந்து விழுந்தாள், பாட்டி தேவகி.
''இப்படி வா தாமரை...'' என்றான் கண்டிப்பான குரலில் சந்துரு.
இருவரையும் சட்டை செய்யாமல், தாய்மையின் கனிவுடன், அம்மாவின் தலையை, தோளில் சாய்த்து, அவளின் கன்னங்களை வருடினாள் தாமரை.
''பாத்தியாடா உன் பொண்ணோட திண்ணக்கத்த... இந்த பைத்தியக்காரி, எந்த நேரத்துல என்ன செய்வாளோன்னு நானே பயந்துட்டு இருக்கேன்; இதுல நாள் முழுவதும் இதே கதை தான்... நான், உன் பொண்ண கவனிப்பேனா இல்ல வீட்டு வேலைய பாப்பேனா...'' என்றாள் தேவகி.
''தாமரை... அவ பக்கம் போகாதேன்னு சொல்லியிருக்கேன்ல...'' என்றான் சந்துரு.
''ஆஹ்ஹ்ஹா... அப்படியே ஒம்பொண்ணு உன் பேச்சை கேட்டுறப் போறா... ஒம்பது வயது கொமரு... வீட்டுல ஒரு காரியம் செய்றதுல்ல. இந்த வயசுக்கே நெஞ்சுரம் பிடிச்சு அலையுதே, இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா என்ன ஆட்டம் ஆடுமோ...'' என்று அங்கலாய்த்தாள் பாட்டி.
''அம்மா... கொஞ்சம் சும்மாயிரு...'' என்று தாயை அதட்டினான் சந்துரு.
''நான் வேணா பேசலப்பா; ஆனா, ஊர் வாயை மூட முடியுமா... இன்னிக்கோ, நாளைக்கோ இவ பெரியவளானா, கல்யாணம் பேசணும்; பைத்தியக்காரி தான் பொண்ணோட அம்மான்னா, சம்பந்தம் வருமா... வயித்தை பத்திக்கிட்டு எரியுது,'' என்றாள்.
''வா இப்படி,'' மகளின் கையை எரிச்சலுடன் பிடித்து இழுத்தான் சந்துரு. திமிறி கையை உதறினாள் தாமரை.
'ஒன்பது வயசுக் குழந்தைக்கு இத்தனை பலமா...' என்று திகைத்தான், சந்துரு.
அம்மாவை விட்டு விலகி, வேகமாக எழுந்து வந்தவள், ''அப்பா... இன்னொரு முறை உங்கம்மா, எங்கம்மாவ பைத்தியக்காரின்னு சொன்னா, அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது,'' என்றாள் கோபத்துடன் தாமரை.
''என்னடி செய்வே... அப்படித்தான் சொல்வேன்; ஒரு முறை இல்ல நூறு முறை, ஆயிரம் முறை சொல்வேன். உங்கம்மா பைத்தியம்னு... உங்கம்மா... பை...'' என்று தேவகி முடிக்கு முன், மேஜை மேலிருந்த எவர்சில்வர் சொம்பையும், டம்ளர்களையும் எடுத்து, வேகமாய் தரையில் விசிறினாள் தாமரை.
அது, தேவகியின் காலடியில் உருள, ''டேய் சந்துரு... உன் பொண்ணுக்கும் பைத்தியம் ஒட்டிகிச்சு,'' என்று அலறினாள்.
''ச்சே... வாயை மூடும்மா...'' என்று அதட்டினான் சத்துரு.
பாட்டியின் கைளை இறுக பற்றி, தரதரவென வாசலுக்கு இழுத்து வந்தாள் தாமரை.
''விடுடீ... என்னை...''
''இங்க பாரு... எவ்ளோ பெரிய கோலம்... இன்னைக்கு காலையில எங்கம்மா போட்ட கோலம் இது. பைத்தியம் தான், இப்படி கோலம் போட்டு, கலர் போடுமா... சொல்லு,'' என்றாள். பின்னாலேயே ஓடி வந்த சந்துருவும், கோலத்தை பார்த்து, அப்படியே அசந்து நின்றான்.
