தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடக்கமாக இருந்தால்...

அடக்கமாக இருந்தால்...

அடக்கமாக இருந்தால்...


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொல்லால் மட்டுமல்ல; மனதாலும் யாரையும் காயப்படுத்தாதவர், கபீர்தாசர். நெசவுத் தொழில் செய்த அவர், அதிலிருந்து கிடைக்கும் சொற்ப பணத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தார்.

ஒருநாள், துணி விற்கப் போனார், கபீர்தாசர். அப்போது ஓர் ஏழை, 'போர்த்திக் கொள்ள ஒரு துணி தாருங்கள்...' என, வேண்டினார். அவருக்குப் பாதி துணியைத் தந்தார் கபீர்தாசர். ஏழையோ, முழுவதுமாக கேட்க, விற்க கொண்டு வந்த மொத்த துணியையும் கொடுத்து, வீட்டிற்கு செல்லாமல் எங்கோ போய் விட்டார்.

முழுத்துணியையும் இலவசமாகவே கொடுத்து விட்டதால், அன்று வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லை. மூன்று நாட்கள் கபீர்தாசரின் பெற்றோர் உட்பட அனைவரும் பட்டினி.

நான்காவது நாள், மாட்டின் மீது உணவுப்பொருட்களை ஏற்றி வந்த ஒருவர், கபீர்தாசரின் வீட்டில் இறக்கினார். அதைப் பார்த்த கபீர்தாசரின் தாய் நீமாவுக்கு ஒன்றும் புரியவில்லை, 'யார் நீங்கள்... ஏன் இவற்றை இங்கே இறக்குகிறீர்கள்... யார் கொடுத்தனர்...' எனக் கேட்டார்.

வந்தவரோ, 'அம்மா... காசி யாத்திரை சென்றிருந்த எங்க ராஜா, உங்க மகனோட மகிம தெரிஞ்சு, தானம் குடுக்க ஆசப்பட்டார். ஒங்க புள்ளயோ வேண்டாம்னுட்டார்; கடைசியில ராஜா கெஞ்சி கேட்டுக்கிட்டதுக்கு அப்புறமா, இந்தப் பண்டங்கள மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்க சம்மதிச்சாரு...' என்று பதில் சொல்லி, மறைந்தார்.

தன் குடும்பத்தினரின் பசித்துன்பம் தீர, இறைவனே இவ்வாறு செய்துள்ளார் என்பதை அறிந்த கபீர்தாசர், இறைவன் திருவருளை எண்ணி உருகினார். அடியாரின் பெருமை எங்கும் பரவ, அவரைக் காண, கூட்டம் கூட்டமாக வந்தனர், மக்கள்.

இதனால், 'மக்கள் இப்படி இடையறாது வந்து கொண்டிருந்தால் எப்படி இறைவனை தியானிப்பது... எதையாவது செய்து, மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் தான் நம்மைக் காண இவர்கள் வருவது குறையும்...' என்று எண்ணினார்.

அதன் காரணமாக, குவளையில் பூஜா தீர்த்தத்தை ஊற்றி, மது அருந்துவது போல் பாவனை செய்தார். அதைக் கண்ட மக்கள், 'துணி நெய்யற ஆள்தானே... இப்படித் தான் இருப்பான்; இவனைப் போய் ஒரு துறவியாக நினைத்து வணங்கினோமே...' என, ஒதுங்க ஆரம்பித்தனர்.

ஒருநாள், அரசவைக்கு சென்றார் கபீர்தாசர். எப்போதும் அவரை வரவேற்று, தன் சிம்மாசனத்திற்கு அருகிலேயே அமர வைக்கும் அரசர், அன்று கபீர்தாசரை அரசவைக்கு வெளியில் நிற்க வைத்து விட்டார். அப்போது, தான் வைத்திருந்த குவளையில் இருந்து சிறிதளவு நீர் எடுத்துத் தரையில் தெளித்தார், கபீர்தாசர்.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' எனக் கேட்டனர், அருகில் இருந்தோர்.

'பூரி ஜகந்நாதர் கோவில் குருக்கள் ஒருத்தருக்கு தீப்புண்ணா ஆயிடுத்து... அதை குணப்படுத்தத்தான் இந்தத் தண்ணியத் தெளிச்சேன்...' என்றார், கபீர்தாசர்.

அதைக் கேள்விப்பட்ட அரசர், உண்மையை அறிந்து வர, பூரிக்கு ஆளை அனுப்பினார். அந்த ஆள் பூரி செல்ல, பத்து நாட்கள் ஆயின. அங்கு விசாரித்த போது, ஆலய அர்ச்சகர் ஒருவர், 'பிரசாதம் தயாரிக்கையில் தீப்புண் ஆனது என்றும், கபீர்தாசர் தெளித்த நீரால் அது ஆறியது...' என்றும் கூறினர். அத்துடன், கபீர்தாசர், ஜகந்நாதரை வழிபட, தினமம், பூரி வருவார் என்றும் கூறினர்.

திரும்பி வந்த பணியாள், உண்மையை சொல்ல, வியந்தார், மன்னர்.

அக்காலத்தில், மகான்களிடம் மன்னிப்பு பெற வேண்டுமானால், தலையில், விறகுக் கட்டை சுமந்தபடி, தோளில் கோடாலியை ஏந்தியபடிச் செல்ல வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அதன்படி சென்று, கபீர்தாசரிடம் மன்னிப்பு வேண்டினார், அரசர்.

துாய்மையான பக்தி, இரக்கம், தன்னடக்கம் என இருந்த அவர் பெருமையை, தெய்வமே பறைசாற்றிய வரலாறு இது!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

சுவாமி தீர்த்தத்தை தலையில் தேய்க்கலாமா?

சுவாமி தீர்த்தம் வாங்குவோர், இறைவனை நினைத்து, கண்களில் ஒற்றிக்கொண்ட பின், சாப்பிடலாம். சாப்பிட்ட பின் கைகளை துணியில் தான் துடைக்க வேண்டும்; தலையில் தேய்க்கக் கூடாது. ஏனெனில், இது புண்ணிய தீர்த்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us