தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சக்தி இருந்தால்...

சக்தி இருந்தால்...

சக்தி இருந்தால்...


PUBLISHED ON : ஜன 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்!

- என்பது வள்ளுவர் வாக்கு. நாம் நினைத்தது, அப்படியே நடக்க வேண்டுமானால், அதற்குண்டான சக்தி நமக்கு இருக்க வேண்டும். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நானும் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்று, அனைத்து ஜீவராசிகளையும், தன்னைப் போலவே பாவித்து வாழ்பவர்களுக்கே அத்தகைய சக்தி கிடைக்கும்.

ஜோத்பூர் என்ற ஊரில், லாடுபாவா என்பவர் வாழ்ந்து வந்தார். ஹரி பக்தரான அவர், காண்பவை அனைத்திலுமே கண்ணனைக் காண்பவர். 'எனக்கு வலிப்பதை போன்று தானே மற்ற ஜீவராசிகளுக்கும் வலிக்கும்... அப்படியிருக்க, என்னால் எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்ய முடியும்...' என்று சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க மாட்டார்.

ஒரு சமயம், மகாவிஷ்ணுவின் திருத்தலங்களை தரிசிப்பதற்காக ஜோத்பூரை விட்டு புறப்பட்டார் லாடுபாவா.

ஒவ்வொரு ஊராக சென்று, அங்கிருக்கும் ஆலயங்களை தரிசிப்பதும், அடியார்களை வணங்குவதுமாக தன் பயணத்தை தொடர்ந்தவர், காவூர் எனும் ஊரை அடைந்தார். அவ்வூரில் உள்ளவர்கள், தினமும் காளி வழிபாடு செய்து, பின், ஒரு மனிதனை காளிதேவிக்கு நர பலியிட்டு வந்தனர்.

இந்நிலையில், அவ்வூருக்கு வந்த லாடுபாவாவைக் கண்டதும், அவரை இழுத்து வந்து, காளியின் முன் பலி பீடத்தில் நிறுத்தி, வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர்.

இதையெல்லாம் கண்டு மனம் பதறாமல், எல்லாம் கண்ணனின் செயல் என, கண்களை மூடி, பரம்பொருளை தியானித்தார் லாடுபாவா. அவரின் ஹரிபக்தியின் சக்தியை உணர்ந்த காளிதேவி, விக்கிரகத்தில் இருந்து வெளிப்பட்டு, நரபலியிட துணிந்த பாதகர்களை அழித்தாள்.

தியானத்தில் ஆழ்ந்திருந்த லாடுபாவா, கண்களைத் திறந்து பார்த்தார். எதிரில் சாந்த ஸ்வரூபத்தோடு நின்றிருந்த காளியை பார்த்து, கைகளை கூப்பி தொழுதார்.

'பக்தனே... என் அண்ணனைத் தியானித்த உன்னை காப்பது என் கடமை; வேண்டும் வரம் கேள்...' என்றாள்.

'தாயே... இவ்வளவு நாட்கள் நரபலிக்கு நீ இசைந்திருந்தது போதும். இன்றோடு, இவ்வூர் மக்கள் நரபலியை நிறுத்த வேண்டும். அவர்கள் பழி, பாவமெல்லாம் நீங்கி, சாத்விக குணத்தோடு, ஹரிபஜனை செய்ய வேண்டும்...' என்று வேண்டினார்.

'அப்படியே நடக்கும்...' என்று ஆசி கூறிய காளி, அவ்வூர் அரசருக்கு கனவில் காட்சியளித்து, 'மன்னா... என் கோவிலில் நடைபெறும் நரபலியை உடனே நிறுத்து. என் ஆலயத்தில் லாடுபாவா என்ற பக்தன் தங்கியுள்ளான்; அவன் விருப்பப்படி செய்...' என கட்டளையிட்டாள்.

கனவு கலைந்த மன்னர், விடிந்ததும், காளி கோவிலை நோக்கி ஓடினார். அங்கு, காளிக்கு பலி கொடுக்கும் செயலில் இறங்கிய தன் நாட்டு மக்கள் இறந்து கிடப்பதைக் கண்டார். அத்துடன், காளியால் காப்பாற்றப்பட்ட பக்தரையும் தரிசித்தார். அவரை வணங்கிய மன்னர், அன்றோடு தன் நாட்டில் நரபலியை தடை செய்ததோடு, அனைவரையும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடச் செய்தார்.

மக்களும், பக்தரை வணங்கி, ஹரி பக்தியில் ஈடுபட்டு, ஹரி பஜனையில் திளைத்தனர். தன் உயிர் போல் பிற உயிர்களையும் மதித்து, உயிர்களை பலிகொடுக்கும் செயலை, இறை சக்தியால் தடுத்து நிறுத்திய லாடுபாவாவின் உண்மையான பக்தி, எத்தகையது என்று புரிந்தது அல்லவா!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

அரியானே யாவர்க்கும்

அம்பரவா அம்பலத்து எம்

பெரியானே சிறியேனை

ஆட்கொண்ட பெய்கழற் கீழ்

விரை ஆர்ந்த மலர் தூவேன்

வியந்து அலறேன் நயந்து உருகேன்

தரியேன் நான் ஆமாறு என்

சாவேன் நான் சாவேனே!

விளக்கம்: தேவர்கள், முனிவர்கள் கூட காண்பதற்கு அரியவனே! ஞான ஆகாயத்தில் விளங்குபவனே! சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் எம் இறைவனே! சிறியவனான அடியேனை ஆட்கொண்ட, வீரக்கழலை அணிந்த உன் திருவடிகளுக்கு மணம் நிறைந்த மலர்களை தூவ மாட்டேன்; உன் திருவருளை நினைந்து, வியப்படைந்து அலறவும் மாட்டேன்; உன்னை விரும்பி உள்ளம் உருகவும் மாட்டேன். இப்படிப்பட்ட நான் உய்யும் வழி ஏது? இனிமேல் பொறுத்திருக்க மாட்டேன். இறப்பேன்; நான் இறப்பேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us