மீண்டும், அவளை நடுக்கூடத்துக்கு இழுத்து வந்தவள், ''பூஜையறை எப்படி இருக்குன்னு பாரு...'' என்றாள். அறையில், பித்தளை குத்துவிளக்கு பொன்னாய் மின்ன, முத்துச் சுடராய் ஒளி சுடர் விட்டது. சுவாமி படங்களை, புத்தும் புது மலர்கள் அலங்கரிக்க, ஊதுபத்தியின் வாசம், மெதுவாக சுழன்று, வெளியே எட்டிப் பார்த்தது.
''பைத்தியம் தான் இப்படி பூஜை செய்யுமா... எங்கம்மா இல்லாதப்ப பூஜை ரூம் இப்படியா இருந்துச்சு?'' என்றாள் தாமரை.
''உன்னை கவனிக்கவும், வீட்டு வேலையுமே இடுப்பை நெரிக்குது. இதுல பூஜை அறையை அலங்காரம் செய்ய எங்க நேரம் இருக்கு...'' என்று முணுமுணுத்தாள் தேவகி.
''எங்கம்மாவ பைத்தியக்காரின்னு சொல்றியே... யாரால, எப்படி, எங்கம்மா பைத்தியம் ஆனாங்கன்னு நினைச்சு பாத்தியா... கொஞ்சம் கூட நன்றியே இல்லாம பேசுறீயே... அன்னைக்கு மட்டும் எங்கப்பாவ, எங்கம்மா கைய பிடிச்சு இழுத்து தள்ளலன்னா என்ன ஆகியிருக்கும்... இன்னிக்கு நீயும், எங்கப்பாவும் இப்படி பேசிகிட்டு நிற்பீங்களா...'' என்றாள்.
சந்துருவுக்கு மகளின் கேள்வி பொட்டிலடித்தாற்போல் இருந்தது. பின்னால் வரும் வண்டியை கவனிக்காமல், கண்ணிமைக்கும் வினாடியில், கையைப் பிடித்து தள்ளி விட்டவள் இந்திரா தான். என்ன, ஏது என்று சுதாரிக்கும் முன், வேகமாய் வந்த வண்டி, இந்திராவை தூக்கியெறிந்து, தன் போக்கில் போய் விட்டது.
தலையில் பட்ட அடி, அவள் நினைவை, மூளையை மழுங்கச் செய்து, புரட்டிப் போட்டது. இயல்பாக இல்லாமல் சிரிப்பதும், பாத்திரங்களை வீசுவதும், எதிர்ப்பட்டவர்களை அடிப்பதுமாயிருக்க, பயந்து போனான் சந்துரு. அக்கம் பக்கத்தவர் நச்சரிப்பும் சேர்ந்து கொள்ள, மனநல காப்பகம் அனுப்பப்பட்டாள் இந்திரா.
இதோ நான்கு ஆண்டுகள் கழித்து, வீடு வந்தவளை பைத்தியக்காரி பட்டம் விடாமல் வரவேற்றது.
நலம் விசாரிக்க வந்தவர்கள் கூட, எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதும், தேவகியிடம் 'குசுகுசு'வென பேசுவதும், 'பத்திரம்... ஜாக்கிரதை... பைத்தியத்துக்கு வைத்திய மேது...' என்பதும் இந்திராவின் காது படவே நடந்தது.
சாதாரண செயல்கள் கூட, இந்திரா செய்யும் போது, அதற்கு, 'பைத்தியம்' என்ற வர்ணம் பூசப்பட்டு, விமர்சனத்துக் குள்ளானது. சிரித்தால், பேசினால், நடந்தால், உட்கார்ந்தால், ரசத்தில் உப்பு தூக்கலானால் பைத்தியம் என்ற சந்தேகம். எதிர்வீட்டு பாப்பாவுக்கு கை நீட்டினால், எதிர்வீட்டுக்காரிக்கு சந்தேகம், தெருவில் இறங்கி கோலம் போட்டால், அடுத்த வீட்டு பெண்ணுக்கு சந்தேகம்.
இந்திராவுக்கு, சூழலே பெரும் சித்ரவதையாக இருந்தது. தாமரை ஒருத்தி தான், கொஞ்சம் இயல்பாக இருந்தாள். ஐந்து வயது குழந்தையாக விட்டுப் போனவளை, ஒன்பது வயது சிறுமியாக பார்க்கிறாள்.
