PUBLISHED ON : செப் 24, 2023

சித்துார் எனும் ஊரில் பிறந்து, திருப்பதியில் வாழ்ந்தவர்,- வெங்கம்மா என்ற அம்மையார். பிறந்ததில் இருந்தே திருப்பதி ஏழுமலையானை, தன் துணையாக எண்ணி வாழ்ந்தார்.
அந்தக்கால வழக்கப்படி, சிறுமியாக இருந்தபோதே, அம்மையாருக்கு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே, அம்மையாரின் கணவர் இறந்து விட்டார்.
ஏழுமலையானையே, தன் -கணவராக எண்ணியிருந்த அம்மையார், விதவைக்கோலம் பூணவில்லை. உறவினர்களும் ஊராரும் திட்டி, அம்மையாரை விரட்டியடித்தனர்.
திருப்பதியில் வாழ்ந்த தாள்ளபாக்கம் அன்னமாசாரியார் குடும்பத்தினர், அம்மையாரை, தங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டிலேயே தங்க வைத்து, மிகுந்த அன்போடும், ஆதரவாகவும் இருந்தனர்.
ஆனால், அம்மையார் இருந்த வீட்டின் மற்றொரு பக்கம் இருந்த, ராமையா தீட்சுதுலு என்ற அர்ச்சகர் குடும்பத்தினர், அவருக்கு இடையூறுகள் பல தந்தனர்.
தன் வீட்டின் பின்பக்கத்தில், சிறு தோட்டம் அமைத்து, துளசி மற்றும் மலர்ச்செடிகள் வளர்த்து, அவற்றை ஏழுமலையானுக்கு அளிக்கும் திருப்பணியையும் செய்து வந்தார்.
அர்ச்சகர் வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்து, எச்சில் இலைகளை அம்மையாரின் தோட்டத்தில் வீசி எறிவர். பல நேரங்களில் எச்சில் இலைகள், துளசிச் செடிகள் மேல் விழும்.
'இவ்வாறு செய்யாதீர்கள். துளசியும், மலர்களும் ஏழுமலையானுக்கு உரியவை. தெய்வத்தன்மை வாய்ந்தவை. பாவத்தைச் சுமக்காதீர்கள்...' என, பொறுமையோடு அம்மையார், அவர்களிடம் கூறினாலும், அலட்சியம் செய்தனர்.
ஒருநாள், மாலை, தோட்டத்தில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்திருந்தார், அம்மையார். நேரம் போனதே தெரியவில்லை. இரவு சாப்பிட்டு முடித்து, அர்ச்சகர் வீட்டினர், எச்சில் இலைகளை வீச, அவற்றில் ஒன்று, அம்மையாரின் மீது விழுந்தது.
அதிர்ச்சியடைந்து, கண் விழித்தவர், 'இவ்வாறு செய்த பாவியின் பரம்பரை அழிந்து போகும்...' என்றார், அம்மையார்.
கொஞ்ச நேரத்தில், அர்ச்சகர் வீட்டில் இருந்தவர்கள், வாந்தி -பேதி வந்து, ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தப்பிப் பிழைத்த ஓரிருவர் ஓடி வந்து, அம்மையாரின் கால்களில் விழுந்து, மன்னிக்க வேண்டி அழுதனர்.
மனம் இரங்கி, 'இனி, உங்கள் பரம்பரையில், குடும்பத்தில் ஒருவருக்கு ஒரே குழந்தை மூலம் சந்ததி வளரும்...' என்றார், அம்மையார்.
நல்லவர்களுக்கு செய்யும் தீங்குகள், குடும்பத்தில் கை வைத்து விடும் என்பதை விளக்கும் வரலாறு இது.
அம்மையாரின் சமாதித்தலம், திருப்பதியில் உள்ளது. ஏழுமலையான் திருக்கோவிலில், இன்றும், இரவில் நடை அடைப்பதற்கு முன், தினமும் செய்யப்படும் கடைசி ஆரத்தி, அம்மையாரின் திருப்பெயராலேயே வழங்கப்படும்; அவர் இயற்றிய மங்கல பாடல் இசைக்கப்படும்.
பி. என். பரசுராமன்
