
பெரியவர்கள் வாக்கிற்கு, பெரும் சக்தி உண்டு. அதே சமயம், அப்பெரியவர்கள், சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தாங்களே செயல்படுத்தியும் காண்பிப்பர். இப்படி செயல்படுவோர், வயதில் பெரியவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை.
ஊர் ஊராகப் போய், மக்கள் உயர்வதற்காக நல்வழி காட்டி வந்த புத்தர், ஓர் ஊரில் தங்கியிருந்தார்.
அந்த ஊரில் பஞ்சம் பரவத் துவங்கி, தீவிரமாக ஆக்கிரமித்தது. அன்ன ஆகாரமில்லாமல் மக்கள் தவித்தனர். செல்வந்தர்கள் இருப்பதை வைத்து சமாளித்தனர்; ஆட்கள் மூலம் வெளியூர்களில் இருந்து பொருட்களை, வாங்கி வரச் செய்து, தங்களைக் கவனித்துக் கொண்டனர்.
பொருள் வசதியோ, ஆள் பலமோ இல்லாத சாதாரண மக்கள் என்ன செய்வர்...
ஒருநாள், புத்தரின் உபதேசத்தை கேட்க, ஏராளமானோர் கூடியிருந்தனர். பெரும்பாலும் செல்வந்தர்களே இருந்தனர். பார்வையை அவர்கள் மேல் வீசிய புத்தர், 'இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள்... மக்களின் நிலை உங்களுக்கே தெரியுமே. பஞ்சத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவ, உங்களில் ஒருவர் கூட இல்லையா...' என, கேட்டார்.
பதிலே இல்லை; ஒருவரும் வாயே திறக்கவில்லை.
அதற்காக புத்தர் விடவில்லை; தொடர்ந்தார்...
'அல்லல் காலத்தில், அடுத்தவர்களுக்கு உதவக்கூட, இங்கு யாரும் இல்லையா... இந்த கூட்டத்தில் ஒருவர் கூடவா, இல்லாமல் போய் விட்டனர்...' என்று, உருக்கமாகக் கேட்டார்.
'ஏன் இல்லை... நான் இருக்கிறேன்...' என்று, அமைதியை கிழித்து, ஒரு குரல் எழுந்தது. அனைவரும் குரல் வந்த திசையில் திரும்பினர். அங்கே, சிறுமி ஒருத்தி கம்பீரமாக எழுந்து நின்றாள்.
கூட்டமே வியந்தது. காரணம்... அவள் வயதை நோக்கி அல்ல; தகுதியை நோக்கியே வியந்தனர். அச்சிறுமி, அவ்வூரிலிருந்த பெரும் செல்வந்தரின் மகள்; பெயர் சுப்ரியா. மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட அவளுக்கு, பசியோ, பட்டினியோ தெரியவே தெரியாது.
அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து, பாடம் கற்றுக் கொள்வதில் கரை கண்டவள், சுப்ரியா.
அவளிடம், 'அம்மா... நீயோ சிறு குழந்தை. இக்கட்டான இந்நிலையில், உன்னால் என்ன செய்ய முடியும்...' என்று கேட்டார், புத்தர்.
'வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பேன். கிடைக்கும் அன்னத்தை, பசியால் தவிப்பவர்களுக்குத் தருவேன்...' என்றாள், சுப்ரியா.
சொன்னது மட்டுமல்ல; செயலிலும் காட்டினாள்; பிட்சா பாத்திரம் ஒன்றை எடுத்து, வீடு வீடாக போய் பிச்சை கேட்டாள். பெரும் செல்வந்தர் வீட்டுப்பெண் கேட்கிறாள் என்றதும், பாத்திரம் நிறைந்தபடி இருந்தது.
பாத்திரம் நிறைய நிறைய, அவ்வப்போது போய், பசியால் தவிப்பவர்களின் பசியைத் தணித்து, மறுபடியும் பணியை தொடர்ந்து செய்தாள், சுப்ரியா.
சீக்கிரமே பஞ்சம் தீர்ந்தது.
மார்க்கண்டேயன், பிரகலாதன் மற்றும் துருவன் என, குழந்தை செல்வங்களை ஏராளமாக கொண்டது, இந்நாடு. இன்றும், பெற்றோர் கொடுத்த சிறிதளவு பணத்தைச் சேமித்து, வெள்ளம், -புயல் என்று வரும்போது, அப்படியே கொடுத்த குழந்தைகளும் உள்ளனர்.
ஈர நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் முளைப்பதைப் போல, குழந்தைகள் உள்ளம், ஈரமான உள்ளம். அதில் நல்லவைகளை விதைத்தால், நல்லவைகள் முளைக்கும். அவர்கள் உள்ளத்தில் நல்லவைகளை விதைப்பது, நம் கடமை.
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில், மீன்கள் உயிர் வாழாது.