PUBLISHED ON : ஜூன் 17, 2018

வளர்ப்பு...
மகள் பிறந்த நேரம் தான்
மனை வாங்கினேன்
வீடு வாங்கினேன்
கார் வாங்கினேன்
வியாபாரம் பெருகியது என்று
என்னை தரையில்
கால் படாமல்
தேவதை போல்
செல்லமாக துாக்கி
வளர்த்தீர்களே அப்பா!
கேட்டதெல்லாம்
வாங்கி தந்தீர்கள்...
பொன்னும் மணியும் பூட்டி
அழகு பார்த்தீர்கள்...
தினம் தினம்
அறுசுவை விருந்தளித்தீர்கள்!
நம்மை விட மேலான
பணக்கார வீட்டில்
மாப்பிள்ளை பார்த்து
ஊரெல்லாம் கூட்டி
பிரமாண்டமாக
திருமணம் செய்து கொடுத்தீர்கள்!
வாழ்க்கை சக்கரம் சுழலும்
என்பதையும்,
வாழ்க்கை பாதை
மேடு, பள்ளம்
நிறைந்தது என்பதையும்
வறுமை, வளமை
மாறி மாறி தான் வரும்
என்பதையும் ஏன் அப்பா
சொல்லிக் கொடுக்கவில்லை?
குடும்ப சண்டை, சொத்து பிரிப்பு
வியாபாரம் பாதிப்பு, வழக்கு
எல்லாம் சேர்த்து, மாளிகை
மண் குடிசையாகி விட்டதே அப்பா...
சமைக்கவும், பெருக்கவும்
துவைக்கவும்
ரேஷன் வாங்கவும்
நகர பேருந்தில் பயணிக்கவும்
இனி தெரிந்து கொள்கிறேன் அப்பா!
எங்களை பற்றி
நீங்கள் கவலைப்படாதீர்கள்...
மாமனார் உதவியை எதிர்பாராத
உங்கள் மருமகனுக்காக
பெருமைப்படுங்கள்!
நாங்கள் மகிழ்ச்சியாக
இருக்கிறோம்...
கூழானாலும் பங்கிட்டு
குடிக்கிறோம்...
சொத்து, சுகம்
சொந்த, பந்தம் போனாலும்
மனதளவில் நலமாக இருக்கிறோம்!
உங்களிடம் நான் கற்றுக்கொண்ட
பாடம் ஒன்று தான் அப்பா...
என் மகளை உங்களைப் போல்
செல்லமாக வளர்க்கக் கூடாது
என்பது தான் அது!
— சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
