PUBLISHED ON : செப் 24, 2023

காலையில் அரை மணி நேரம் நடை பயிற்சி செய்வது, சுந்தரின் பழக்கம். தினமும் அவன் நடக்கும் வீதியின் கடைசி வீட்டைப் பார்க்கும் பழக்கம், எப்படி ஏற்பட்டதென அவனுக்கே தெரியாது.
யாரையோ உரக்க பெயர் சொல்லி அழைக்கும் சத்தம் வீதி வரை கேட்க, அக்குரலின் வயது என்னவாக இருக்கும் என்று, மனதில் ஆராய்ச்சி துவங்கியது. குரலின் இனிமையும், வசீகரமும், அவள் அழகை சொல்லாமல் சொல்லியது.
மீண்டும் மாலையில் ஒருமுறை நடந்தான். மாலை நேரத்து குழல் விளக்கின் ஒளியில், ஜன்னல் வழியே அவளது முகம் தென்படுகிறதா என்று பார்த்தான்.
வேறு பக்கம் திரும்பிப் பார்த்தபடி இருப்பது, நிச்சயம் அவள் தான். உறுதியுடன் சில நொடிகள் அங்கு நின்று, முதல் மாடிப் பக்கம் திரும்பினான். அந்த வசீகரக் குரலுக்கு சொந்தக்காரி, எதேச்சையாக சுந்தரத்தைப் பார்த்து விட்டாள்.
இத்தனை நாட்களாக சுந்தரின் உறக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்த அந்த அழகி, இவன் சற்றும் எதிர்பாராதபோது, உதடு சுருக்கி, காற்றில் ஊதி விட்டாள். இவன் அதை உள்ளங்கையில் பிடித்து, சட்டை பையில் ஒளித்து வைத்தான்.
ஒரு ஆணின் அன்பை உணராது எந்தப் பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்ததில்லை. பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆண்கள், இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை என்ற வழக்கத்தை மீறாமல், சுந்தர் - கிருத்திகா இருவரின் காதல், இரு வீட்டுக்கும் தெரிந்து, திருமணத்தில் போய் முடிந்தது.
முதல் இரவு அன்று -
''உங்களுக்குத் தெரியுமா? 'இறைவா... நல்ல அழகும், அறிவும் உள்ள ஒருவனை கணவனாக்கு...' என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்றாள், கிருத்திகா.
''சரி, இறைவன் என்ன பதில் சொன்னான்?'' என்றான், சுந்தர்.
''அறிவாளிகள் திருமணம் செய்து கொள்வதில்லை,'' என்றாள், கிருத்திகா.
''அடிக்கள்ளி... நீ, சொல்வது புரியாத அளவிற்கு நான் என்ன முட்டாளா?'' என்று, அவள் சேலையை பிடித்து இழுத்தாள்.
''அறிவாளியும் இல்லையே, அதான் திருமணம் வரை வந்து விட்டீர்களே,'' என்றாள்.
காதல் காண்டம், திருமண வைபோக காண்டமாக மாறினாலும், நாள்பட நாள்பட, இருவருக்குமிடையே கண்ணுக்கு புலப்படாத சுவர் ஒன்று கிளம்பி, தன் உயரத்தை அதிகரித்து கொண்டிருந்தது.
இருவருமே வேலைக்குப் போய் சம்பாதிப்பதால், பெரும்பாலும் அது உன் பணம், என் பணம் என்ற பேதம் பிறந்தது.
திருமணம் ஆகி, ஐந்தாறு ஆண்டுகள் ஆன பிறகும், குழந்தை பாக்கியம் இல்லை. அது ஒன்றும் பெரிய காரணம் இல்லை என்றாலும், சுந்தர் - கிருத்திகா வாழ்க்கை, பெரும்பாலும் வெறுமையான மவுனங்களில் கழியத் துவங்கியது. சில சமயங்களில் அந்த மவுனம் வெடித்து, வார்த்தை யுத்தமாகியது.
