PUBLISHED ON : செப் 29, 2019

அரசு உயர்நிலை பள்ளியில், பிளஸ் 2, மாணவ - மாணவியர், 40 பேரும், இன்னும் நான்கு நாட்களுக்கு பின் நடக்க இருக்கும் தேர்வு பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வகுப்பாசிரியை, ராதாதேவி, வகுப்பறைக்குள் நுழைந்தார்.
'வணக்கம் டீச்சர்...'
''வணக்கம்... எல்லாரும் வந்துட்டீங்களா?'' என்றபடியே இருக்கையில் அமர்ந்தார்.
மாணவ - மாணவியரின் முகங்களை ஒரு நிமிடம் உற்று நோக்கி, ''உங்கள் முகங்களை பார்க்கும்போது, நீங்கள் அனைவருமே, நல்ல முறையில் தேர்வு எழுதி, வெற்றியடைந்து, நம் பள்ளிக்கு புகழை வாங்கித் தருவீர்கள் என்ற நம்பிக்கை, எனக்குள் ஏற்படுகிறது.
''அதுமட்டுமல்ல, உங்களின் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைய, இந்த தேர்வு அடித்தளமாக அமையப் போகிறது. ஆகவே, மாணவ - மாணவியரே, எல்லாம் வல்ல இறைவனை வணங்கி, ஆசிர்வதிக்கிறேன்... வெற்றியுடன் வாருங்கள்,'' என்று வாழ்த்தினார்.
'ரொம்ப நன்றி, டீச்சர்...' என்றனர், மாணவர்கள்.
''அப்புறம் ஒரு விஷயம்... பிளஸ் 2 தேர்வு முடிந்த மறுநாள், நீங்கள் அனைவரும், என் வீட்டுக்கு வர முடியுமா?'' என்றார், ஆசிரியை, ராதாதேவி.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, 'கட்டாயம் வருகிறோம், டீச்சர்...' என்றனர், கோரசாக.
''ரொம்ப சந்தோஷம்... மறக்காமல் காலை, 10:00 மணிக்கு வந்து விடுங்கள்; உங்களுக்காக, நான் காத்துக் கொண்டிருப்பேன்... வீட்டுக்கு போய் நன்றாக படியுங்கள்,'' என்று, அன்போடு வழியனுப்பி வைத்தார்.
அப்போது சக ஆசிரியைகளான, கவிதா மற்றும் கலாவும், 'என்ன மேடம்... பிள்ளைகளை, உங்க வீட்டுக்கு வரச் சொன்னீர்களே... ஏதாவது விசேஷமா?' என்றனர்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... கடந்த ஒரு வருஷமா, நம் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த பிள்ளைகள், இந்த தேர்வோடு, தனித்தனியாக பிரிந்து எங்கெங்கோ போய் விடுவர்... அப்படி போற பிள்ளைங்க மனம் சந்தோஷப்படுற மாதிரி, நாம ஏதாவது செய்யணும்ன்னு, சிறிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்...
''உங்களுக்கும் சொல்லணும்ன்னு நினைச்சேன்; அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க... நீங்க இருவரும், தேர்வு முடிந்து மறுநாள், என் வீட்டுக்கு வந்துடுங்க,'' என்றார்.
'கட்டாயம் வந்துடுவோம்... கவலைப்படாதீங்க...' என்று சொல்லி சென்றனர்.
பிளஸ் 2, தேர்வுகள் முடிந்த மறுநாள் காலை, 10:00 மணியளவில், மாணவ - மாணவியர் அனைவரும், ராதாதேவி வீட்டுக்கு வந்தனர்.
அவர்களை வரவேற்று, பிஸ்கட் மற்றும் பழங்கள் கொடுத்தவர், ''தோட்டத்திற்கு சென்று விளையாடுங்கள்... பிறகு அழைக்கிறேன்,'' என்றார்.
அப்போது, கவிதா மற்றும் கலா டீச்சர் இருவரும், ஒரே, 'ஸ்கூட்டி'யில் வந்திறங்கினர்.
பிள்ளைகள் வணக்கம் சொல்ல, இருவரும் பதில் வணக்கம் சொல்லி, ராதாதேவி வீட்டுக்குள் நுழைந்தனர்.
மாணவ - மாணவியர் சத்தமிட்டு விளையாடிக் கொண்டிருப்பதை, அவ்வழியே போவோர், வருவோர் அதிசயமாக பார்த்து சென்றனர். இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், வண்டியை நிறுத்தி, 'காம்பவுண்ட்' சுவர் வழியாக எட்டிப் பார்த்தனர்.
