தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தூய்மையான மனதில்!

தூய்மையான மனதில்!

தூய்மையான மனதில்!


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதிபலன் எதிர்பாராமல் சக உயிர்களிடம் அன்பு செலுத்தும் போது, கூப்பிட்ட குரலுக்கு இறைவன் ஓடி வருவார் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம், ஓர் உதாரணம்...

உத்திரபிரதேசம் மாநிலம், காசி மாநகரில், நாராயண தீட்சிதர் என்பவர் வாழ்ந்து வந்தார். அன்னபூரணி தேவியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், தினமும், அன்னபூரணி வழிபாடு செய்து, சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு உணவளித்து, அதன் பின் உண்பது வழக்கம்.

ஒருநாள், சில சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளை விருந்துக்கு அழைப்பு விடுத்து, வீடு திரும்பினார் தீட்சிதர். ஆனால், அவர் மனைவியோ, வீட்டு விலக்காகி இருந்தார். அதனால், 'சாதுக்களை, விருந்துக்கு வரச்சொல்லி விட்டேனே... தாயே அன்னபூரணி... இப்போது நான் என்ன செய்வேன்...' என, மனம் வருந்தி, வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, அவர் எதிரில், தெய்வாம்சம் பொருந்திய பெண் ஒருவள் வந்தாள்.

அவளை பார்த்ததும், மனம் சிலிர்க்க, தன்னை அறியாமல் கை கூப்பினார், தீட்சிதர்.

அவர் முகத்தில் ஓடிய கவலை ரேகைகளை கவனித்த அப்பெண்மணி, 'தீட்சிதரே... ஏன் தங்கள் முகம் வாடியிருக்கிறது...' எனக் கேட்டாள். தன் இக்கட்டான நிலையை கூறினார், தீட்சிதர்.

'தீட்சிதரே... கவலை வேண்டாம்; உங்களுக்கு சம்மதமானால், நான் சமைக்கட்டுமா...' எனக் கேட்டாள்.

சம்மதித்தார், தீட்சிதர். சமையல் அறைக்குள் நுழைந்த அப்பெண்மணி, 'கடகட'வென சமையலை முடித்தாள். அது மட்டுமல்ல, வந்த விருந்தாளிகளுக்கு, தானே, தன் கையால் பரிமாறவும் செய்தாள்.

வந்தவர்கள் நன்றாக உண்டு, மனமார ஆசி கூறினர். அவர்களை முகமன் கூறி, தீட்சிதர் வழியனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அப்பெண்மணியும் விடை பெற்றாள்.

விருந்தாளிகளிடம் கவனமாக இருந்த தீட்சிதரும், அவளுக்கு விடை கொடுத்தார்.

அவள் வாசலை கடந்த பின்னரே, தீட்சிதருக்கு உறைத்தது... 'யாரிந்த பெண், எங்கிருந்து வந்தாள்... அவளை சாப்பிட்டு போ என்று கூட சொல்லவில்லையே...' என்று எண்ணி, வெளியே ஓடி வந்து, வீதியின் இருபுறமும் தேடினார்.

அப்பெண்மணி, சென்ற வழியே தெரியவில்லை. அன்றிரவு, தீட்சிதர் கனவில் வந்த அன்னை அன்னபூரணி, 'தீட்சிதரே... நான் தான் அன்னபூரணி; உங்கள் வீட்டில் சமைத்து பரிமாறியவளும் நானே... உங்கள் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, என் புல்லாக்கு உங்கள் வாசலின் கிழக்கு திண்ணையில் விழுந்து விட்டது. அந்த இடத்திலேயே எனக்கு கோவில் எழுப்புங்கள்; தங்குவதற்கு இடமில்லாமல், காசி மாநகர் முழுவதும் அலைகிறேன்...' என்று கூறி, மறைந்தாள்.

கனவு கலைந்து எழுந்த தீட்சிதர், வாசலை நோக்கி ஓடினார். அங்கே, கிழக்கு திண்ணையில், அம்பிகை சொன்னபடியே ஒரு புல்லாக்கு ஒளி வீசி, ஜொலித்துக் கொண்டிருந்தது. அன்னபூரணி கனவில் கூறியபடியே, அவ்விடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

காசியில், அன்னபூரணிக்கு எழுப்பப்பட்ட இரண்டாவது ஆலயம் இது.

நாராயண தீட்சிதர் எனும் அவர் பெயராலேயே அமைந்த தெருவில், தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது, இக்கோவில்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

காசியில் தர்ப்பைப் புல் பயன்படுத்துவதில்லையே... ஏன்?

பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்து விடும். இந்த உயிர்கள் அனைத்தும் காசியில் ஐக்கியமாவதாக ஐதீகம். எனவே தான் காசிக்கு, 'மகா ஸ்மசானம்' (மாபெரும் மயானம்) என்ற பெயர் உண்டு. இதனால், காசியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மற்ற இடங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வோர், தர்ப்பை புல்லை பிரதானமாக வைத்துக் கொள்வர். அதாவது, பித்ரு லோகத்தில் உள்ள முன்னோர்களை தர்ப்பையில் எழுந்தருளச் செய்து, தர்ப்பணம் கொடுப்பதாக ஐதீகம். ஆனால், காசியில் நம் முன்னோர்கள் நிரந்தரமாக வசிப்பதால், அங்கு தர்ப்பையை பயன்படுத்துவதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us