PUBLISHED ON : செப் 24, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 38 வயது பெண். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கும், கணவருக்கும், 15 ஆண்டுகள் வித்தியாசம். வீட்டின் வறுமை மற்றும் அரசு உத்தியோக மாப்பிள்ளை என்ற தகுதி, எங்களை இணைய வைத்தது.
திருமண வாழ்வு அர்த்தமில்லாமல் போனது தான் மிச்சம். கணவரின் அன்பும், ஆதரவும் இதுவரை எனக்கு கிடைக்கவே இல்லை. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
எங்கள் திருமணத்துக்கு முன்பே அவருக்கும், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும், அப்பெண்ணுடன் நட்பு தொடரவில்லை என்ற செய்தி, நிம்மதியாக இருந்தது.
திருமணம் ஆன சில ஆண்டுகளுக்கு பின், வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ளதை அறிந்து, அவரிடம் சண்டை போட்டேன். அன்று முதல் அடி, உதை கிடைக்க ஆரம்பித்தது.
என் மகள்களுக்காகவும், பொருளாதார பாதுகாப்பு இல்லாமையாலும், அவரது கொடுமைகளை சகித்துக் கொண்டேன்.
சமீப காலமாக, வீட்டு செலவுக்கான பணம் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார், கணவர். பெண்களின் படிப்பு செலவு மற்றும் சாப்பாட்டுக்காக பலமுறை அல்லாடி, அவரிடம் கெஞ்சி கூத்தாடி சமாளித்து வருகிறேன்.
'உங்களை எல்லாம் நிரந்தரமாக துரத்தி விட்டுட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன். என் பணி ஓய்வுக்கு பின், வேறு ஊரில் அப்பெண்ணுடன், 'செட்டில்' ஆகப் போகிறேன்...' என்று கூறி வருகிறார்.
எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இவ்வளவு காலம் இவரது கொடுமைகளை எதற்காக தாங்கிக் கொண்டோம் என்ற விரக்தி தோன்றுகிறது.
படிப்பறிவு இல்லாத, வெளி உலகமே அதிகம் தெரியாத நான், இதை எதிர்கொள்ள, தகுந்த ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கணவர் விஷயத்தில் நீ, இதுவரை தற்காப்பு ஆட்டம் ஆடி விட்டாய்; இனி, அதிரடி தாக்குதல் வியூகத்தை பார்ப்போம்...
நீயும், மகள்களும், சமைத்து சாப்பிட்டு விட்டு, காலி பாத்திரங்களை கவிழ்த்துப் போடு. வீட்டு சமையலுக்கு பணம் தராதவனுக்கு எதற்கு சோறு? கொலை பட்டினி கிடக்கட்டும்.
வீட்டின் மின்சாரம், குடிநீர் வினியோகத்தை துண்டி. கணவரின் படுக்கையில் நெருஞ்சி முள்ளை போடு. கணவரின் மொபைல் போனை கவர்ந்து, ஒளித்து வை. கணவர் எது கேட்டாலும், நீயும், மகள்களும் காதுகேளாதோர் போல இருங்கள்.
கணவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு நீயும், மகள்களும் போங்கள். கணவரின் மேலதிகாரியிடம், 'அரசு வேலை பார்த்துக் கொண்டு, இரண்டாவது திருமணத்திற்கு நாக்கை தொங்க போட்டு அலைகிறார்...' என, ஒப்பாரி வைத்து, எழுத்துப்பூர்வ புகார் கொடு.
மகளிர் காவல் நிலையத்துக்கு போய், 'கணவர், ஸ்திரிலோலனாய் அலைகிறான். வீட்டு செலவுக்கு பணம் தரமாட்டேன் என்கிறான்...' என, நீயும், மகள்களும் புகார் கொடுங்கள். கணவரை, 'லாக்கப்'பில் வைத்து, முட்டிக்கு முட்டி தட்டட்டும், பெண் போலீஸ்.
கணவரின் மொபைல் போனிலுள்ள பெண்களின் எண்ணை தேடி எடுத்து, தொடர்பு கொள்.
'என் கணவருடனான தொடர்பை துண்டித்து கொள்ளவில்லை என்றால், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் கூட்டிப் போவேன்...' எனக் கூறு.
உன் கணவர் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் பெண்ணிடம், 'ஒழுங்கு மரியாதையா என் புருஷனை விட்டுட்டு ஓடி போய்டு. இல்ல சங்கை கடிச்சு துப்பிடுவேன்...' என, அதிரடி செய்.
மகள்களை துணைக்கு வைத்து, கணவருடன் பேச்சுவார்த்தை நடத்து.
'என்னை பத்தாம் கிளாஸ் படிச்ச பட்டிக்காடுன்னு தப்புக்கணக்கு போடுறியா? பத்து டிகிரிக்கு சமமா வாழ்க்கைக் கல்வி பெற்றவடா, நான். எங்களை நடுத்தெருல நிறுத்திட்டு, நீ மஞ்ச குளிப்பியா?
'உன் மேல், 'ஆசிட்' அடிக்க ரொம்ப நேரமாகாது. ஆனா, நான் அதை செய்ய மாட்டேன். நீயும் மனுஷனா நட, நானும் மனுஷியா நடக்கிறேன்.
'நாம் ஒரு சமாதான உடன்பாடு பண்ணிக்குவோம். ஒன்பது லட்சம் ரூபாயை மூணா பிரிச்சு, எங்க மூணு பேர் பேர்ல, 'பிக்சட் டெபாசிட்' பண்ணினா, அதன்பிறகு நாம் நீதிமன்றம் போய் முறைப்படி விவாகரத்து வாங்கிக்குவோம்.
'விவாகரத்துக்கு பின், எங்க வழில நீ வரக்கூடாது; உன் வழில நாங்க வரமாட்டோம். பெண்களை மதிக்கத் தெரியாத ஆண், ஒரு கிரிமினல் வேஸ்ட்...' எனக் கூறு.
உன் ருத்ரதாண்டவத்தை துளியும் எதிர்பார்க்காத கணவர், பயந்து நடுங்கி, சமாதான உடன்படிக்கைக்கு சம்மதிப்பார்.
சுயதொழில் செய்து, மகள்களை தொடந்து படிக்க வை.
எதிராளியின் ஆயுதத்தை வைத்து தான், நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை தீர்மானிக்க முடியும். அடங்க மறு, திமிறு, உச்சந்தலையில் காலை வை.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
