sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 17, 2020

Google News

PUBLISHED ON : மே 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரிக்கு —

என் வயது, 60. கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

மகளுக்கு, 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள், மருமகன் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். திருமணத்திற்கு முன் மகள், கல்லுாரியில் விரிவுரையாளர் வேலை பார்த்து வந்தாள். திருமணம் முடிந்து வெளிநாடு சென்று விட்டதால், வேலையை விட்டு விட்டாள். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள், இந்தியா வந்து போவர்.

இப்போது, தந்தையின் அறிவுரையால் வெளிநாட்டிலிருந்து, சென்னை வந்து வேலை பார்க்கிறார், மருமகன். குடும்பமும் இங்கு வந்து விட்டது. மருமகன், மிக நல்லவர். எவ்வித கெட்ட பழக்கமும் கிடையாது. மரியாதை தெரிந்தவர். இந்தியா வந்த பின், சிறிது சிறிதாக அவரிடம் மாற்றம் தெரிந்தது.

தாய், தந்தையரை போற்றி வழிபடுபவர். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பது, அவருக்கு தான் பொருந்தும். அது தவறில்லை. ஆனால், மகன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, மகனையும், மருமகளையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பது எந்த தாய், தந்தைக்கும் அழகில்லை. இதற்கு, மகனுக்கு திருமணம் செய்யாமல், தனக்கு ஊழியம் செய்ய வைத்துக் கொண்டிருக்கலாம்.

சிறிது சிறிதாக, மகனின் மனதில், என் மகளை பற்றியும், குடும்பத்தை பற்றியும் கேவலமாக சொல்லி, எங்களை பிடிக்காமல் செய்து விட்டார். மகளை சமையல்காரியாகவும், வேலைக்காரியாகவும் நடத்துகிறார் என்று அறிந்தபோது, பெற்ற வயிறு, பற்றி எரிகிறது.

மகள், மிகவும் பொறுமைசாலி. அவளின் மாமியாரும் ஒரு பெண்தானே. அந்த அம்மாவிடமும் இதை பற்றி சொல்லியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

மகளின் மாமனார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். படித்தவர்கள் இப்படி நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது. என் மகளுக்கு நீங்கள் தான் நல்ல வழி காட்ட வேண்டும்.

இப்படிக்கு,

 சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

குடிப்பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ இல்லாத ஆண்கள், நல்ல கணவர்களாக இருப்பர் என, உத்தரவாதம் கொடுக்க முடியாது. தீயபழக்க வழக்கங்கள் இல்லாத பல, 'சாடிஸ்ட்'களை, என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.

நல்ல கணவன், தன் மனைவியின் இருப்பை அங்கீகரிப்பான்; அவளின் நல்ல மற்றும் தீயகுணங்களை அனுசரித்து போவான்; குடும்பத்திற்குள் நடக்கும் அனைத்துக்கும் பொறுபேற்பான்; மனைவியின் மீதான சகலவிதமான தாக்குதல்களை, கேடயமாக நின்று எதிர் கொள்வான். மொத்தத்தில் அர்த்தநாரீஸ்வரனாக நின்று, மனைவி தன்னில் பாதி என்பான்.

ஓர் ஆண், தன் பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்தபடியே, மனைவிக்கு நல்ல கணவனாக திகழ முடியும். விலாங்கு மீன் போல் பாம்புக்கு தலையையும், மீனுக்கும் வாலையும் காட்ட வேண்டாம். இரண்டு பக்கமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்.

திருமணமான முதல் ஆண்டிலேயே, ஓர் ஆண், பெற்றோர் பக்கமும் சாயாமல், மனைவி பக்கமும் சாயாமல், நடுநிலையாக நிற்க கற்று கொண்டான் எனில், இருதரப்பும் உள்நாட்டு போரில் ஈடுபடாமல், அமைதி காக்கும்.

பெற்றோரிடம், 'என் மனைவி பற்றி எந்த அவதுாறும் கூறாதீர்கள்...' எனவும், மனைவியிடம், 'என் பெற்றோர் பற்றி எந்த, 'நெகடிவ்' கருத்தையும் என்னிடம் கூறாதே...' எனவும், எச்சரிக்க வேண்டும்.

பெற்றோர் - மனைவிக்கிடையே எதாவது பிரச்னை எனில், மனசாட்சிபடி தீர்ப்பு வழங்க வேண்டும்.

உன் மகளை விட்டு, மருமகனிடம் மனம் விட்டு பேச சொல்.

'அன்பு கணவனே, உங்கள் பெற்றோரை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்கள் உங்களிடம் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் இல்லாதது, பொல்லாததை சொல்லிக் கொடுக்கின்றனர்.

'இன்றைக்கு நீங்கள் என்னை வேலைக்காரியாக, சமையல்காரியாக நடத்தினால், நாளை உங்கள் மகள்களை, மருமகன்கள், அப்படித்தான் நடத்துவர். என்னையும், உங்கள் பெற்றோரையும் சமமாக பாவியுங்கள்.

'உங்கள் பெற்றோர், தொடர்ந்து பிரச்னை செய்தால், தனிக்குடித்தனம் போய் விடுவோம், வாருங்கள். நீங்கள் திருமணம் செய்தது, என்னை மட்டும் தான்; பெற்றோரையும் சேர்த்து அல்ல.

'என் பெற்றோர் எப்படி இருந்தால், உங்கள் பெற்றோருக்கு என்ன? இரண்டும் கெட்டானாக இருக்காதீர்கள். உண்மையின் பக்கம் துணிந்து நில்லுங்கள்...' என, கூறட்டும்.

அதேநேரத்தில், மகள், தன் மாமனார், மாமியாரிடம் எதாவது வகையில் முட்டல் மோதல்களை தொடர்கிறாளா என, ஆராய். மகளின் பக்கம் தவறு இருந்தால், பேசி திருத்து.

மகளிடம், சுயபச்சாதாபம் இருந்தால், துாக்கி எறிய சொல். திருமண வாழ்க்கையில், உன் மகளை விட மோசமான நிலையில் வாழும் பெண்கள், கோடி பேர் உள்ளனர்.

மகளின் மாமனாருக்கு வயது, 65 - -67 இருக்கக் கூடும். இன்னும் எத்தனை ஆண்டுகள் இருந்து, மகனுக்கு துர்போதனைகள் செய்வார்? சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருந்தால், குடும்ப பிரச்னைகளை எளிதில் வெல்லலாம்.

பெண்ணடிமைதனம் போதிக்கவில்லை, நான். சாதுர்யமாக நடந்து, கணவரை உன் மகள் வசப்படுத்தட்டும். உன் இரு பேத்திகள், தங்களது தந்தைக்கு தகுந்த புத்திமதி கூறட்டும்.

'நான் வேலைக்காரியோ, சமையல்காரியோ அல்ல; இந்த வீட்டு இல்லத்தரசி...' என்ற உடல் மொழியோடு, வீட்டுக்குள் உன் மகளை உலவச் சொல்.

'கணவருக்கும், மாமனார், மாமியாருக்கும் நல்லபுத்தியை கொடு இறைவனே...' என, உன் மகளை இஷ்ட தெய்வத்திடம் நெக்குருக வேண்ட சொல்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us