தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (15)

ஆச்சி மனோரமா! (15)

ஆச்சி மனோரமா! (15)


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்னும் சில வித்தியாசமான தயாரிப்பாளர்களும் உண்டு. அவர்கள் எங்கேயும் ஓடி ஒளிவதில்லை. அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருப்பர். ஆனால், கண்டும் காணாததுபோல போய் விடுவர். ஏதோ முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை வழியில் பார்ப்பதுபோல நடந்து கொள்வர்.

இது, ஆச்சியின் திரைப்பட வாழ்வில் மட்டுமல்ல, அனைத்து நடிகர் - நடிகையரின் வாழ்விலும் அடிக்கடி நடக்கக் கூடியது தான்!

ஒழுங்காக பணம் தராத தயாரிப்பாளர் என்றால், அதற்கு ஏற்ப, தங்கள் நடிப்பு திறமையை காட்டும் கலைஞர்கள் அதிகம். ஆனால், மனோரமா அப்படி இல்லை; குறைவான சம்பளம் தருகின்றனர் என்பதற்காக, அவர், தன் நடிப்பை குறைத்துக் கொண்டது கிடையாது.

நடிப்பை உயிரினும் மேலாக நேசித்தார்; எனவே, அற்ப சம்பள குறைப்புக்காக, தன் நடிப்பு திறமையை பலியிட அவர் விரும்பியது இல்லை.

எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் நடிக்கும் போது, அதை மனதில் வைத்துக் கொள்ளாமல், முழு மனதோடு திறம்பட நடிப்பார். தன் வருத்தம், சங்கடம், கோபத்தை தொழிலில், துளிக்கூட காண்பித்தது கிடையாது.

திரைப் படங்களில் நடித்தாலும், நாடகங்களில் நடிப்பதை விடவே இல்லை. அதிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்து கொண்டுதான் இருந்தார்.

சில நாட்களில் படப்பிடிப்போ, நாடகமோ இருக்கும். பொதுவாக மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிடும். நாடகமும் மாலை, 6:00 மணிக்கு மேல் தான் துவங்கும். எப்போதாவது இறுதிகட்ட படப்பிடிப்பின் போதுதான் இரவும் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழ்நிலையில், நாடகத்திலும் பங்கேற்க வேண்டி இருந்தால், அதைப் பற்றி, காலையிலே இயக்குனரிடம் கூறி, மாலையில் சற்று முன்னதாகவே தன்னை அனுப்பி விடும்படி கேட்டுக் கொள்வார்.

இயக்குனரும் அதற்கு சம்மதித்தாலும், சில தவிர்க்க முடியாத தருணத்தில், மாலை கிளம்புகிற நேரத்தில், கடைசி காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும். ரொம்ப டென்ஷனாக இருக்கும்.

ஆனாலும், கேமரா முன் இருக்கும்போது, அந்த டென்ஷனையும், பதற்றத்தையும் காட்டிக் கொள்ளாமல் நிதானமாகவே நடித்து கொடுத்து, நாடகத்திற்கு செல்வார், மனோரமா.

'மற்றவர்கள் சீரியசாக செய்யும் வேலைகளை அனாயாசமாக செய்து, ரசிகர்களை சிரிக்க வைப்பர் கோமாளிகள். மற்ற கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையில் சிறந்து விளங்குவர். ஆனால், கோமாளிகள் எல்லா வித்தைகளையும் கற்று வைத்திருப்பர்.

'மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில், நல்ல திறமை மிக்கவராக விளங்குவார் கோமாளி. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திறமையும் கோமாளிகளுக்கு மட்டுமே உண்டு.

'ஆனால், எல்லாரும் அவரை, 'கோமாளி' என்று கிண்டலாகவும், கேலியாகவும் பேசுவர். காமெடி நடிகர்களின் நிலையும் இதே தான்.

'அழுகை, வில்லன், குணசித்திரம் என்று அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் கலக்குவர் என்றாலும், அவர்களின் முக்கிய ரோல், ரசிகர்களை சிரிக்க வைப்பது!

'எங்களை போன்ற காமெடி நடிகர்கள், மற்றவர்களை சிரிக்க வைப்பர்; ஆனால், நிஜ வாழ்க்கையில் அழுது கொண்டிருப்பர்.

'இது, என் வாழ்விலும் உண்மையாக இருந்தது. திரைப்படங்களில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும், நிஜத்தில் அழுது கொண்டு தான் இருந்தேன். சோகம் தான் என்னுள் குடிகொண்டிருந்தது. என் வாழ்க்கையில் நான் எப்போதாவது தான் சிரிப்பதுண்டு.

'மேரே நாம் ஜோக்கர் என்ற இந்திப் படத்தில், கோமாளி வேஷத்தில் நடித்தார், ராஜ்கபூர். அந்த கதாபாத்திரம், மேடையில் அனைவரையும் சிரிக்க வைக்கும். அதேநேரத்தில் மேடைக்கு பின்னால் கண்ணீர் விட்டு கதறி அழுவார்...' என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் மனோரமா.

அவரது நிஜ வாழ்க்கை இப்படி சோகம் நிரம்பியதாக இருந்தது என்பது பலபேருக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

மனோரமாவிற்கு, தன் ஒரே மகன் பூபதி மீது பாசம் அதிகம்; நாடகம் எங்கு நடந்தாலும், அங்கெல்லாம் மகனையும் அழைத்துச் செல்வது, வழக்கம். மகனை விட்டு பிரிந்திருக்கவே மாட்டார். அத்தனை பாசம் என்றாலும், நாடகம் எதிலும் தன் மகனை நடிக்க வைத்தது கிடையாது.

ஒருமுறை, ஏதோ கலை நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்றிருந்தார். உடன் பூபதியையும் அழைத்துச் சென்றிருந்தார்.

நிகழ்ச்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, பூபதிக்கும் அந்த மேடையில் பாட வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

உடனே, 'அம்மா... நானும் ஒரு பாட்டு பாடணும்ன்னு ஆசையா இருக்கு; எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்களேன்...' என்றார்.

இதைக் கேட்டதும் சிரித்த மனோரமா, 'டேய்... உனக்கு என்னடா பாடத் தெரியும்... நீ பாட்டுக்கு பாட ஆரம்பிச்சு, கூட்டம் மொத்தமும் கலைஞ்சிட போகுது... பாட்டெல்லாம் வேணாம்; பேசாம இரு...' என்றார்.

அதில், பூபதிக்கு பெருத்த ஏமாற்றம்; தன்னால் அந்த மேடையில் பாட முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட இருந்தது.

இதன்பின், கும்பகோணத்தில், 'ஜெய் ஜாய் நைட்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை நிகழ்த்தியவர் நடிகர் ஜெய்சங்கர்; அதற்கும் மனோரமாவிற்கு அழைப்பு வந்தது; தன்னோடு வழக்கம்போல மகனையும் அழைத்து சென்றிருந்தார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது; மேடையின் பின்புறம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நட்சத்திரங்களோடு மனோரமாவும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அங்கு ஒரே பரபரப்பு; அதே நேரத்தில், மேடை நிகழ்ச்சியின் ஆடியோ, ஸ்பீக்கர் மூலமாக அங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, மேடையில் யாரோ பிரமாதமாக பாடுவது கேட்டது. அதுவரையில் கேட்டிராத புதிய குரலாக தெரிந்தது மனோரமாவிற்கு!

'யார் பாடுவது...' என தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில் குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us