PUBLISHED ON : செப் 24, 2023

கமலநாதன் எழுதிய, 'காலத்தை வென்ற கலைஞர்கள்' நுாலிலிருந்து:
நடிகை சாவித்திரி, நடிப்பில் நடிகையர் திலகம்.
தயாரிப்பாளராக, இயக்குனராக மாறி, சில படங்களை எடுத்தார். தோல்விகளால் நிலைகுலைந்து போனார். இந்த சூழலில், இவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், நடிகர் ஜெய்சங்கர்.
அப்போது, 'யாரும் என்னை மாதிரி வாழாதீங்க. அதை சொல்லத்தான் இந்த விழாவில் கலந்துக்கிட்டேன்...' என்றார், சாவித்திரி.
* தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக, அன்றும் இன்றும் கருதப்படுவது, தில்லானா மோகனாம்பாள். சிவாஜி - பத்மினி நடித்த படம். இவர்கள் இருவரும் இணைந்து, 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளனர்
* நடிகை பானுமதி, சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகையும் அவர் தான். படம், சண்டிராணி. இது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்றிலும் வெளியாகி வெற்றி பெற்றது
* சினிமா உலகின் முதல் ராணி என அழைக்கப்பட்டவர், டி.பி.ராஜலட்சுமி. தமிழில் முதல் பேசும் படமான, காளிதாஸ் படத்தில் நடித்த பெருமைக்குரியவர். இவர், புத்தகமும் எழுதியுள்ளார்.
ராஜலட்சுமி எழுதியுள்ள, 'கமலவல்லி' கதை, 1936ல், மிஸ் கமலா என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதன் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் செய்தவர், டி.பி.ராஜலட்சுமி
* இன்று, சினிமா நட்சத்திரங்களை அட்டையில் போட்டு, பாட நோட்டுகள் கூட வருகின்றன. ஆனால், தமிழ் பட உலகில் முதன் முதலில் இந்த பெருமையை பெற்றவர், பேபி சரோஜா.
பால யோகினி என்ற படத்தில், சரோஜா என்ற பாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படம், பேபி சரோஜாவுக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. பலர், தங்கள் வீட்டில் இவர் புகைப்படத்தை மாட்டினர். அந்த காலத்தில், பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு, சரோஜா என, பெயர் வைத்தனர்.
இவரது புகைப்படத்துடன், கை பைகள், நோட்டு புத்தகங்கள் வெளிவந்தன.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோப்பின் மீது, சரோஜா படத்தை போட்டு, சரோஜா சாண்டல் என, விற்றது, ஒரு சோப்பு கம்பெனி.
பேபி சரோஜாவுக்கு பின் இன்று வரை, பல குழந்தைகள், தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், இவர் அளவுக்கு பிரபலமாகவில்லை.
***
அருண் சுப்பிரமணியம் எழுதிய, 'வ.அய்.சுப்ரமணியம் கட்டுரைகள் - இலக்கணமும் ஆளுமைகளும்' நுாலிலிருந்து:
மனோன்மணியம் சுந்தரனார் மன்ற திறப்பு விழாவிற்கு, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அழைக்க சென்றிருந்தனர்.
'ஊரில் ஒரு பகுதியினர் இதற்கு ஒத்துழைக்காமல் உள்ளனர்...' என்றார், வ.அய்.சுப்ரமணியம்.
'கறிவேப்பிலையை பார்... கறியில் மணமிருப்பதற்காக அதை எங்கிருந்தாவது தேடிப்பிடித்து எடுத்து வந்து பயன்படுத்துகிறோம்.
'கறியை தாளித்து பரிமாறியதும், நீயும், நானும் என்ன செய்கிறோம்...அதை முதலில் எடுத்து வைத்துவிட்ட பின்தானே சாப்பிடுகிறோம். அவர்களையும் அதுபோல பயன்படுத்த வேண்டுமப்பா. பகைத்துவிடக் கூடாது...' என்றார், கவிமணி.
- நடுத்தெரு நாராயணன்