ஒரு மாணவியை அழைத்து, ''பாப்பா... இங்கே என்ன நடக்குது,'' என்று கேட்டான், ஒருவன்.
''நாங்க எல்லாரும், பிளஸ் 2 மாணவர்கள். இது, எங்க வகுப்பாசிரியை வீடு... தேர்வு எழுதி முடித்தவுடன், எங்களை வீட்டுக்கு வரச்சொன்னாங்க... வந்திருக்கோம்,'' என்றாள்.
''எதுக்கும்மா வரச் சொன்னாங்க.''
''தெரியாது... சொன்னாங்க, வந்திருக்கோம்.''
''சரிம்மா... நீ போய் விளையாடு!''
''இங்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போகலாமே,'' என, ஒருவன் கூற, நால்வரும் உள்ளே நுழைந்தனர்.
''வணக்கம் மேடம்... அனுமதியில்லாமல் உள்ளே வந்ததற்கு மன்னிக்கவும்,'' என்றான், ஒருவன்.
பின், அனைவரும் தங்களின் அடையாள அட்டையை காண்பித்தனர்.
''நாங்க இருவரும், 'டிவி' நிருபர்கள்; இவர்கள் இருவரும், பத்திரிகை நிருபர்கள்; நால்வரும் நண்பர்கள். தினமும், இதே பாதையில் தான் போய் வருவோம். இன்று, நிறைய பிள்ளைகள், உங்கள் வீட்டில், ஜாலியாக விளையாடுவதை பார்த்ததும், அதிசயமாக இருந்தது. என்னவாக இருக்கும் என்று, அறிந்துகொள்ள விரும்புகிறோம்,'' என்றான், நால்வரில் ஒருவன்.
''விசேஷம் ஒண்ணுமில்ல... இவங்க, பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்காங்க... இனி, கல்லுாரிக்கு போவாங்க... எல்லாரும் ஒரே கல்லுாரிக்கு போக மாட்டாங்க, மீண்டும் ஒண்ணா சேருவது ரொம்ப கஷ்டம். அதனால தான் எல்லாரையும் அழைச்சு, சின்ன விருந்து கொடுத்து, நல்ல அறிவுரை வழங்கி அனுப்பத்தான் இந்த ஏற்பாடு,'' என்றார், ஆசிரியை, ராதாதேவி.
'ரொம்ப நல்ல விஷயம் தான், மேடம்... உங்க அறிவுரையை நாங்களும் கேட்கலாமா?' என்றனர்.
''ஓ... தாராளமாக!''
'ரொம்ப நன்றி, மேடம்...' என்றனர்.
மதியம், 12:30 மணி.
மாணவ - மாணவியரை அழைத்து, ''எல்லாரும் முகம், கை, கால் கழுவி வந்து ஹாலில் அமருங்கள்,'' என்றார்.
ஹாலில் அமர்ந்த பிள்ளைகளை பார்த்து, ''குழந்தைகளே... வகுப்பில் தான் உங்களுக்கெல்லாம் நான் டீச்சர். இது, என் வீடு. வீட்டில் நீங்க எல்லாருமே, என் குழந்தைகள் தான். அதனால், இனிமேல் என்னை, 'மிஸ்' என்றோ, 'டீச்சர்' என்றோ அழைக்க வேண்டாம்... எல்லாரும், என்னை தாயாக நினைத்து, 'அம்மா' என்று அழைக்க வேண்டும்.''
இந்த வார்த்தையை கேட்டதும், பிள்ளைகளின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, எழுந்து வந்து, 'அம்மா... அம்மா...' என்று, ராதாதேவியை கட்டி அணைத்தனர்.
கட்டிப்பிடித்த பிள்ளைகளை, ராதாதேவியும், தாய்மை உணர்வோடு அணைத்துக் கொண்டார். இதை பார்த்த, கவிதா, கலா டீச்சர் மற்றும் நிருபர்களும் கண்கலங்கி பேச முடியாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
உள்ளே இருந்து ஹாலுக்கு வந்த ஒரு பெண், ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து வந்து வைத்தாள்.
''பிள்ளைகளே... மிகவும் களைத்து, பசியோடு இருப்பீர்கள். உங்களுக்கு சாப்பாடு பரிமாற உள்ளேன். எல்லாரும் போய் வரிசையாய் அமருங்கள்,'' என்றார்.
