தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக நகராட்சி ஊழியர்கள் மாநாட்டில், அன்றைய முதல்வர் அண்ணாதுரை பேசியது, 'அறிஞர் அண்ணா' என்னும் நுாலிலிருந்து: எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சையில், அந்த ஆண்டு நான் தேறவில்லை. அந்த இடைக்காலத்தில் என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது, காஞ்சிபுரம் நகர சபை தலைவர் சாம்பசிவம் செட்டியார், காஞ்சிபுரம், நகர சபையில் வரி வசூலிக்கிற பில் புத்தகங்களை எழுதுகிற வேலையை தந்தார்.

அதுதான், நான் பார்த்த முதல் உத்தியோகம். மாதா மாதம் கை நிறைய சம்பளம் கொடுப்பார். எல்லாம் கால் ரூபாய் நாணயங்கள். மிகவும் கண்டிப்பானவர், சாம்பசிவம் செட்டியார். அப்போதெல்லாம் நகர சபை தலைவர்களுக்கு அதிக அதிகாரம் உண்டு.

அவர் நகர சபை தலைவராக வருவதற்கு முன், நகர சபை ஊழியர்கள், அலுவலகத்துக்கு வந்தால் சட்டை, பனியன் எல்லாவற்றையும் கழற்றி, கால்களை முன்னால் உள்ள மேஜை மேல் போட்டு, அலுவலகத்தில் காலத்தை ஓட்டுவர்.

சாம்பசிவம் செட்டியார், தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட பின், காஞ்சிபுரம் நகர சபையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர், உள்ளே நுழையும்போதே ஜாடையாக அலுவலர்கள் மீது தன் பார்வையை ஓட விடுவார். அவ்வளவு தான்... கோட்டு போடாத ஊழியர்களுக்கு, ஐந்து ரூபாய், மேஜை மீது கால்களை போட்டு உட்கார்ந்திருந்தால், மூன்று ரூபாய்... இப்படி அபராதம் தீட்டி விடுவார்.

அப்படிப்பட்ட தலைவரின் கீழ், முதன் முதலாக வேலை செய்யும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது!

'உலக உளவுத் துறைகள்' நுாலிலிருந்து: 'வாட்டர் கேட்' எனக் கூறப்படும் ஊழலில் சம்பந்தப்பட்டதால் பதவி இழந்தார், முன்னாள், அமெரிக்க ஜனாதிபதி, நிக்சன். இவர், தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார். அதில், இவர் கையெழுத்திட்ட பிரதி என்பதால், அதை மூன்று மடங்கு விலை என நிர்ணயித்து, விற்பனை செய்தார். ஆனால், உண்மையில் இவர் கையெழுத்திட சோம்பல்பட்டு, ஆள் வைத்து போட்டிருக்கிறார் என்ற ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

பாரதியார் கட்டுரைகளில், 'பெண் விடுதலைக்கு தமிழ் பெண்கள் செய்யத் தக்கது யாது?' என்ற தலைப்பில், ஒரு கட்டுரை உள்ளது. அதில் ஒரு பகுதி: ஒரு ஸ்திரியானவள், தன் கணவரிடம் சாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால், 'எல்லா வகையிலும் நான், உனக்கு சமமாக வாழ்வதில் உனக்கு சம்மதம் உண்டானால், உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று ராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதை செய்து தின்பேன்; உனக்கு சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால், ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது; இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்...' என்று கண்டிப்பாக சொல்லி விட வேண்டும். இந்த தீர்மான வார்த்தையை மாற்றக் கூடாது.

இப்படி, 'பரிபூரண சமத்துவமில்லாத இடத்தில், ஆண் மக்களிடம் நாம் வாழ மாட்டோம்...' என்று சொல்வதானால், புருஷர்களாலும், புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தன்மையுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும் அஞ்சக்கூடாது. நாம் வெற்றி பெறுவோம். மகா சக்தி துணை செய்வாள்; வந்தே மாதரம்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us