தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சின்ன சின்னதாய் சில தவறுகள்!

சின்ன சின்னதாய் சில தவறுகள்!

சின்ன சின்னதாய் சில தவறுகள்!


PUBLISHED ON : ஜூன் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரீ-சார்ஜ் செய்து, பணத்தை நீட்டிய சந்திரன், கடைக்காரரை பார்த்து, தலையை சொறிந்தபடி நின்றான்.

'சார்... பில் குடுத்திடுங்க சார்... அமவுண்ட் மட்டும், 500க்கு போட்ருங்க...' அவன் பல்லை காட்ட, கடைக்காரர் ஒரு மாதிரியாக பார்த்தபடி, பில்லை எழுதி நீட்டினார். 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்துட்டு, 500க்கு பில் கேட்டால், அவனுக்கு கடுப்பு வராமல் என்ன செய்யும்!

அலுவலகத்தில் சந்திரனுக்கு வெளி வேலை அதிகம்; அவ்வப்போது அதில் காசு பார்ப்பதே அவனுக்கு லாபமான வேலையாய் இருந்தது. அவனுக்கு சம்பளம், 15 ஆயிரம் ரூபாய்; அதற்குள் எப்படி குடும்பம் நடத்த முடியும்... அதனால், இதுபோன்ற வேலைகளை செய்வது ஒண்ணும் தப்பில்லை என்ற பலமான நியாயம் அவனிடம் இருந்தது. யார் தான் இதுபோன்ற வேலைகளை செய்யாமல் இருக்கின்றனர் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்வான்.

கம்பெனி விஷயமாய் அவன் வெளியில் போய் வரவும், மாதம் இரண்டொரு முறை வெளியூர் போகிற போதும், கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசவும், ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். அதை பயன்படுத்தி அவன் அதிகமாய் கணக்கு காட்டினான்; மீட்டிங்கிற்கு, 'ஸ்நாக்ஸ்' சப்ளை செய்து, ஒன்றுக்கு இரண்டாய் கணக்கு காட்டுவான்.

ஸ்டேஷனரி கொட்டேஷன் அனுப்பும்போது, வீட்டில் குழந்தைகளுக்கு தேவையானதையும் சேர்த்து வாங்கிக் கொள்வான். சில சமயம் அவனுக்கே உறுத்தலாய் இருக்கிறதென்று மனைவி துளசியிடம் புலம்பினால், அவள், இவனுக்கு மேலாய் இருப்பாள்.

'பெரிய கர்ணனுக்கு சித்தப்பா மகன்கிற மாதிரி பேசாதீங்க... அரசியல் தலைவருங்க எல்லாம் கோடி கோடியா கொள்ளையடிக்கிறப்ப, அவங்களுக்கு இருக்காத மனசாட்சி, இந்த ரப்பரையும், பேனாவையும் எடுக்கும்போது உங்களுக்கு ஏற்படுதாக்கும்... சரி, இதெல்லாம் செய்ய வேணாம்னா, மாசம், 40 ஆயிரம் சம்பளம் தர்ற வேலைய பாத்துட்டு போய் உட்காருங்க...' என்பாள் ஏளனமாக!

அப்புறம் எங்கே வருத்தப்படுவது!

''என்னங்க... இந்த சுப்பு ஒரு வாரமா வேலைக்கு வரல... நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறா... அவளுக்கு என்ன கேடோ... நீங்க போற வழிதானே அவளோட வீடு. போகும்போது கேட்டுட்டு போங்க,'' டிபனோடு சேர்த்து பிரச்னையையும் கட்டி, கையில் தந்தாள், துளசி.

''வீட்டுல நீ சும்மா தானே இருக்க... நீ போயிட்டு வந்தா ஆகாதா...'' என்றான்.

''ஆமா, நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்... இப்ப பக்கெட்டுல ஊற வைத்துள்ள துணியை உங்கம்மா வந்துதான துவைக்க போறாங்க... 'சிங்க்' முழுக்க கிடக்கற பாத்திரத்தை உங்கக்கா வந்து தேய்ச்சு வச்சுருவாங்க பாரு... சும்மா இருக்கேனாம்ல சும்மா...'' எழுந்திருக்கும்போதே சண்டை போடும் மூடுடன் தான் எழுந்து கொள்வாள், துளசி.