''இந்த தேவை இல்லாத காதல், திருமணத்தில் முடிந்தது தான், என் வாழ்க்கையை மாற்றி விட்டது. எனக்கு சாகலாம் போல் இருக்கிறது...'' என்றான், சுந்தர்.
''நீங்கள் எதற்கு சாக வேண்டும், நானே சாகிறேன்...'' என்று, எதிர் குரல் கொடுத்தாள், கிருத்திகா.
வார்த்தைகள் தடித்து, வன்மம் வெடித்தது. கேட்க சகிக்க முடியாத வகையில், இருவர் பேச்சும் மாறியது.
அந்த சமயம், வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்திய சுந்தரின் நெருங்கிய நண்பன், மோகன், செய்வதறியாது நின்றான்.
கதவு திறந்தது. அங்கே நிசப்தம் நிலவியது.
''என்ன இவ்வளவு அமைதி. நான், தவறான நேரத்தில் வந்துட்டேனா?'' என்ற மோகனை, செயற்கை புன்னகையுடன் உட்கார சொன்னான், சுந்தர்.
அடுத்த சில நிமிடங்களில், மூவருக்கும் தேநீர் எடுத்து வந்தாள், கிருத்திகா.
''சுந்தர் - கிருத்திகா, நான் சொல்வதை நீங்கள் தப்பா எடுத்துக்க வேண்டாம். நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது, தெரு வாசல் வரை கேட்கிறது. அப்படி என்ன பிரச்னை? நான் தலையிடலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையெனில் கிளம்பி, இன்னொரு நாள் வருகிறேன்.
''காற்றால் இலைகள் உதிர்வதில்லை, மாறாக, உதிர விரும்பும் இலைகள், காற்றுக்காக காத்திருக்கின்றன. பிறந்தவர் எல்லாரும் இறந்து தான் ஆக வேண்டும். இதற்கு நடுவில் இருப்பது தான் வாழ்க்கை.
''பிரச்னை என்பது ஒரு வார்த்தை அல்ல; நீண்ட வாசகம். சவால். அதை சமாளிக்கும் இடத்தில் நாம் எல்லாருமே இருக்கிறோம்,'' என்றான், மோகன்.
''சரி, டீ ஆறிடும். முதலில் குடியுங்கள்; பிறகு பேசலாம். எப்படியும் எத்தனை சொன்னாலும் உங்க நண்பர் கேட்க மாட்டார்; அவர் நெனச்சதை தான் செய்வார். நான் சொல்லி, நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றாள், கிருத்திகா.
டீ குடித்து கிளம்பிய மோகனிடம், ''டேய் மச்சான், போகாத. நீ, எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லா தெரிஞ்சவன். இதற்கு, என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை சொல்லிட்டுப் போ,'' என்றான், சுந்தர்.
''நான் சொல்வதை, 'அட்வைஸ்' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்...'' என்று, பீடிகையுடன் துவங்கினான், மோகன்.
பிறகு, தன் மொபைல் போனை எடுத்து, ''இங்கே பாருங்க, இன்னைக்கு காலையில, ஒரு பெரியவர் எனக்கு, 'வாட்ஸ் ஆப்'ல இந்த, 'மெசேஜ்' அனுப்பியுள்ளார். நமக்கு இந்த நேரத்தில் மிகவும் பொருந்துகிறது. சத்தமா படிக்கிறேன். முடிஞ்சா கேளுங்க...'' என்றான்.
''சரிடா மச்சான், படி...'' என்றான், சுந்தர்.
உங்க இறுதி ஊர்வலத்திற்குப் பின், என்ன நடக்கும் தெரியுமா? ஒரு சில மணி நேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கி விடும்.
அடுத்தவேளை உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சொந்தக்காரங்க கொஞ்ச நேரம் உங்க உடல் பக்கத்தில் நின்னுட்டு, சத்தம் போடாம யாருக்கும் சொல்லாம, கிளம்பி விடுவாங்க.
கூட்டத்தில் வந்திருக்கும் ஓர் இளம்பெண்ணும், இளைஞனும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக் கொள்வர்.
