PUBLISHED ON : செப் 24, 2023

சிரமப்பட்டு படித்து, முன்னேறி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான, சம்பாதிக்கும் பெண் ஒருவர், வழக்கமாக என்ன செய்வார்...
தனக்கும், தன் பிள்ளைகளின் நிகழ்கால தேவைக்காகவும், எதிர்கால பாதுகாப்புக்காகவும் பணம் சேர்ப்பார்; இது தான், உலக இயல்பு. ஆனால், மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் கலாவதி ஜெய்பாலாஜி என்பவர், தன் சம்பாத்தியத்தை, ஏழை, எளிய மாணவியரை கல்லுாரியில் படிக்க வைப்பதற்காக, செலவிட்டு வருகிறார்.
அப்பா, 'டாஸ்மாக்' புண்ணியத்தில் இறந்திருப்பார்; அம்மா, நுாறு நாள் திட்டத்தில் வேலை பார்ப்பார். கூலி கிடைக்கும் நாளில் சாப்பாடு, அது இல்லாத நாளில் ரேஷன் அரிசி கஞ்சி. மழை பெய்தால் ஒழுகும் குடிசை...
இதுபோன்ற பின்னணியில் இருக்கும் மாணவியர், அவர்களின் நிலையை மாற்றும் ஒரே ஆயுதம், கல்வி தான் என்பதை உணர்ந்து படித்திருப்பர். முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் மதிபெண் எடுத்திருப்பர்.
தன் லட்சியத்தின் அடுத்த படிக்கு நகர, யாராவது துாக்கி விட வர மாட்டார்களா என்ற கனவுடனும், கண்ணீருடனும் காத்திருப்பர். இவரைப் போன்ற மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை படிக்க வைக்க முடிவு எடுத்தார், கலாவதி.
கல்விக் கண் தந்த காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ம் தேதி, சம்பந்தப்பட்ட மாணவியர்களை படிக்க வைப்பதற்கு, தேவையான பணத்தை வழங்கும் நிகழ்வை நடத்தினார். விழாவிற்கு மாணவியருடன் வந்திருந்த பெற்றோருக்கு அறுசுவை உணவு வழங்கி, மனதை மட்டுமின்றி வயிறையும் நிறைத்தார்.
'ஒரு பெண் படிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது, அந்த நிலையிலிருந்து வந்த, எனக்கு நன்கு புரியும். ஒரு பெண் படித்தால், அந்த குடும்பமே முன்னேறிவிடும் என்பதும் எனக்கு தெரியும். அதனால் தான், இந்த காரியத்தில் முழு மனதுடன் இறங்கினேன்.
'இது அத்தனையும் சாத்தியமாக, கணவர் ஜெய்பாலாஜியின் அன்பும், ஆதரவும் முக்கிய காரணம். இதற்காக, 'பிரபஞ்சா' என்ற அறக்கட்டளையை துவக்கியுள்ளேன்.
'யாரும் உதவாவிட்டால், படிப்பை கைவிடும் நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவியரை மட்டும் தேர்வு செய்து, அவர்களின் கல்லுாரி கனவை நனவாக்கும், என் இந்த முயற்சி தொடரும்.
'இதற்காக யாரிடமும் நன்கொடை வாங்கப் போவது இல்லை. உழைத்து, என் நேர்மையான வருமானத்தில், எத்தனை பேரை படிக்க வைக்க முடியுமோ, அவர்களை முழுமையாக படிக்க வைப்பேன்...' என்றார், கலாவதி.
கலாவதியின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்த விரும்புவோருக்கான, அவரது, 'இ - மெயில்' முகவரி: prapanjafoundations09@gmail.com
எம்.ஆர்.ஜே.,
