PUBLISHED ON : ஜூன் 17, 2018

எந்த ஊருக்கு போனலும், சீக்கிரமே எழுந்து ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவது என் பழக்கம். காரணம், நிறைய இடங்களை பார்க்கலாம் என்பதுடன், நல்ல புகைப்படங்களும் எடுக்கலாம்.
பாங்காக் போயிருந்த போதும், வழக்கம் போல் கிளம்பினேன். கொஞ்ச நேரத்தில் தாகசாந்தி செய்து கொள்வதற்காக, வழிபோக்கர் ஒருவரிடம் வாட்டர் பாட்டில் படம் போட்டு காட்டினேன். படம் கொஞ்சம் சப்பட்டையாக வந்துவிட்டது போலும், மேலும் கீழும் பார்த்தவர், இங்கு, 'கடை' ஒன்பது மணிக்கு மேல்தான் திறக்கும் என்று சைகை மொழியில் சொல்லி சென்றார்.
உங்களுக்கு அவர்களின், 'தாய்' மொழியே தெரிந்திருந்தாலும், உணவு சாப்பிடுவதில் பிரச்னையை சந்தித்தே தீரவேண்டும். சாப்பாட்டில் சைவம் என்ற ஒன்று இருப்பதாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. பறப்பன, நடப்பன, ஓடுவன மற்றும் ஊர்வன என்று எதையும் வேக வைத்து, குச்சியால் குத்தி குத்தி சாப்பிடுகின்றனர்.
பன்றி மாமிசம் தான் இவர்களது விருப்பம்; அதை இஷ்டம் போல மசித்து, உருட்டி, நீட்டி வேக வைத்து, அரிசி உணவு மற்றும் நுாடுல்ஸ் இவைகளுடன் கலந்து சாப்பிடுகின்றனர். கொஞ்சம் அரை வேக்காடாகவே இருக்கிறது. சாப்பிடும்போதே தட்டில் இருக்கும் மீன், மீண்டும் தொட்டிக்கு தாவி குதித்து சென்று விடுமோ என்று பயப்படும்படியாகவும் இருந்தது.
கடல் உணவு எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதன்பின், சிக்கனும் கொஞ்சம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மட்டன் என்று ஆட்டுக்கறியை பற்றி பேசினாலே, 'உவ்வே' என்கின்றனர். அவர்களுக்கு ஆடு என்பது அறவே ஆகாது. 'மந்த புத்தியை தரும்; சாப்பிட்ட பின் உடம்பிலிருந்து கெட்ட வாடை வீசும்; அதை யார் சாப்பிடுவர்...' என்று விளக்கமும் தருகின்றனர்.
சர்க்கரை நோய் பிரச்னை வந்தால், நம்மூர் டாக்டர்கள் சொல்வது மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக்கி பிரித்து சாப்பிடுங்கள்; அதையும் பசித்து சாப்பிடுங்கள், பாதி வயிறு காலியாக இருக்கும்படி யாகவே சாப்பிடுங்கள் என்பது தான்!
இவ்வூர் மக்களின் உணவு கலாசாரமே இங்கே இப்படி தான் இருக்கிறது. ஆகவே, எப்போது பார்த்தாலும் யாராவது தெரு கடைகளில் சாப்பிட்டு கொண்டே தான் இருக்கின்றனர். இவர்களது பெரும்பாலான வீடுகளில் சமையல்கூடமே கிடையாது. ஆணோ - பெண்ணோ வெளியில் சாப்பிட்டு, வீட்டில் இருப்போருக்கு பார்சல் வாங்கி, வீட்டில் சூடுபடுத்தி சாப்பிட, மைக்ரோ ஓவன் இருக்கும், உணவுகளை, 'ஸ்டாக்' வைத்துக்கொள்ள பிரிஜ் இருக்கும்; அவ்வளவு தான்!
இதன் காரணமாக, நம்மூரைப் போல பத்து பேரில் ஒருவருக்கு, 'டயாபடீஸ்' என்று பயமுறுத்தும் புள்ளிவிபரம் எதுவும் இல்லை. 'டயட்' உணவு காரணமாக தொந்தி இல்லாமல் சிக்கென்று இருக்கின்றனர்.
