/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...
/
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...
PUBLISHED ON : செப் 18, 2011

தகவல் தொடர்பு வசதி, தொழில்நுட்ப வசதி என, உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மக்களிடம் புரையோடிப் போய்விட்ட, மூடப் பழக்கங்களை, யாராலும் மாற்ற முடியாது போல் இருக்கிறது.
நம் நாட்டில் மட்டுமல்ல. உலகின் பல நாடுகளிலும், இந்த மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் உள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், படித்தவர்கள் கூட, இந்த மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பது தான்.
இந்தோனேஷியாவில் அரங்கேறும் மூடப் பழக்கத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இங்குள்ள மக்கள், ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால், தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும் என, இங்குள்ள மக்களில் சிலர் உறுதியாக நம்புகின்றனர். அதற்காக, ரயில் வரும் போது, தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பரோ என, கற்பனை குதிரையை, தட்டி விட வேண்டாம்.
இங்கு இயங்கும் ரயில்கள் அனைத்தும், மின்சார ரயில்கள் தான். ரயில்கள் கடந்து சென்ற, அடுத்த சில நிமிடங்கள் வரை, தண்டவாளங்களில் மின் அதிர்வுகள் இருக்கும் என்றும், அப்போது தண்டவாளத்தில் படுத்தால், மின் அதிர்வுகள் உடலுக்குள் ஊடுருவி, பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். டாக்டர்களால் தீர்க்க முடியாத பல நோய்கள் கூட, இந்த, 'தண்டவாள தெரபி'யால், குணமடைந்து விடுகிறதாம்.
இவர்களை எச்சரிப்பதற்காக, தண்டவாளங் களின் ஓரத்தில், எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பலன் இல்லை. 'தண்டவாளத்தில் படுப்பவர் களுக்கு, மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்...' என்று, சட்டம் கூட கொண்டு வரப்பட்டு விட்டது; ஆனால், தண்டவாளத்தை நோக்கி, அலை, அலையாக குவியும் மக்களைத் தடுக்க முடியவில்லை.
'பெரும் விபரீதம் ஏற்படும் முன், இந்த பிரச்னையை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, மனித உரிமை ஆர்வலர்கள் அலறத் துவங்கியுள்ளனர்.
***
சாம் கிறிஸ்ட்