''அம்மா தாயே... என் குலத்தை விட்டுரு... நீ துவைச்சு காயப்போடத்தான் நான் இருக்கேனே... அப்புறம் எதுக்கு எங்கம்மாவையும், அக்காவையும் வம்புக்கு இழுக்கிற... அந்த சுப்புக்கும், உனக்கும் தான் ஒத்து வரலயே, விட்டுத் தொலைக்கிறது தானே... வேற ஆளே கிடைக்க மாட்டாங்க...''

''எனக்கும், உங்களுக்கும் கூடதான் ஒத்து வரல... அதுக்காக என்ன பண்ணி தொலைக்கிறது... கட்டிட்டு அழுது தொலைக்க வேண்டிதானே இருக்கு,'' என கூறி, உள்ளே போனாள்.

சுப்பு வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி, வாயிலில் நின்று குரல் கொடுத்தான். மூன்றாவது குரலுக்கு கொஞ்சம் அசால்டாய் வெளியில் வந்தாள், சுப்பு.

''வாங்க சார்... என்ன விஷயம்?''

''என்ன சுப்பு... நாலஞ்சு நாளா வேலைக்கு வரக் காணோம்... என்ன விஷயம்ன்னு துளசி பாத்துட்டு வரச் சொன்னா...''

''அவ்வளவு தானா சொன்னாங்க...'' என்றாள் எங்கோ பார்த்தபடி!

''வேறென்ன சொல்லணும்... ஏதும் சம்பள தகராறா... அதை பாத்து பேசிக்கலாம்,'' என்றான்.

''அட, அதெல்லாம் ஒரு பிரச்னையா... உங்க வூட்டு அம்மா அன்னைக்கு ஒரு மாதிரியா பேசிடுச்சு... அதான் மனசு நொந்து பூடுச்சு,'' என்றாள்.

அடக்கடவுளே... இந்த அவசரமான நேரத்தில் அவள் சொல்லப் போகும் சுய புராணத்தை வேறு கேட்கணுமே என்று அலுப்பாய் இருந்தது.

''ஒண்ணுல்லயா... நாலஞ்சு நாள் முன்னாடி பழம் வாங்கச் சொல்லி, உங்க வீட்டு அம்மா என்னை மார்க்கெட் அனுப்பிச்சு. நானும் ஆப்பிள் பழம் வாங்கியாந்தேன். கிலோ, 200 ரூவா... நல்ல பழமா இருந்ததுன்னு நானும் என் வூட்டுக்கு தனியா ஒரு அரைக் கிலோ என் காசுல வாங்கிக்கிட்டேன்... இதுல என்னய்யா குத்தம்... ஆனா, உன் வூட்டு அம்மாக்கு என் மேல சந்தேகமா பூடுச்சு... நான் என்னவோ உன் வூட்டு காசுல சுங்கம் புடுச்சு வாங்கிட்ட மாதிரி ஜாடை பேசுச்சு. அதான் மனசுக்கு புடிக்கல, வேலைக்கு வர வேணாம்ன்னு நின்னுட்டேன்,'' என்றாள்.

அவள் பக்கம் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று யோசிக்க அவனிடத்தில் நேரமில்லை. முன்னுக்குபின் பேசி, அவளை சமாதானம் செய்து, அலுவலகம் புறப்பட்டு போனான்.

லஞ்ச் முடித்து, சீட்டுக்கு திரும்பியவனை, மேனேஜர் வரச்சொன்னதாய் பியூன் சொல்லிப் போக, எழுந்து போனான்.

''என்ன மிஸ்டர் சந்திரன்... கணக்குல க்ளாரிட்டி குறையற மாதிரி தெரியுதே...'' என்றார்.

''சார்...''

''போன மாசம் கேரளா போனப்போ, ரீ-சார்ஜ் பண்ணாத பில் தந்திருக்கீங்க; இந்த மாசம் இதேபோல நாலு பில் வந்திருக்கு; இத்தனை, ரீ-சார்ஜ் பண்ணி பேசுற அளவுக்கு எந்த பெரிய டீலிங்கும் நடக்கல... அப்புறம், எதுக்காக இத்தனை, ரீ - சார்ஜ் பண்ணீங்க... கம்பெனி விஷயம்தானே பேசினீங்க...'' பேனாவை உருட்டியபடி கேட்டார்.

இவனுக்கு சுரீரென்றது!

''பத்து பதினைந்து ஆண்டா இங்க வேலையில இருக்கேன்; இந்த விஷயத்துக்கெல்லாம் நான் தப்பு பண்ணுவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்... நாணயம் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரிதான் நம்பிக்கையும் அவசியம்,'' என்றவன், விடுவிடுவென வெளியே வந்தான்.

