sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/என் அப்பா! - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி... (5)

என் அப்பா! - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி... (5)

என் அப்பா! - ஏவி.எம்., சரவணனின் சிறப்பு பேட்டி... (5)


PUBLISHED ON : செப் 24, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்போது நடிகர்களுக்குள் போட்டி, பொறாமை அதிகம் இருந்ததா? எல்லாரும் மனிதர்கள் தானே!

எம்.ஜி.ஆர்., - சிவாஜி, என்.டி.ஆர்., இப்படி எல்லார் காலத்திலும் போட்டி இருந்திருக்கு; பொறாமை இருந்ததே இல்லை.

'டாப் ஸ்டார்'களான ரஜினி, கமல் இரண்டு பேரிடமும் போட்டி இருந்தது; பொறாமை இருந்ததில்லை. ஒருமுறை, ரஜினி, என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, கமல் வந்து விட்டார். இருவரும் இயல்பாக பேசினர்.

அப்போது, ரஜினிகிட்ட, 'உங்க இரண்டு பேருக்கும் போட்டி இருக்கிறது, பொறாமை இல்லை...' என்று சொன்னேன். 'ஆமாம் சார்...' என்று, இருவருமே ஒப்புக் கொண்டனர்.

கமல், அரசியலுக்கு வந்தார். ரஜினி, ஒருவேளை அரசியலுக்கு வந்திருக்க வாய்ப்பு இருந்ததா?

ஒருமுறை நானும், எஸ்.பி.முத்துராமனும், ஒரு புத்தக வெளியீட்டிற்காக, ரஜினி வீட்டிற்கு சென்றோம். புத்தகத்தை நான் வெளியிட, ரஜினி பெற்றுக் கொண்டார். அப்போது, அரசியல் பற்றி பேச்சு வந்தது. ரஜினியிடம், 'நீங்கள், அரசியலுக்கு சரி வர மாட்டீர்கள்...' என்றேன்.

'ஏன்... ஏன் சார்...' என்றார், ரஜினி.

'உங்களால் முடியாது. அது வேற உலகம். இப்ப கூட, விழாவில் ரெண்டு போட்டோ எடுத்த பிறகு, மூன்றாவது போட்டோ எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க. ஆனால், பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது. பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். அனுசரித்து செல்ல வேண்டும். அது, உங்களால் முடியாது...' என்றேன்.

இதைக் கேட்டதும், மவுனமாகி விட்டார், ரஜினி.

முன்பு, ஆண்டுக்கு சராசரியாக எத்தனை படங்கள் வெளியாகும்?

இருபத்தைந்து முதல் 30 படங்கள் வெளியாகும். ஆனால், இன்று மிக அதிக படங்கள் வெளியாகின்றன.

பாரம்பரியம் மிக்க உங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம், 178 படங்கள் வரை தயாரித்திருக்கிறீங்க. இப்போது ஏன் படங்கள் தயாரிப்பதில்லை?

இப்போது, எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. என் பேத்தி தான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். அவளுக்கு சினிமா ஆர்வம் உள்ளது. படம் தயாரிக்கக் கூடும்; பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்டுடியோக்கள், திருமண மண்டபங்களாவதும், அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆவதும் பற்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது. எங்கள் ஸ்டுடியோ, திரை அரங்கம், பள்ளி அனைத்திலும் எங்கள் சகோதரர்கள் மூன்று பேருக்கும் பங்கு உள்ளது. ஸ்டுடியோவின் பின் பாதி, அடுக்கு மாடி வீடுகளாக கட்டப்பட்டு விட்டது. காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டியது தான்.

உங்கள் குடும்பத்தில், நான்காவது தலைமுறையில் யாருக்கு சினிமா மீது ஆர்வம் உள்ளது?

மகன் வழி பேத்திகளான அபர்ணா, அருணா இருவரில், அருணாவுக்கு சினிமாவில் ஆர்வம் உண்டு. புதிய புதிய முயற்சிகள் செய்து வருகிறார்.

புதிதாக வரக்கூடிய தயாரிப்பாளர்களுக்கு, நீங்கள் சொல்ல விரும்புவது?

நாம எதுவுமே சொல்லத் தேவையில்லை. அவங்களே தெளிவாக இருக்காங்க. 'ஜாக்கிரதையா படம் பண்ணுங்க. ரொம்ப ஆசைப்படாதீங்க...' அவ்ளோ தான்.

இப்போதெல்லாம் நிறைய ஜாதி அரசியல் படங்கள் வெளியாவது பற்றி?