அதேபோல், எங்குமே கல் உப்பு பயன்படுத்து வதில்லை; ராக்பிஷ் எனப்படும் ஒரு மீனை ஊற வைத்த தண்ணீரிலிருந்து, தேவைக்கேற்ப அரை கரண்டியோ, ஒரு கரண்டியோ ஊற்றிக் கொள்கின்றனர். ஆக, பிரஷர் பிரச்னையிலிருந்தும் விடுதலை.
பாங்காக் செல்லும் இந்தியர்களுக்காகவே, இந்திரா ஸ்கொயரில் ஏராளமான ஓட்டல்கள் இருக்கின்றன. இட்லி, தோசை கிடைக்கும் மெட்ராஸ் ஓட்டலும் இருக்கிறது. அவர்களது கரன்சியான, 'பாட்'தான் கொஞ்சம் அதிகம்!
உணவு போல, உடை விஷயத்திலும் வித்தியாசமாக இருக்கின்றனர். பெரும்பாலான இளம் பெண்கள், அரை டிரவுசரும், டி - ஷர்ட்டும் தான் அணிகின்றனர்.
உணவு, உடை விஷயத்தில் நவீனத்திற்கு சென்றாலும், நாட்டின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டுள்ளனர். யாரைப் பார்த்தாலும் சிரித்தபடி கும்பிடுகிற பாணியிலேயே சொக்கிப் போய் விடுவோம். நாட்டை ஆளும் மன்னரின் படத்தை, கடவுள் போல, கடை, வீடு, கல்விக்கூட வாசலில் வைத்து வணங்குகின்றனர். வருமானத்தில் கணிசமான பகுதி சுற்றுலாவில் தான் என்பதால், சுற்றுலா பயணியரை பெரிதும் மதிக்கின்றனர். அவர்களுக்கான வசதிகளை செய்து தருவதில் ஆண்டுதோறும் ஏதாவது புதிதாக உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.
இதன் காரணமாக, தாய்லாந்திற்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருப்போரை, 'இமிகிரேஷன்' வரிசையில் (ஊர் திரும்ப அனுமதிக்கும் பகுதி) நிற்கும்போது பார்க்க முடிகிறது.
அதில் ஒருவர், நம்மிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின், 'தாய்லாந்து வந்துவிட்டு, பட்டாயா போகலையா... புக்கெட் பாக்கலையா... தாய் மசாஜ் கூட செய்து கொள்ளவில்லையா... அப்புறம் எதுக்கு...' என்று ஏதோ அவர் வாயில் வந்தது.
'இல்ல சார்... இந்த விசிட் பார்க்கிறதுக்கான விசிட் இல்ல; காது கொடுத்து கேட்பதற்கான விசிட். அதனால, இது ஒரு, 'ட்ரெய்லர் டூர்'தான், ஊருக்கு போய் இன்னும் சிறப்பா வேலை செஞ்சு, 'பாஸ்' அவர்களின் ஆசியோட திரும்ப வருவேன்; அப்ப எல்லாத்தையும் பார்த்துக்குவேன்...' என்றேன்.
பெண்கள் பாங்காக்கின் கண்கள்!
பொதுவாக, தாய்லாந்து மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை அதிகம். இதன் காரணமாக, விமான நிலைய பாதுகாப்பில் துவங்கி, உணவு விடுதி நிர்வாகம் வரை பெரும்பாலும் பெண்களே!
அதிலும், பள்ளாடம் மற்றும் இந்திரா ஸ்கொயர் போன்ற வெளிநாட்டினர் குவியும் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அனைவரும் பெண்களே! கடையின் ஓரத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது, காசு வாங்கி கல்லாவில் போடுவது, அவ்வப்போது சூப் வாங்கி கொடுப்பது போன்ற வேலைகளை பார்த்தபடி, சமர்த்தாக இருக்கின்றனர் கணவன்மார்கள்.
பெரும்பாலும் காதல் திருமணம் தான்; அனேகம் பேர் இங்கு, புத்த மதம் என்பதால், காதலுக்கு ஜாதி, மதம் எல்லாம் குறுக்கே நிற்பது இல்லை. ஆனால், காதலியை, மனைவியாக அடைய நிறைய பொருளாதாரப் போராட்டம் உண்டு.
மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட்டில் பணம் கொடுத்து, நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின், பெண் வீட்டார் போடும் கட்டளைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொண்டால் தான், டும் டும் டும்!
- முற்றும்
எல்.முருகராஜ்
