PUBLISHED ON : ஜூன் 17, 2018

அன்பு சகோதரிக்கு —
என் வயது, 55; இரு மகன்களின் தாய்; கணவர் இறந்து விட்டார். மூத்தவன், மிகவும் பொறுமைசாலி; பொறுப்பானவனும் கூட! என் மீது பாசமாக இருப்பான். இளையவன், இவனுக்கு நேரெதிர். இருப்பினும், பாசத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. படிப்பில் மூத்தவன் சுமார் என்றால், இளையவன் கெட்டிக்காரன்.
எம்.பி.ஏ., படித்து, வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளையவன், காதலித்து, திருமணம் செய்து கொண்டான்.
மூத்தவனுக்கு ஆசை ஆசையாக திருமணம் செய்து வைத்தேன். திருமணமான ஐந்தே மாதத்தில் குழந்தை பிறந்தது; குழந்தையின் சாயலைப் பார்த்து, அதிர்ச்சியானோம்!
ஏற்கனவே ஒருவனை காதலித்து, அவனுடன் நெருக்கமாக பழகியுள்ளாள், மருமகள். பெற்றோர் சம்மதிக்காததால், என் மகனை கைப்பிடித்திருக்கிறாள். அவளிடம் கேட்டதற்கு, 'ஆமாம்... இது, என் காதலனுக்கு பிறந்தது தான்; என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, பெற்றோருக்கு பாடம் புகட்டவே, கல்யாணத்துக்கு சம்மதித்தேன்...' என்று, அலட்சியமாக கூறினாள்.
ஊரார் மற்றும் உறவினர் கேவலமாக பேச, மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டான், மகன்; நிலை குலைந்து போனேன்.
மருமகள், குழந்தையுடன் அவளது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். அவளை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முடியாமல், அவளது பெற்றோர், ஊரார் முன் தலைகுனிந்து நிற்பதை பார்க்க, பரிதாபமாக உள்ளது.
இந்நிலையில், இளைய மகனுக்கும், அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து, என்னுடன் வந்து தங்கி விட்டான்; இங்கேயே வேலை பார்த்து, காலத்துக்கும் என்னுடனே இருக்கப் போவதாக கூறுகிறான்.
இறந்து போனவனுக்காக அழுவதா, வாழ்க்கையை தொலைத்து விட்ட இளையவனுக்காக அழுவதா... நிலை கொள்ளாமல் மனம் தவிக்கிறது. இனி, என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
மூத்தவனுக்கு வரன் பார்க்கும்போதே பொறுமையாகவும், கவனமாகவும் இருந்திருக்க வேண்டும். திருமணத்தின் போதே மருமகள் நான்கு மாத கர்ப்பிணி. பெண்ணை பார்க்கும்போதே, தலை முதல் கால் வரை ஆராய்ந்திருந்தால், திருமணத்தில் மணப்பெண்ணுக்கு முழு சம்மதமா என அழுத்தந் திருத்தமாய் கேட்டிருந்தால், இந்த திருமணம் நடந்திருக்காது. உன் மகனும் தற்கொலை செய்திருக்க மாட்டான். இப்போது, பல திருமணங்கள், அவசர கோலங்களாக நடந்து, விவாகரத்தில் அல்லது துர்மரணத்தில் முடிகின்றன. பணம் பணத்துடனும், ஜாதிக்கும், ஜாதிக்கும், அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கும் திருமணம். மனதுக்கும் மனதுக்கும் திருமணம் நடந்தால் மட்டுமே, அத்திருமணம் முழு வெற்றியடையும்.
மருமகளை அவளது பெற்றோர் ஏற்றுக்கொண்டால் அல்லது நிராகரித்தால் உனக்கென்ன... அதுபற்றி வருத்தப்படாதே!
இளையவனுக்கும், அவன் மனைவிக்கும் எதனால் கருத்து வேறுபாடு வந்தது என்பதை, இருவரிடமும் தனியாக விசாரி.
இறந்தவர்கள், மீண்டும் வரமாட்டார்கள். ஆனால், பிரிந்தவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு, சாத்தியங்கள் உண்டு.
இளையவனிடம் இப்படிக் கூறு... 'கணவனையும், மூத்த மகனையும் இழந்து நிற்கும் எனக்கு, நீதான் ஆறுதல். நீ, சந்தோஷமாய் உன் மனைவியிடம் சேர்ந்து வாழ வேண்டும். உன் வழி பேரன் - பேத்தியை நான் கொஞ்சி மகிழ வேண்டும். காலத்துக்கும் என்னுடனேயே இருக்கப் போவதாக கூறுகிறாய். இன்னும், 10 - 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பேனா... அதன்பின் என்ன செய்வாய், தனிமையில் வாடுவாயா அல்லது இரண்டாவது திருமணம் செய்து, அவளுடனும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து நிற்பாயா... நீயும், உன் மனைவியும், 'ஈகோ'வை களைந்து, ஒன்று சேருங்கள். அதுவே எனக்கு நீ தரும் பேரானந்தம்...' என்று மனம் விட்டு பேசு.
உன் மருமகளிடமும், 'அம்மா... எனக்கு மகள் இல்லை; மூத்த மருமகள் வழி தவறி விட்டாள்; இளைய மருமகள் நீதான் எனக்கு மகள். உனக்கும், என் மகனுக்கும் எதனால் கருத்து வேறுபாடு வந்தது என எனக்கு தெரியாது. ஆனால், எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. திருமணம் என்கிற அமைப்பை மகிமைப்படுத்தவும், துக்ககரமான உன் மாமியார் என்கிற இரண்டாவது அம்மாவின் வாழ்வில் சாந்தியும், சமாதானம் ஏற்படுத்தவும், என் மகனுடன் இணக்கமாய் போ. என் மகன், வார்த்தைகளால் உன்னை காயப்படுத்தியிருந்தால், அவன் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்...' என பேசி, மனக்காயங்களுக்கு மருத்துவம் பார்.
வாழ்க்கை என்பது, பிரச்னைகள் நடுவில் வைக்கப்பட்ட சாண்ட்விச். காயங்களின் அளவை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே அழுதால் தீர்வு வராது. காயங்கள் முழுமையாக ஆற, மருந்திட வேண்டும். மருந்தில் குணமாகாவிட்டால், அறுவை சிகிச்சை. உன் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே கருத்து வேற்றுமையை களையவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், இளைய மகன் உன்னுடன் தங்கட்டும்; காலம் மிகச்சிறந்த சர்வரோக நிவாரணி.
வாராவாரம் கோவிலுக்கு போ. இறைவனிடம் மன நிம்மதியையும், இளைய மகனின் பிரச்னைக்கு தீர்வையும் இறைஞ்சு.நடந்தவை கெட்டவைகளாக இருந்தாலும், இனி, நடப்பவை நல்லவைகளாக அமையும் என தீர்க்கமாக நம்பு. எல்லாம் அவன் செயல்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
