
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தது, ஐஸ்கிரீம். நம் நாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவர்.
இவர்களை தவிர, இளைஞர்களும், வயதானவர்களும் ஐஸ்கிரீமை ருசித்து சாப்பிடுவர். அவர்களுக்கென்றே சில நாடுகளில் தனி வகை ஐஸ்கிரீம்கள் உண்டு. அவற்றில் சர்க்கரையின் பங்களிப்பு குறைவாக இருக்கும். சில நாடுகளில், ஐஸ்கிரீம் கலப்பு பற்றி, பல கடுமையான சட்டங்கள் உண்டு.
* உலகத்திலேயே மிக அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், அமெரிக்கர்கள் தான். இவர்கள், ஆண்டுக்கு, ஒருவர், 28 லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்
* அடுத்து, நியூசிலாந்து. அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 20 லிட்டர் ஐஸ்கிரீமை, தனி நபர் சாப்பிடுவதாக கூறப்படுகிறது
* ஆஸ்திரேலிய மக்கள், ஆண்டுக்கு, 18 லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர்
* ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மானியர்கள் தான் மிக அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர்
* ஜப்பானில், 5ல் இருவர், வாரம் இருமுறையாவது ஐஸ்கிரீம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 'அசுக்கி' என்று ஒரு வகை ஐஸ்கிரீமை, 50 - 60 வயது, முதியவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்
* பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. பாகிஸ்தானில் மிக பிரபலமான வகை, 'ஈட் மோர்' ஐஸ்கிரீம். இது, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலம். 'யுன்னி' என்ற மற்றொரு ஐஸ்கிரீமும் மிக பிரபலம். இவை தவிர, மாமூலான பிஸ்தா, குல்பா, வெனிலா, சாக்லெட் ஐஸ்கிரீம்களும் பிரபலம்
* மற்ற ஐரோப்பிய நாடுகள் போலில்லாமல் ஸ்பெயினில், கோடை காலத்தில் மட்டுமே ஐஸ்கிரீம் சாப்பிடப்படுகிறது. குளிர் காலத்தில், ஐஸ்கிரீம் கடைகளில், சூடான பானம் மற்றும் சாக்லெட் விற்பனை செய்யப்படும்
*பிரிட்டனில், 1.4௦ கோடி இளைஞர்கள், 'ட்ரீட்' என்றாலே தேர்வு செய்வது, ஐஸ்கிரீமை தான்
* அமெரிக்காவில் ஐஸ்கிரீம்கள், க்ரீம், சர்க்கரை வாசனை நிறைந்தது. முட்டையால் ஆன ஐஸ்கிரீம், 'ப்ரோசன் கஸ்டர்ட்ஸ்' என, அழைக்கப் படுவதுடன், 'பிரெஞ்ச் ஐஸ்கிரீம்' என்ற செல்ல பெயரும் உண்டு. அமெரிக்காவில், வெனிலா ஐஸ்கிரீம் தான் மிக அதிகமாக விற்பனையாகும்
* தென்கிழக்கு ஆசியாவில், துரியன் பழங்கள் மிக பிரபலம். எனவே, இங்கு துரியன் பழ ஐஸ்கிரீம் மிக பிரபலம். ஆனால், அதன் வாசனை பலருக்கு பிடிக்காது. எனவே, வேறு சில வாசனைகளை இணைத்து சுவையாக வழங்கி, மக்களை அசத்துகின்றனர்
* நியூசிலாந்தில் உள்ள ஒரு தொடர் ஐஸ்கிரீம் கடையின் பெயர், 'ஹாக்கி பாக்கி!'
* இந்தியாவில், பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவது, 'குல்பி' வகை ஐஸ்கிரீம்.
ராஜி ராதா

