PUBLISHED ON : ஏப் 01, 2018

கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை, நமக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக, வடகம், வற்றல் போன்றவற்றை செய்துவிட வேண்டும். அதுமட்டுமல்ல, அவ்வப்போது, அவற்றை உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் நமத்துப் போகாமல் இருக்கும்.
ஜவ்வரிசி மற்றும் கூழ் வடகம் எதுவானாலும், கூழில் பால் சேர்த்தால், வடகம் வெள்ளை வெளேரென்று இருக்கும். எலுமிச்சம் பழச்சாறும் சேர்க்கலாம்; வெண்மையாக இருப்பதுடன், சுவையும் கூடும்.
வடகம் செய்யும்போது, சர்க்கரை, ஏதாவது ஓர் எசன்ஸ், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கூழில் சேர்த்தால் இனிப்பு வடகம் தயார்!
வடகக் கூழில், தக்காளிச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைச் சாறு, கேரட் மற்றும் பீட்ரூட் சாறு கலந்தால், வண்ண வண்ண வடகம் ரெடி!
வடகம் பிழியும் அச்சின் உட்புறம், எண்ணெய் தடவினால், பிழிவது எளிது.
வடகம், வற்றல் போன்றவற்றை பொரிக்கும்போது, சிறிய குழிவான வாணலியை பயன்படுத்தினால், எண்ணெய் குறைவாக செலவாகும்; உடம்புக்கும் நல்லது.
வடகம், வற்றல் செய்யும்போது, கூழ் மாவுடன் சிறிது நெய் கலந்தால், பொரிக்கும்போது, 'கம கம'வென மணக்கும்.
வடகம் காய வைக்கும்போது, இடையிடையே மிளகாய் வற்றலை வைத்தாலோ, கறுப்பு நிறத் துணி அல்லது குடை வைத்தாலோ, அணில் மற்றும் காக்கைகள் வராது.
வடகம் வைக்கும் டப்பாவில் மிளகாய் வற்றலை போட்டு வைத்தால், பூச்சிகள் வராது.
குழம்பு வடகத்தை, சிறிது எண்ணெயில் வதக்கி, வரமிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான வடக துவையல் தயார்!
ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும்போது, கசகசாவை சேர்த்து, வடகம் செய்தால், சுவையும், மணமும் கூடும்.
புளிச்சாறில் உப்பு, பெருங்காயம் சேர்த்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால், சுவையான புளி மிளகாய் தயார்!
மோர் மிளகாய் வற்றல் போடும்போது, வெந்தயத்தை அரைத்து, மோரில் கலந்து, உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறப் போட்டால், வெண்மையாகவும், மணமாகவும் இருக்கும்.
மோர் மிளகாய் செய்யும்போது, அதனுடன், பாகற்காயை வில்லைகளாக நறுக்கி போட்டு வற்றல் செய்யலாம். பாகல் வில்லைகள் காரத்துடனும், மிளகாய் சிறு கசப்புடனும் சுவை மாறி நன்றாக இருக்கும்.
ஜவ்வரிசி வடகம் செய்ய தயாரித்த கூழில், உப்பு, காரம் சேர்க்கு முன், தனியாக கொஞ்சம் எடுத்து வடாம் போட்டு வைத்தால், மாலை, 'ஸ்னாக்ஸ்'க்கு, அவற்றில் கொஞ்சம் எடுத்து, பொரித்து, சர்க்கரை ஏலக்காய் பொடி கலந்து, காய்ச்சிய பாலில் சற்று ஊற வைத்து எடுத்தால், திடீர், பால் போளி ரெடி!
குழம்பு வடாம் செய்யும்போது, சிறிது கறிவேப்பிலையை அரைத்து சேர்த்தால், சுவையும், மணமும் கூடுவதோடு உடம்புக்கும் நல்லது.
வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் போட்டு வைத்தால், வடகம் நமத்துப் போகாமல் இருக்கும்.
ஜவ்வரிசி வடக மாவில், கார சுவைக்கு, மிளகு, சீரக பொடி கலந்தால், சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
எந்த வடகமானாலும் பெருங்காயம் சேர்ப்பது வாசனையை கூட்டும்; உடம்புக்கும் நல்லது.
வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்களை நறுக்கி, உப்பு கலந்த நீர் மோரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்தால், சுவையான, சத்தான வற்றல் தயார். வறுத்து, சாம்பாரிலும் போடலாம்; அப்படியே பொரித்தும் சாப்பிடலாம்.
ஜவ்வரிசி வடகத்தில் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிறிது அவலை தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து, அதில் கலந்து விட்டால், கூழ் கெட்டியாகிவிடும்; சுவையும் கூடும்.
எந்த வடகமாக இருந்தாலும், சிறிது சோம்பு, லவங்கம், கசகசா ஆகியவற்றை வறுத்துப் பொடித்து, கூழுடன் கலந்து விட்டால், மசாலா வடாம் ரெடி!
வடகம், வற்றல்களை கடையில் வாங்கினால், மிதமான வெயிலில் காய வைத்து, பின், பொரித்தால் எண்ணெய் குடிக்காது; ஈரப்பசையும் இருக்காது.
வடகக் கூழில் சிறிது வேப்பம் பூவை சேர்த்தால், வேப்பம் பூ வடகம் தயார்; உடம்புக்கும் நல்லது.
வடக மாவில், ஓமம் சிறிது அரைத்து கலந்தால், வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எளிதில் ஜீரணமாகும்; மணமாகவும் இருக்கும்.
இடியாப்பம் மீந்து விட்டால், அவற்றை வெயிலில் காய வைத்து எடுத்தால், புது வகை வடகம் தயார்!
வடகம் வைப்பதற்கான ஆயத்த வேலைகளை, முதல் நாள் இரவே செய்து விட வேண்டும். மறுநாள், வெயில் வரும் முன், காலை, 6:30க்குள் வடகம் இடும் பணிகளை முடித்துவிட வேண்டும்.