தாமரையும் முதலில் ஒட்டவில்லை தான். மெல்ல இயல்பாகி விட்டாள். தாயின் ஸ்பரிசமும், தாய் மடி சுகமும், தொப்புள் கொடி உறவல்லவா! தாயின் அத்யந்த தோழியானாள்; அம்மா சுகம், தாமரைக்கு வேண்டியிருந்தது.
''அப்பா... அன்னிக்கு டாக்டர் என்ன சொன்னாரு... அம்மா பூரணமா குணமாகி, நார்மலாயிட்டாங்க. ஆனா, பழைய நாட்களை ஞாபகப்படுத்தற மாதிரி நடந்துக்காதீங்க, முடிஞ்சா புது வீட்டுக்கு போங்க, கொஞ்ச நாள் ஆனதும், பழகிடும்ன்னு சொல்லி, குறிப்பா, 'பைத்தியம்'ங்கிற வார்த்தைய மட்டும் சொல்லிடாதீங்க; அது மனச பாதிக்கும்ன்னு சொல்லல...
''ஒருவேளை உங்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருந்தா, அம்மா, உங்ககிட்ட இப்படித்தான் நடந்துக்குவாங்களா... உங்கள யாராவது பைத்தியம்ன்னு கூப்பிட அனுமதிப்பாங்களா...
''அம்மா பாவம்ப்பா... எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க. நாம தானே அவங்களுக்கு துணையா, ஆதரவா இருக்கணும். நாம காட்டற அன்பும், ஆதரவும் தானே அவங்களுக்கு தைரியம் தரும்,'' என்றாள் தாமரை.
சந்துருவுக்கு யாரோ, 'பளீர் பளீர்' என்று கன்னத்தில் அடித்தாற் போலிருந்தது. தாமரையையே வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
''அம்மா எல்லாரையும் போல இல்லையேன்னு எவ்ளோ நாள், நான் அழுதிருக்கேன். இப்பத்தான் கடவுள் என் அம்மாவ, என் கிட்டே திருப்பி கொடுத்திருக்கார். திரும்ப ஏடா கூடமா பேசி, எங்கம்மாவுக்கு ஏதாவது நடந்தா...என்னால தாங்கவே முடியாது. எனக்கு எங்கம்மா வேணும்...'' என்று கூறி, தரையில் மடிந்து உட்கார்ந்து, கைகளால் முகத்தை மூடி அழுதாள் தாமரை.
மெழுகு பொம்மை ஒன்று உருகுவது போல, வெம்மையாக தகித்தது, அந்த அழுகை.
மனைவியையும், மகளையும் மாறி மாறிப் பார்த்தான் சந்துரு. அகிலத்தின் அத்தனை அழுகையும், தன் முன்னே பிரவகிப்பது போன்ற உணர்வில் தள்ளாடினான்.
இந்திராவுடனான இணக்கமான நாட்கள், இனிமையான தாம்பத்யம், 'சரசர'வென தோன்றி, மறைந்தன. 'இந்த உயிரே, இந்த வாழ்க்கையே அவள் போட்ட பிச்சை தானே... எப்படி மறந்தேன். என் மகள் தகப்பன் சாமியா...' மனதுள் ஏதோ ஒரு அடைப்பு விடுபட, கழுவி விட்ட வீடு போல சுத்தமாக இருந்தது மனசு.
ஜன்னல் திறந்ததும், வெளிச்சமும், காற்றுமாய், 'ஜிலுஜிலு'வென வருவது போல், மனசு ஊஞ்சலாடியது.
தாமரையை நெருங்கி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, தன்னோடு அணைத்துக் கொண்டாள் இந்திரா.
கண்கள் பனிக்க, தரையில் அமர்ந்து, ஒரு கையில் மகளையும், மறுகை நீட்டி மனைவியையும் இழுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான் சந்துரு.
மகளின் நெற்றியில் முத்தமிட்டான். மகள் நிமிர்ந்து பார்த்து, பூவாய் சிரித்தாள். மனைவியின் கன்னங்களில் இதழ் ஒற்றினான். கணவனின் கன்னங்களில் வழிந்த நீரை, விரல்களால் துடைத்தாள் இந்திரா. மூவருமே புன்னகை பூத்தனர்.
பட்டாம் பூச்சிகளின் சிறகடிப்பு போல, மெலிதானதொரு உல்லாசம், அங்கே இழையோடியது!
ஜே.செல்லம் ஜெரினா

