தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சனீஸ்வரருக்கு வௌ்ளை எள் தீபம்!

சனீஸ்வரருக்கு வௌ்ளை எள் தீபம்!

சனீஸ்வரருக்கு வௌ்ளை எள் தீபம்!


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சனீஸ்வரருக்கு உரிய நிறம் கறுப்பு; நவக்கிரக மண்டபம் மற்றும் சிவாலயங்களில் இருக்கும் சனீஸ்வரருக்கு கறுப்பு உடை அணிவிப்பர். கறுப்பு எள்ளும், நல்லெண்ணெயும் சேர்த்து தீபமேற்றுவது வழக்கம். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கோனேரிராஜபுரம், உமாமகேஸ்வரர் ஆலயத்தில், வெள்ளை ஆடை அணிந்த சனீஸ்வரருக்கு வெள்ளை எள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது.

தன் குஷ்டநோய் தீர, இங்கு வந்து வழிபட்டு நலம் பெற்ற புரூரவஸ் என்ற மன்னர், சிவ சன்னிதி விமானத்திற்கு தங்கத் தகடு வேய்ந்தார். இக்கோவில், ராஜராஜ சோழனின் பாட்டி, செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது.

சிவாலயங்களில் வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை, இங்கு மேற்கு பார்த்து இருப்பது விசேஷம். மார்க்கண்டேயனைப் பிடிக்கச் சென்ற எமனை, திருக்கடையூரில், காலால் எட்டி உதைத்தார், சிவன். தன் பயம் நீங்க, எமன், இந்த துர்க்கையை வழிபட்டுள்ளான். அது மட்டுமல்ல; இங்குள்ள ஒரு மூலஸ்தானத்தில் ஆறு விநாயகர்கள் உள்ளனர். இதை, 'விநாயகர் சபை' என்கின்றனர்.

எல்லா கோவில்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் சன்னிதியே இருக்கும். இங்கு, மூன்று சண்டிகேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. வைத்தியநாத சுவாமிக்கு தனி சன்னிதி உள்ளது. நோய்கள் நீங்க, இங்குள்ள தீர்த்த நீரை தெளித்து, வைத்தியநாதரை வழிபடுகின்றனர்.

இங்கு வழிபாடு செய்திருக்கிறாள், பூமாதேவி. எனவே, இத்தல இறைவனுக்கு, பூமிநாதர் என்ற பெயர் உண்டு. வீடு கட்டுவதில் சிக்கல் மற்றும் நிலப்பிரச்னை உள்ளவர்கள், இவரை வழிபடுகின்றனர். வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில், இத்தலத்தில், 'வசுதரா' யாகம் செய்கின்றனர். பிரசவம் எளிதில் நடக்க, மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, இங்குள்ள அங்கவள அம்மனை வணங்குகின்றனர்.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள், தங்களது பறக்கும் கோட்டைகளை, இஷ்டப்படும் இடத்தில் இறக்கி, மக்களைக் கொன்று குவித்தனர். அக்கோட்டைகள், 'திரிபுரம்' எனப்பட்டன. அவர்களது அட்டூழியத்தை ஒடுக்க, திரிபுரங்களையும் எரித்தார், சிவன். இதனால், 'திரிபுர சம்ஹாரமூர்த்தி' என்ற பெயர் அவருக்கு வந்தது. தீராத துன்பம் தீர, தேய்பிறை அஷ்டமியில் இவரை வழிபடுகின்றனர்.

படிப்பில் மந்தம் உள்ளவர்கள் மற்றும் ஞாபக சக்தி வேண்டுவோருக்கு ஞானகுழம்பு தீர்த்தம் தரப்படுகிறது. இங்கு, ஒரு கொப்பில், 13 தளம் (இலை) உள்ள வில்வ மரம், தல விருட்சமாக உள்ளது.

இக்கோவிலை, 'நடராஜர் கோவில்' என்று அழைக்கின்றனர். வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக, சிவனும் - பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து, நடராஜர், சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். பிரமாண்டமான இந்த சிலையில், ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் மிக சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சனி பகவான், மேற்கு பார்த்து உள்ளார். நளனும், அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன், இத்தலத்தில் வழிபாடு செய்து, அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே, மற்ற தலங்களில் கறுப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து, சமாதான பிரியராக அருள்பாலிக்கிறார். இவருக்கு கறுப்பு எள்ளுக்கு பதில், வெள்ளை எள் எண்ணெய் தீபம் ஏற்றுகின்றனர்.

கும்பகோணம் - காரைக்கால் சாலையில், 22 கி.மீ., துாரத்திலுள்ள, எஸ்.புதுாரில் இருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., கடந்தால், கோனேரிராஜபுரத்தை அடையலாம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us