அனைவரும் அமர்ந்தவுடன், பாத்திரத்திலிருந்த சாதத்தை உருண்டையாக பிடித்து, பிள்ளைகளின் கையில் கொடுத்தார். அதை வாங்கிய பிள்ளைகள், ஆசையோடு சாப்பிட்டனர்.
நான்கு நிருபர்களும் கை நீட்ட, அவர்களுக்கும் கொடுத்தார்.
உருண்டை சாதத்தை சாப்பிட்டதும், வாழை இலையில், வடை, மைசூர்பாகு, கூட்டு, பொரியல், சாதம், சாம்பார், ரசம், பாயசம், அப்பளம், பழம் என, பரிமாறப்பட்டது. அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுவதை, ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள், ராதாதேவி.
கடைசியாக, ராதாதேவி சாப்பிடும்போது, எல்லா பிள்ளைகளும், தங்கள் கைகளால் ஆளுக்கு கொஞ்சம் சாதம் எடுத்து ஊட்டி, அவர்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
இதை எல்லாம், தங்கள் கேமராவில் பதிவேற்றினர், மீடியாக்காரர்கள்.
''பிள்ளைகளே... நீங்கள் எல்லாரும் தேர்வு எழுதி, தற்போது முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்... எல்லாரும் நல்ல முறையில் வெற்றி பெற வேண்டும் என்பதே, இந்த அம்மாவின் ஆசை... எதிர்பாராத விதமாக, உங்களில் ஒருவரோ, இல்லை, ஒன்றுக்கு மேற்பட்டோரோ, தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், என்ன செய்வீர்கள்...
''கடந்த ஆண்டு, நம் பள்ளியில், இரண்டு மாணவர்களும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டதை போல் செய்வீர்களா அல்லது வீட்டை விட்டு எங்காவது ஓடி விடுவீர்களா... சொல்லுங்கள்,'' என்றார், ராதாதேவி.
அனைவரும் மவுனம் காத்தனர்.
''சரி... அப்படியே தேர்வில் தோல்வி அடைந்தாலும், அதை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் காட்ட முயற்சி செய்யலாம். அதை விடுத்து, கோழைகளை போல கேவலமான முடிவுகளை எடுத்து, உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது...
''தேர்வில் வெற்றி பெற்றால், சந்தோஷப்படுவதும், தோல்வி அடைந்தால், தற்கொலையை நாடுவதும் எந்தவிதத்தில் நியாயமாகும்... தற்கொலை செய்து, என்ன சாதிக்க முடியும். பெற்றோரையும், மற்றவர்களையும், காலமெல்லாம் நிம்மதியில்லாமல் வாழச் செய்வதும், படித்த பள்ளிக்கு தீராத அவமானத்தை தேடித் தருவதும் தான் சாதனையா...
''தற்கொலை செய்ய வழி தேடுவதை விடுத்து, கொஞ்சம் மாற்றி யோசித்து, தேர்வை மீண்டும் எழுதி, வெற்றி பெறலாமே... அதிலும் வெற்றி பெற முடியாவிட்டால், கவலைப்படாதீர்கள். தொழிற்கல்வி படியுங்கள். ஏதாவது தொழிலை கற்றுக்கொள்ள எவ்வளவோ வழி இருக்கிறது. பொய் சொல்வது, திருடுவது, பிச்சை எடுப்பது... இது மூன்றை தவிர, மற்ற எந்த தொழில் செய்தாலும் கேவலமில்லை...
''எனக்கு தெரிந்த ஒரு பையன், தேர்வில் தோல்வியடைந்ததும், வீட்டை விட்டு ஓடிப் போனான். ஓட்டலில், 'சர்வர்' ஆக இருந்து, படிப்படியாக முன்னேறி, இப்போது, ஒரு ஓட்டலுக்கு சொந்தக்காரனாக இருக்கிறான். அதேபோல், ஒரு பெண் படிக்கவில்லை என்ற காரணத்தால், வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, கூலி வேலை செய்து, அந்த பணத்தில் தையல் கற்று, இன்று, சிறு தொழிலதிபராக இருக்கிறாள். அவளிடம், 30 பேர் வேலை செய்கின்றனர்...
''இவர்களெல்லாம், கல்லுாரியில் படித்தவர்கள் இல்லை. ஆகவே, அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம் என்று, உங்கள் தாயாகிய என் கைமேல் சத்தியம் செய்யுங்கள்,'' என்றார்.
