
பிளஸ் 2 கணக்கு பரீட்சை எழுத கிளம்பினாள் சுகுணா. நன்றாக தயாராகியிருந்தாலும், மனதில் குழப்பமும், பயமும் இருந்தது.
'அம்மா பாவம் எனக்காகவும், தங்கைக்காகவும் உயிர் வாழ்பவள். நான், நல்ல மார்க் வாங்கினால் தான், கவுன்சிலிங்கில் கவர்மென்ட் கோட்டாவில் இன்ஜினியரிங் சேரலாம்...' மனம் பலவித சிந்தனைகளில் ஆழ்ந்தது.
''ஆல்தி பெஸ்ட் சுகுணா. இன்னைக்கு மேத்ஸ் இல்லையா. நல்லா செய்,'' எதிர் வீட்டு மாலதி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தபடி புன்னகைத்து கூறினாள்.
''தாங்க்யூக்கா... வர்றேன்,'' என்று கிளம்பினாள் சுகுணா.
வாசலில் வந்து நின்றாள் பத்மா.
''என்னம்மா... சுகுணா கிளம்பிட்டா... நீங்க வேலைக்கு போகலையா?''
''இல்லம்மா.., அவளுக்காக தான் ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன். பரீட்சைக்கு படிக்கிறா. கூட இருந்து, நேரத்துக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்கலாம்ன்னு, வீட்டில்தான் இருக்கேன்.''
''ஓ.கே.,ம்மா கிளம்பறேன். சாயிந்தரம் பார்ப்போம்,'' வேலைக்கு கிளம்பினாள் மாலதி.
கேள்வித்தாளை பார்த்ததும், சுகுணாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. 'என்ன இது, எதுவுமே தெரியாதது போல இருக்கு. தெரிந்த கணக்குகள் எதுவுமே இல்லாதது போல... ஏன் இப்படி?' என்று மனம் குழம்ப... கைகள் நடுங்க, தைரியத்தை வரவழைத்து, எழுத ஆரம்பித்தாள்.
மகளின் வரவுக்காக, வாசலிலேயே காத்து நின்ற பத்மா...
''என்ன சுகுணா... தேர்வு, ”லபமா இருந்திச்சா, நல்லா செய்தியா?'' ஆர்வத்துடன் கேட்க, பதிலே சொல்லாமல் வீட்டினுள் சென்றாள் ”குணா.
''என்னம்மா... என்ன ஆச்சு, ஏன் என்னவோ போல் இருக்கே?''
''பரீட்சை சரியா செய்யலம்மா... பாஸ் ஆவேனான்னு சந்தேகமா இருக்கு,'' குரல் உடைய சுகுணா சொல்ல... உள்ளுக்குள் அதிர்ந்தாலும், சமாளித்துக் கொண்டவளாக...
''நீ, நல்லாதான் செஞ்சிருப்பே. பதட்டத்தில் இப்படி நினைக்கிற. ஒண்ணு, இரண்டு தப்பா போனாலும், நல்ல மார்க் வரும். சரி வா சாப்பிடு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அடுத்த பரீட்சைக்கு படிக்கலாம்.''
''இல்லம்மா. இப்ப சாப்பாடு வேண்டாம். படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா சாப்பிடறேன்.''
''சரிம்மா... கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். நான், 4:00 மணிக்கு எழுப்பறேன். போய் படுத்துக்க.''
கணவன் வேலையில் இருக்கும்போது இறந்ததால், கருணை அடிப்படையில், பத்மாவுக்கு வேலை கிடைக்க, இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
இல்லாதவர்களுக்கு படிப்புதானே செல்வம். அதை வைத்து தானே முன்னுக்கு வர வேண்டும். மகளை நினைத்து கவலைப்பட்டாள் பத்மா.
''அம்மா, அக்கா கணக்கு பரீட்சை எப்படி எழுதிஇருக்கா?'' ஸ்கூல் விட்டு வந்த தங்கை கேட்க...
''எக்சாம் கஷ்டமா இருந்திருக்கும் போல, மனசு சரியில்லாம படுத்திருக்கா.''
''அட போம்மா... அக்கா அப்படித்தான் சொல்லும். கடைசியில் நல்ல மார்க் எடுத்திடும். சரி அக்கா எங்க?''
''படுத்திருக்கா. இன்னும் சாப்பிடல.''
''நீ சாப்பாடு எடுத்து வை... நான் போய் கூட்டிட்டு வர்றேன்.''