மனசு படபடவென அடித்துக் கொண்டது. ரீ-சார்ஜ், ஸ்டேஷனரி லொட்டு லொசுக்கு என்று, தான் செய்கிற தகிடு தத்தம் வெளியில் வந்து விடுமோ என்ற பயம், மனசை கவ்வியது. ஆனாலும், ஒருவாறு சமாளித்த திருப்தி மனசுக்குள்!

வீட்டிற்கு வந்தபோது, சுப்பு வேலை செய்து கொண்டிருந்தாள். ஒரு பிரச்னை ஓய்ந்துவிட்ட நிம்மதி ஒரு பக்கம்.

''என்ன... இன்னைக்கு எதுவும் தேறலயா...'' என்றாள் துளசி.

சுப்பு இருப்பதை, அவன் ஜாடையில் காட்டினான்.

''இனி, கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கணும்; நீ ஆடுற ஆட்டம் அந்த பயலுகளுக்கு கேட்டுருச்சு போல... கொஞ்ச நாள் சும்மா இருந்து தொலை,'' என்றான் எரிச்சலாக!

''என்ன, அடக்கி வாசி, கொடக்கி வாசின்னு... 20 ஆயிரம் ரூபாய் பிச்சை காசுக்கு, அந்த ஆபிசுல, 15 ஆண்டா குப்பை கொட்டி என்னத்த கண்டோம்... அதுலயே சாப்பிட்டு, குழந்தைகளை படிக்க வெச்சு, அப்பப்பா முடியுதா... ஏதோ சொந்த வீடுங்கறதால வாடகை பிரச்னையில்ல... கம்பெனியா கேள்வி கேட்குது... நடுவில இவனுக யாரு...'' புலம்பியபடி இருந்தாள், துளசி.

அன்று, வீட்டிற்கு திரும்பியபோது, வாசலில் புத்தம் புதிய, 'ஆக்டிவா' நின்றிருந்தது; யோசனையாய் உள்ளே நுழைந்தான்.

''வண்டி யாருது துளசி?'' என்றான்.

''சுப்புது தான்; பாத்தீங்களா அவளுக்கெல்லாம் வந்த வாழ்வை... வீட்டு வேலை செய்யறதுக்கு வண்டியில வந்து போறா,'' முகவாயை தோளில் இடித்தாள்.

''காதுல விழப்போகுது, பாத்து பேசு... ஏதுனா பேசி, அவளை துரத்தி விட்டுட்டு, அப்புறம் என்னை போய் கூட்டிட்டு வரச்சொல்லி தொல்லை பண்ணாத,'' என்றான் எரிச்சலாக!

''அவ, துணி எடுக்க மொட்டை மாடிக்கு போயிருக்கா... எல்லாம் நம்பள மாதிரி வேலை பாக்குறவங்ககிட்ட சுட்ட காசு... வேலை பாக்கிற இடத்துல இவயெல்லாம் கை வைக்காமயா இருக்கப் போறா... இவங்க காட்டுலதான் இப்பயெல்லாம் மழை. நம்பளை மாதிரி ஆளுங்க உட்கார்ந்து உட்கார்ந்து சம்பாதிச்சாலும், பத்து காசு மிச்சம் பண்ண முடியுதா...'' அலுத்துக் கொண்டாள். அதற்குள் சுப்பு வரவும், அந்த பேச்சு நின்றது.

''என்ன சுப்பு... புதுசா வண்டி வாங்கியிருக்க போல,'' என்று விசாரித்தான்.

''ஆமாம் சார்... வண்டி இல்லாம, இப்படி அப்படி நவுர முடியல. நாலஞ்சு வூட்டுல வேலை பாக்குறேன்... வண்டி மட்டும் இருந்தா, இன்னொரு வூடும் சேத்து பாக்கலாம்ல...'' என்றாள்.

''இன்னொரு வீடா... அம்மாடி எப்படி முடியுது உன்னால... என்னால எங்க வீட்டு வேலையையே பாக்க முடியல,'' என்றாள் துளசி பொறாமையாய்!

வாய் விட்டு சிரித்தாள் சுப்பு.