சில ஆண்கள், 'தம்' ஒன்று போடவும், டீக்கடை வரையும் போய் வரலாம் என்றும் கிளம்புவர்.
உங்கள் இறுதி சடங்கு முடிந்து, பந்தி நடக்கும். சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டி இருக்கலாம் என்று, உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் காதில் விழும்படி சொல்வார்.
ஏதோ அவசர சூழ்நிலையால் துக்கத்திற்கு நேரில் வர இயலவில்லை என்று, உங்கள் வீட்டு உறுப்பினரிடம் போனில் பேசுவர், உறவினர் சிலர்.
இத்தனை துாரம் வந்தாச்சு. போகிற வழியில் அங்கேயும் ஒரு நடை போயிட்டு வரலாம் என்று வெளியூர் உறவுகள், சுற்றுலா திட்டங்களை ரகசியமாக போடலாம்.
இந்த இரண்டு நாட்களில் எவ்வளவு ரூபாய் செலவாகி விட்டது என்று, உங்கள் நெருக்கமான உறவினர், கணக்கு பார்த்து நொந்து போவார். வந்திருந்த கூட்டம் மெல்ல கரைந்து, கலைந்திருக்கும்.
அடுத்த சில நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல், உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரும். உங்கள் முகநுாலில் சிலர், பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பர். உங்கள் இடத்துக்கு வேறு ஒருவரை தேடி அமர்த்தி இருக்கும், அலுவலகம்.
உங்கள் பெற்றோர் கூட ஓரிரு மாதங்களுக்கு பிறகு, 'டிவி'யில் வரும் நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பர். அடுத்த சில மாதங்களில், உங்கள் இதர உறவுகள், வழக்கம் போல, சினிமாவுக்கும், 'பீச்'சுக்கும் சகஜமாக செல்லத் துவங்கி இருப்பர். அத்தனை பேரின் உலகமும் எப்போதும் போல மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
பெரியதொரு ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே வெகு வேகமாய் எந்தச் சலனமுமின்றி நடக்கும்.
நீங்கள் வியக்கும் வேகத்தில், இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள். இதற்குள் உங்கள் முதல் ஆண்டு திதி, மிகவும் சிரத்தையாக நடக்கும்.
கண்மூடித் திறக்கும் நொடியில், ஆண்டுகள் பல ஓடி விடும். உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது. என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களில் நீங்கள் தென்படுவீர்கள். அவர்கள் கண்களில் ஒருவேளை கொஞ்சம் நீர் கசியலாம்.
அபூர்வமாய் உங்களைப் பற்றி யாரோ ஓரிருவர் மட்டும், யாரிடமோ பேசக் கூடும்.
மற்றபடி நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி, பல ஆண்டுகள் ஆகியிருக்கும்... உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில், யாரைத் திருப்திப்படுத்த, இன்று இப்போது இவ்வளவு சண்டை போட்டுக் கொண்டு, சாகிற முடிவு வரை போய் விட்டீர்கள்?
மொபைல் போனையே பார்த்து படித்து முடித்த மோகன், அவனை அறியாமல் தலை நிமிர்ந்தபோது, அங்கே, சுந்தர் - கிருத்திகா இருவரையுமே காணவில்லை.
'அட, யாருக்கு நான் இத்தனை நேரம் படித்துக் கொண்டிருந்தேன்...' என எண்ணியபடி, எழுந்து உள்ளே போய் பார்த்தான்.
சமையல் அறையில் இருவரும் கட்டி அணைத்து, விசும்பிக் கொண்டு இருந்தனர். சலனத்தை, சங்கடத்தை அந்த அரவணைப்பு மாற்றிக் கொண்டிருந்தது.
'சரி, இனி நமக்கு இங்கே வேலை இல்லை...' என நினைத்தபடி, சத்தம் போடாமல், செருப்பை அணிந்து, படி இறங்கினான், மோகன்; இப்போது அவனது மனதில், நிம்மதி குடி கொண்டிருந்தது.
பால சாண்டில்யன்