''அம்மா நான் ட்யூஷன் போய்ட்டு வர்றேன்,'' என்று தங்கை கிளம்ப...
'நான் கணக்கில் பெயிலாகப் போவது நிச்சயம். இன்ஜினியரிங் சேர வேண்டும். படித்து, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும். எதுவுமே நிறைவேறப் போவதில்லை. என்னால் அம்மாவுக்கு தான் கஷ்டம். நான் வாழவே தகுதியில்லாதவள். என்னால் எல்லாருக்கும் கஷ்டம். நான் போனால், தங்கையும், அம்மாவுமாவது நிம்மதியாக இருப்பர்...' என மூளை சொல்ல, மனம் தடுமாறியது.
''அம்மா என்ன செய்ற?''
''ராத்திரிக்கு டிபன் செய்துட்டு இருக்கேன் சுகுணா. என்ன வேணும்?''
''எனக்காக, பிள்ளையார் கோவிலுக்குப் போய், அர்ச்சனை செய்துட்டு வர்றியாம்மா. மனசுக்கு குழப்பமாக இருக்கு.''
மகளை அன்புடன் பார்த்தவள்...
''சரி, போறேன். நீ, எழுதின பரீட்சையை பத்திக் கவலைப்படாம, அடுத்த பரீட்சைக்கு கவனமாகப் படி சுகுணா. அரை மணியில் வந்துடறேன்.''
கோவிலுக்குச் செல்ல வாசலுக்கு வந்தவள், எதிரில் மாலதி ஸ்கூட்டியில் வருவதைப் பார்த்தாள்.
வண்டியை நிறுத்தியவள்...
''என்னம்மா... சுகுணா, எக்சாம் நல்லா செய்திருக்காளா?''
''சரியா செய்யலைன்னு சோர்ந்து போயிருக்கா மாலதி. அதான் என்னை போய் கோவிலில் அர்ச்சனை செய்துட்டு வரச் சொன்னா. அடுத்த பரீட்சைக்கு படிக்க சொல்லிட்டு கிளம்பினேன். எனக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கு. கடவுள் எழுதின விதிப்படிதான் நடக்கும். சரி, நான் கோவிலுக்கு போய்ட்டு வந்துடறேன். சின்னவளும் டியூஷன் போயிட்டா. சுகுணா தனியா இருக்கா. சீக்கிரம் வரணும்.''
பத்மா தெருவில் நடக்க...
மூடியிருந்த கதவைப் பார்த்தாள் மாலதி.
நேராக வீட்டிற்கு போகாமல், சுகுணாவின் வீடு நோக்கி சென்றாள்.
காலிங் பெல்லை அழுத்தி, கதவையும் தட்டினாள் மாலதி.
துப்பட்டாவை எடுத்து, மேஜையின் மேல் ஏறியவள், 'யாரது, அம்மா, ஏதாவது எடுக்க திரும்ப வந்துவிட்டார்களா...' சட்டென்று இறங்கி, துப்பட்டாவை அங்கிருந்த கட்டிலில், தலையணை அடியில் மறைத்து வைத்தாள். கண்களை துடைத்து, கதவைத் திறந்தாள்.
''அக்கா, நீங்களா வாங்க.''
கண்கள் சிவந்து, முகம் சோர்ந்து நிற்பவளைப் பார்த்தாள் மாலதி.
''என்ன சுகுணா... கணக்கு பரீட்சை கஷ்டமா; சரியா செய்யலையா?''
''ஆமாம்கா. நல்லாதான் ரிவிஷன் செய்திருந்தேன். எக்சாம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு.''
தலை தாழ்த்தி பதிலளித்தாள் சுகுணா.
''சரி என்ன பண்ற. அடுத்த பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சுட்டியா?''
''ஆமாம்கா. படிச்சுட்டு இருந்தேன்.''
இயல்பாக உள்ளே நுழைந்த மாலதி, ''வா சுகுணா... உன்னோடு கொஞ்சம் பேசணும்.''
''உட்காருங்க அக்கா.''
''வா... நீ படிக்கிற அறைக்கே போகலாம்.''
புஸ்தகம் பிரிக்கப்படாமல் மேஜை மீது இருக்க, தலையணைக்கு அடியில் துப்பட்டாவின் நுனி எட்டிப் பார்க்க, மாலதி அதைக் கவனிக்கத் தவறவில்லை.