'எக்காரணம் கொண்டும், நாங்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம்... இது, உங்கள் மேல் சத்தியம்...' என்றனர், மாணவர்கள்.
இக்காட்சியையும் நிருபர்கள், பதிவு செய்து கொண்டனர்.
''உங்ககிட்ட, நாங்க சில கேள்விகள் கேட்க அனுமதிப்பீங்களா?'' என்றார், நிருபர்.
''கேளுங்க... என்னால் முடிஞ்ச பதிலை சொல்கிறேன்,'' என்றார், ஆசிரியை ராதாதேவி.
''பிள்ளைகளின் வாழ்வுக்காக, இப்படி பாடுபடுகிறீர்களே... இதற்கு ஏதாவது காரணம் இருக்கா?''
''இருக்குப்பா, இருக்கு... என் தங்கை ஒருத்தி, இப்படி தான் தேர்வில் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்டாள். அது, என் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறதுப்பா... அவளை போல, தேர்வில் தோல்வியடையும் பிள்ளைகள், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று தான், இவர்களுக்கு, இப்படியெல்லாம் சொல்கிறேன்.''
''சரிங்கம்மா... இதன் மூலம், பெற்றோருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?''
''பெற்றோரே... நீங்கள் பிள்ளைகளை பெற்று, வளர்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்ற, அவர்களை பகடைக் காய்களாய் பயன்படுத்தி, அவர்களது உயிரை பறிக்காதீர்...
''அவர்கள், எதை படிக்க விரும்புகின்றனரோ, அதை படிக்க உதவுங்கள்... அவர்கள் வாழ, நீங்கள் நல்ல வழிகாட்டியாக இருங்கள்... அவர்களின் எதிர்காலம், உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறக்காதீர்... இதுவே என் வேண்டுகோள்,'' என்றார், ராதாதேவி.
'உங்களின் எண்ணத்தை, எல்லா ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் வெளியிட்டும், ஒளிபரப்பும் செய்கிறோம். தேர்வில் தோல்வியான மாணவர்களை தற்கொலை எண்ணத்திலிருந்து முழுமையாக காப்பாற்றி, நல் வழியில் வாழ வைப்போம் என்று, உங்களிடம் நாங்களும் உறுதியளிக்கிறோம்...' என்று சொல்லி புறப்பட்டனர், மீடியாக்காரர்கள்.
மாணவர்களும், அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
அடுத்த நாள் காலை-
தாங்கள் பணிபுரியும் பத்திரிகை மற்றும் 'டிவி' சேனல்களில், 'மாணவர்களின் மரணத்தை வெல்ல மகத்தான சேவை' என்ற தலைப்பில், மேற்கூறிய சம்பவம் வெளியானது. அதில், தற்கொலை முயற்சியை தடுக்க, ராதாதேவி மேற்கொண்ட கடின உழைப்பும், மாணவர்களிடம் அவர் காட்டும் அன்பு கலந்த தாய் பாசமும், அவர்களை கட்டுப்பாட்டோடு நடத்திய விதமும், அவர்கள் வாழ்வதற்கு கூறிய அறிவுப்பூர்வமான வழியையும், பலரும் அறிய செய்தனர், நிருபர்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, மாணவ - மாணவியரும், ஆசிரியர்களும், கல்வி உயர் அதிகாரிகளும், பொதுமக்களும், போன் மூலமாகவும், சிலர் நேராகவும், ராதாதேவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒன்றரை மாதங்களுக்கு பின், வெளிவந்த, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், பலர் தோல்வியை தழுவியபோதும், யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவும் இல்லை; தற்கொலை செய்து கொள்ளவும் இல்லை என்ற இனிப்பான செய்தியை, ஊடகத்தின் மூலம் அறிந்த பின்னரே, ராதாதேவியின் மனதில் அமைதி ஏற்பட்டது.
எம். ராமசாமி
வயது: 65
படிப்பு: எஸ்.எஸ்.எல்.சி.,
பணி: அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
சொந்த ஊர்: சென்னை அருகே உள்ள, குன்றத்துார்.
பத்திரிகை மற்றும் கதை புத்தகங்கள் வாசிப்பது, இவரது பொழுதுபோக்கு. நாடகங்கள் சிலவற்றை எழுதி, நடித்தும் உள்ளார். கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்.
இவர் எழுதிய சிறுகதைக்கு, முதல் முறையாக பரிசு கிடைத்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
