PUBLISHED ON : செப் 24, 2023

செப்., 27 - உலக காது கேளாதோர் தினம்
'வரும், 2050ம் ஆண்டிற்குள், உலகில் நான்கு பேரில் ஒருவருக்கு, காது கேட்பதில் குறைபாடு ஏற்படும்...' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.
செவித்திறன் கவனிப்பின்மை மற்றும் அணுகுமுறை பற்றாக்குறை என, காது பற்றிய விழிப்புணர்வு குறைபாடே இதற்கு காரணம் என்கின்றனர்.
செவித்திறன் இழப்பைத் தடுக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகள் இங்கே...
* வாகன சத்தம், பட்டாசு சத்தம், கச்சேரி மற்றும் பொது கூட்டங்கள் போன்ற இடங்களில் எழும் இரைச்சல் சூழ்ந்த இடத்தில் இருப்பதை தவிர்க்க முயலுங்கள். பெரும்பாலான காது கேளாமை பிரச்னைகளுக்கு அதிகப்படியான சத்தமும், இரைச்சலும் தான் காரணம்
* அதிக சத்தம் உள்ள சூழலில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் இருந்தால், மிருதுவான 'இயர் பிளக்ஸ்' அல்லது 'இயர் மப்ஸ்' பொருட்களை பயன்படுத்துங்கள்
* உங்கள் மொபைல் போன்களில், இயர் போன்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கவும். காதுகளில், 'வாக்மேன், ஹெட்போன்' அணிந்தாலும், மிக குறைந்த அளவு சத்தத்தில் வைத்துக் கேட்க வேண்டும். சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக் கொள்ளவும்
* குளிர்ச்சியான மற்றும் சமைக்காத காய்கறி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது காதுகளில் செல்லும் குழாய்களில் ரத்த ஓட்டத்தை தடை செய்து, உள் உறுப்புகளை பாதிக்கும்
* பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள், பால் பொருட்களை தவிர்த்தல் நல்லது. இவை அனைத்தும், அதிகப்படியான சளியை உருவாக்கி, காதுகளின் உள் உறுப்புகளை பாதிக்கும். முக்கியமாக, காதுகளில் பிரச்னை உள்ளோர், முடிந்தளவு பெர்ரி பழ வகைகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். இது, காதுகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, காது கேளாமையை தடுக்கிறது
* வைட்டமின், 'டி, பி12' உணவுகள், போலிக் அமிலமுள்ள உணவுகள், வெள்ளை பூண்டு போன்றவைகளை அன்றாட உணவில் பயன்படுத்துங்கள். இவை அனைத்தும் பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அதேசமயம், சமையலில் உப்பை அளவாக பயன்படுத்துங்கள். இவை காதுகளின் நலன் காக்கும்
* ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால், காது கேளாமை பிரச்னைகள், 20 சதவீதம் தடுக்கப்படுகிறது. வைட்டமின், 'ஈ' சத்து நிறைந்த உணவுகள், காதுகளுக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது
* பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், இரைச்சலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். செவித்திறனை மேம்படுத்த தினமும் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது
* உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு அதிகரிப்பது, காது கேட்கும் ஆற்றல் குறைபாட்டை ஏற்படுத்துவதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்
* காதின் உள்ளே புகும் நீர், தொற்றுகளை உண்டாக்குவதுடன், காது கேட்கும் திறனையும் கடினமாக்கும். எனவே, நீச்சல் அல்லது குளிக்கும்போது, காது செருகிகளைப் பயன்படுத்தலாம்
* மது அருந்துதல், புகைபிடித்தல் பழக்கம், காதில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துவதுடன், காது நோய் தொற்றுகளை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
கோவீ. ஆர்