கட்டிலில் உட்கார்ந்தவள்... மருண்ட விழிகளுடன் நிற்கும் சுகுணாவை பார்த்தாள்.
''உட்கார் சுகுணா.''
தன்னருகில் உட்கார வைத்தாள். ''படிக்கிறது எதுக்காக சுகுணா. அறிவை வளர்த்துக்கத்தான். படிப்பு நமக்கு தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் கொடுக்கணும். கோழையாக மாத்தக் கூடாது,'' மாலதி பேச அவளைப் பார்த்தாள் சுகுணா.
''என்ன பார்க்கறே?'' தலையணை அடியில் இருந்த துப்பட்டாவை எடுத்தவள், ''மானத்தை மறைக்க பயன்பட்ட துப்பட்டாவை, உன் உயிரை எடுக்கற ஆயுதமாக மாத்தப் பார்த்தியா சுகுணா?''
''அக்கா...'' கண்கலங்க அவள் தோளில் சாய்ந்தாள்.
''இப்ப எதுக்கு அழற சுகுணா. உன் அம்மா கிட்டே பேசினேன். உள்ளுணர்வு தூண்ட, உன்னை பார்க்க வந்தேன்.
''தப்பும்மா. எப்படி இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு வரத் துணிஞ்சே. இப்ப என்ன... கணக்கு பரீட்சையில் பெயிலாகிட்டா, உலகமே அஸ்தமிச்சு போயிடுமா. இரண்டு மாசத்தில் அட்டெண்ட் பண்ணி, இந்த வருஷமே காலேஜில் சேரலாம்.
''சரி, அப்படியே மார்க் குறைஞ்சு போனாலும், இன்ஜினியரிங் தவிர, வேறு படிப்பே இல்லையா. உனக்கு பிடிச்ச சப்ஜெக்ட் எடுத்து படிக்க, எத்தனையோ படிப்புகள் இருக்கு. நான் அந்த, 'கயிட்' வாங்கித் தர்றேன். பரீட்சை முடிஞ்சதும், அதை புரட்டிப் பாரு. உனக்கு எது சரியா வரும்ன்னு பார்ப்போம்.
''நாம் வாழற வாழ்க்கை தான், நம்ப வெற்றி தோல்வியை தீர்மானிக்கணும். அதை நாம் எப்படி சந்திக்கிறோம்கிறதில் தான் எல்லாமே இருக்கு.
''உனக்குப் பிடிச்ச சப்ஜெக்டில் உன்னை ஈடுபடுத்தி முன்னுக்கு வர எத்தனையோ வழிகள் இருக்கு சுகுணா.
''வெற்றி, தோல்வி இரண்டையுமே இயல்பாக ஏத்துக்கணும். தோல்வி, இன்னும் முன்னேறுவதற்கான உத்வேகத்தைத் தரணும். வாழ்க்கைப் பாதையில், முட்செடிகளை நிரப்பறோமா, பூச்செடிகளை நடறோமாங்கிறது, நம் மனவலிமையைப் பொறுத்தது.
''உன் தோல்வி பயத்தை, தேவையில்லாத மன அழுத்தத்தை தூக்கியெறி. மனசில் நம்பிக்கையை விதை. தெளிந்த மனசோடு, அடுத்த பரீட்சைக்கு படிக்க ஆரம்பி. உனக்கு நிச்சயம் வளமான எதிர்காலம் இருக்கு. அதை ஆணித்தரமாக நம்பு. அதுக்கு கல்வியை ஊன்றுகோலாக பயன்படுத்து.''
கண்களைத் துடைத்துக் கொண்டாள் சுகுணா. தெளிந்த பார்வையுடன் மாலதியைப் பார்த்தாள். ''ஒரு நிமிடத்தில் முட்டாள்தனமாக முடிவெடுக்க இருந்த என்னை, காப்பாத்திட்டீங்க. நிச்சயம், நீங்க சொன்ன மாதிரி, மதிப்பெண் தான் வாழ்க்கையை முடிவு பண்ணுதுன்னு முட்டாள்தனமாக முடிவுக்கு வராமல், படிப்பை என் அறிவை வளர்த்துக்கிற கருவியாக்கி, வாழ்க்கையில் உயர்ந்து காட்டுவேன். இது சத்தியம்,'' என்று சொல்லும் சுகுணாவை, அன்புடன் தழுவிக் கொண்டாள் மாலதி.
***
பரிமளா ராஜேந்திரன்