''யம்மா... உங்க பலவீனம் தான் எங்க பலமே... நம்மால முடியாத வேலைய யாரோ, எங்கனயோ செஞ்சுக்கினுதான் இருக்காங்க... இதான்மா எங்களோட பொழப்பு. இதை வச்சுக்கினு தானே நாங்க வாழ்ந்தாகணும். எனக்கு வருத்தமெல்லாம் அது இல்லய்யா, எல்லாமே வேலை தான்... எல்லாரும் அவங்கவங்க இடத்துல வேலை செய்றாங்க... ஆனா, 'ஏசி' ரூம்ல வேலை பாக்குறவங்களுக்கு கிடைக்கிற மரியாதை எங்களுக்கு கிடைக்கிறது இல்ல,'' அவளுடைய பேச்சில் நியாயம் இருந்தது.

ஆனால், துளசிக்குதான் அவளிடம் ஏற்பட்ட அந்த மாற்றம் உகப்பாய் இல்லை. மட்டம் தட்டி, அங்கலாய்த்தவாறு இருந்தாள்.

''மிஸ்டர் சந்திரன்... இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல; இந்த கம்பெனி வளர்ச்சிக்கு எவ்வளவோ உண்மையா உழைச்ச நீங்க, இந்த சின்ன விஷயத்துல சறுக்கியிருக்க கூடாது,'' மேனேஜர் சொன்னபோது, திணறலாய் பார்த்தான் சந்திரன்.

''பில்லில் இருந்த கடைக்கு போன் செஞ்சு கேட்டப்போ, முதல்ல தெரியாதுன்னுட்டான். பின், கொஞ்சம் அதட்டி கேட்டப்ப, நீங்க போலியா பில் வாங்குற தகவல் வந்தது. கூடவே மத்த விஷயங்கள்ல நீங்க செய்யிற தில்லுமுல்லும் தெரிய வந்தது.''

''சார்... வந்து...''

''இது, பெரிய நடவடிக்கை எடுக்குற குற்றமில்லாட்டியும், நம்பிக்கைங்கற பெரிய அஸ்திவாரம் ஆட்டம் காணுது இல்லயா... மறுபடியும் அந்த நம்பிக்கையை பெறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... இனி, நீங்க இந்த ஆபிசுல உங்கள எப்படி நிரூபிக்கப் போறீங்க... எனக்கே உங்க மேல நடவடிக்கை எடுக்க கஷ்டமா இருக்கு.''

அவமானத்தில் சுட்டது, மனம். இருந்தாலும், 'என்ன இவன், பெரிய வெங்காயமாட்டம் சொல்றான்... இவன் மட்டும் ஒழுங்கா... கம்பெனி மீட்டிங்குக்கு போயிட்டு வந்த செலவை, இரண்டு மடங்கா காட்டுவான்... கம்பெனி காரை எடுத்து, ஊர் பூரா சுத்திட்டு, பெட்ரோல் கணக்கை கம்பெனி கணக்கோடு சேர்த்துருவான்... தன் சொந்த இடத்தை, ஆபீஸ் குடோனுக்கு வாடகைக்கு விட்டுட்டு, ஒண்ணும் தெரியாதவன் மாதிரி, 'டபுள் சார்ஜ்' வாடகையா வாங்குவான்...

'தேனை எடுக்கறவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்; இதுல எந்த குத்தமும் இல்லை. தோ, நம்ம வீட்டு வேலைக்காரி கூடதான் வெளி வேலைக்கு அனுப்பினா, கமிஷன் அடிச்சுட்டு வர்றா... அந்த காசுலதான அவ, 'ஆக்டிவா' வாங்கியிருக்கா... அவ சம்பாதிக்கிற காசுல இதெல்லாம் செய்ய முடியுமா என்ன... என்னவோ நான் மட்டும் தான் இந்த உலகத்துலயே இந்த வேலைய செய்ற மாதிரி...' மனசுக்குள் புலம்பியபடி வண்டியை செலுத்தினான்.

தெரு முனையில் இருந்த நாடார் கடை முன், சுப்புவின் வண்டி நின்றிருந்தது. வேலை பார்க்கும் யார் வீட்டிற்கோ சாமான் வாங்க வந்திருப்பாள் போல் தோன்றியது.

சட்டென்று யோசனை தோன்ற, பைக்கை மறைவாய் நிறுத்தி, தலையை ஹெல்மெட்டால் மூடியபடி கடை வாசலில் நின்று கொண்டான்.

''அண்ணாச்சி... மாமி வூடு, வக்கீல் வூடு, ரெண்டு வீட்டு சாமான் லிஸ்டும், பையும் தனித்தனியா இருக்கு... சட்டுன்னு குடுத்துடுங்க; எனக்கு இன்னும் ரெண்டு வூட்டுக்கு போக வேண்டியிருக்கு,'' என்று சொல்லி லிஸ்டை கொடுத்தவள், கடையை பராக்கு பார்க்க ஆரம்பித்தாள்.

பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் எடுத்து, தனித்தனியாய் கட்டி கொண்டு வந்து வைத்துவிட்டு போனான் கடை பையன்.

''எல்லாம் சரியா இருக்கா அண்ணாச்சி... ஒரு ரூபாய் குறைஞ்சாலும், நுாறு ரூபாய்க்கு கேள்வி கேட்பாங்க,'' என்றாள் அலுப்பாக!

''அது சரி... வூட்டு வேலைக்குதானே சம்பளம் தர்றாங்க... இதுக்கெல்லாம் காசா தர்றாங்க... எதுக்கு உன்னை அதிகாரம் பண்ணிட்டு. சரி, சரி... வக்கீல் வீட்டுல வாங்கின ஹெல்த் டிரிங்ஸ் பாக்கெட்டுக்கு இலவசமா ஒரு பக்கெட் தந்திருக்கான்; அந்த ஹெல்த் டிரிங்ஸ் பாக்கெட்டுல அதைப்பத்தி எதுவும் போடல... அதனால, அவங்களுக்கு அதுபத்தி தெரிய நியாயமில்ல. நீ போகும்போது வந்து பக்கெட்டை வாங்கிக்க,'' என்றார் அண்ணாச்சி.

சுப்பு ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.

''எனக்கெதுக்கு அண்ணாச்சி ஊரான் வீட்டு காசு, உழைக்கிற காசே ஒட்ட மாட்டேங்குது... எனக்கு அந்த ஹெல்த் டிரிங்கோ என்னமோ சொல்றியே, அதுல ஒரு பாக்கெட் எடுத்து வை, போகும்போது வாங்கிக்கறேன். இப்பயே வாங்கிட்டு போனா, ஒரு வேலை முடியும் தான்... ஆனா, போன வாரம் இப்படி நினைச்சு, துளசி அம்மா வீட்டுக்கு பழம் வாங்க சொல்ல, நானும் வாங்கிட்டு போயிட்டேன். அதுக்கு அந்தம்மா என்னை ரொம்ப சந்தேகப்பட்டு பேசிடுச்சு...

''வருத்தமா புடுச்சு... யாரோ அப்படி இப்படி இருக்கத் தான் செய்றாங்க; அதுக்காக எல்லாரையும் ஒரே மாதிரி எடை போடக் கூடாதில்ல... ஒரு தடவை திருடி பழகிட்டா, அடுத்து சம்பாதிக்கிற காசுல செலவு செய்ய புடிக்காது; இதுதான மனுஷனோட இயல்பு. நம்ம மனசோட கடிவாளம் நம்ம கையிலதான இருக்கு. அதை கண்டபடி விட்டுட்டு, அடுத்தவன் எங்க தப்பு செய்றான்... அவனை பாத்து நாம ஆறுதலா சமாதானம் பண்ணிக்கலாம்ன்னு திரியக்கூடாது. நமக்கு தேவை அதிகமாச்சுன்னா, அதை நிறைவேத்துற உழைப்பை தான் ஆண்டவன்கிட்ட கேட்கணும்... அதை விட்டுட்டு, அடுத்தவன் காசை குறிவச்சு, நாம நகரக் கூடாதில்ல... நான் வரட்டுமா,'' என்று சொல்லி, தன் வண்டியை கிளப்பிக் கொண்டு பறந்தாள்.

ஒடுங்கிப் போய் நின்றான், சந்திரன்.

'இப்போது எதற்கு இங்கு வண்டியை நிறுத்தினோம்... நம் மனது, சுப்பு சொன்னது போல், எதற்கு ஆசைப்பட்டது...' என்று யோசித்தபோது, வெட்கமாய் இருந்தது.

'தவறுக்கு தவறை சமாதானமாய் தேடி அலைந்த மனசு, திருத்திக்கொள்ள எத்தனிக்காமல் அடுத்தவர் மேல் திருட்டு சுமை இருக்க வேண்டும் என்று கள்ளத்தனமாய் ஆசைப்பட்டு தான் இங்கு காத்திருந்திருக்கிறது...' தன் குறையை உணர்ந்த சந்திரன், முதன் முறையாய் திருத்திக்கொள்ள, யோசித்தபடியே வண்டியை நோக்கி நடந்தான்.

எஸ். பர்வின் பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us