சிவப்பு மல்லி என்று, ஒரு கதையை வாங்கினோம். லியாகத் அலிகான் எழுதும் வசனங்கள் எல்லாம், அரசியல் கொஞ்சம் துாக்கலாக இருக்கும். அது, கம்யூனிசத்தை பற்றிய படம். எனவே, எங்கள் பேனரில் வெளியிடாமல், தம்பி பாலு பேனரில் வெளியிட்டோம். நாங்கள் முழுக்க முழுக்க அரசியல் படம் எடுக்கவில்லை.

உங்கள் அடையாளமான, வெள்ளை பேன்ட் - ஷர்ட்டுக்கு எப்படி மாறினீர்கள்?

அது, எதிர்பாராமல் அமைந்தது தான். பிள்ளைகளான எங்கள் நான்கு பேருக்கும் மொத்தமாக துணி எடுத்து, தைத்து தருவார், என் அம்மா. தம்பி, தங்கைகள் பல நிற உடைகளை எடுத்துக் கொள்வர். இறுதியாக இருந்த வெள்ளை நிற உடை எனக்கு அமைந்தது.

வெளியூர் படப்பிடிப்புகளின் போது, கலர் பேன்ட் தான் முதலில் பயன்படுத்துவேன். முரட்டுக்காளை படத்துக்கு பிறகு, முழுமையாக வெள்ளைக்கு மாறி விட்டேன்.

நீங்கள் எப்போதாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களா?

இல்லை. ஒருமுறை, என் அப்பாவிடம், 'வாழ்க்கை படத்தை இயக்கினீர்கள், பெரிய வெற்றி. ஏன் அடுத்த படத்தை இயக்கவில்லை?' என்று கேட்டேன்.

'ஒரு படம் எடுத்தேன் வெற்றி பெற்றது. அடுத்த படத்திலும் வெற்றியை நிரூபிக்க நிறைய மெனக்கெடல் வேண்டும். அதற்கு பதில், மற்றவர்களுக்கு வாய்ப்பு தந்து, நம் பங்களிப்பை தரலாம்...' என்றார்.

அவர் வழியை பின்பற்றியே நானும், படம் இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. தயாரிப்பு பொறுப்பை மட்டும் பார்த்தால் போதும் என்று இருந்து விட்டேன்.

உங்கள் தயாரிப்பு படங்களின் தலைப்பை யார் முடிவு செய்வர்?

படத்தில் உள்ளவர்களுடன் பொருத்தமான தலைப்பை சூட்ட கலந்துரையாடுவோம். சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு, 16 தலைப்புகளை எழுதி வந்திருந்தார், இயக்குனர் விசு. கடைசியாக, சம்சாரம் அது மின்சாரம் தலைப்பை ஏகமனதாக தேர்ந்தெடுத்தோம். அன்பே வா தலைப்பு, நான்     சொன்னது. அதன்பின் பல படங்களுக்கான தலைப்பை நானே முடிவு செய்தேன்.

எங்கள் பட நிறுவனம் தயாரித்த ஒரு படத்தையே, மீண்டும் சிறிது மாற்றி, மனோரமா மற்றும் நடிகர் பாண்டியராஜனை வைத்து, பாட்டி செயால்லை தட்டாதே என்று புதிதாக ஒரு படத்தை எடுத்தோம். அதுவும், 'ஹிட்' ஆனது.

உங்கள் நிறுவனத்திற்கென்று, ஓ.டி.டி., தளம் ஒன்று கொண்டு வரலாமே...

பேத்தி அருணா, அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

திரைப்படத் துறையில், 80 ஆண்டுகளை கடந்து வந்துள்ளீர்கள். அதுபற்றி...

நிறைய புதியவர்களை, திறமையானவர்களை எங்கள் நிறுவனம் மூலம் அடையாளம் காட்டினோம் என்ற பெருமகிழ்ச்சி, எப்போதும் எங்களுக்கு உண்டு. என் அப்பா, கடின உழைப்பின் மூலமாக, இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

மக்கள் ரசனைக்கு ஏற்ப படங்கள் தயாரித்தோம் என்ற திருப்தி உள்ளது. இன்னும் அடுத்த தலைமுறையினருக்காகவும் உழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

இத்தனை ஆண்டு காலம் எங்களோடு பயணித்த அத்தனை தமிழ் மக்களுக்கும், 'தினமலர்' நிர்வாகத்திற்கும் எங்களுடைய நன்றிகள்!

-முற்றும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us