PUBLISHED ON : மார் 03, 2019

தமிழகத்தை தாக்கிய, 'கஜா' புயல், கேரளாவிலும் லேசாக, 'வேலை'யை காட்டியதில், மூணாறிலிருந்து உடுமலை செல்ல அமைக்கப்பட்ட, 'பெரியவரை' தற்காலிக பாலம் மீண்டும் உடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்போது, பாலத்தின் குறுக்காக, கான்கிரீட் மின் கம்பங்களை போட்டு, தற்காலிக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.
என்ன தான் பாலம் உடைந்தாலும், சுற்றுலா பயணியரின் ஆர்வத்துக்கு அணை போட முடியுமா! பாலத்தின் இரு புறமும் கார், ஆட்டோ, வேன்கள் குவிந்து கிடக்கின்றன. ஒருபுறம், அவரவர் வாகனத்தில் வந்திறங்கி, நடுவில் உள்ள பாலத்தை கடந்தால், மறுபுறம் வாகனங்கள் தயாராக நிற்கின்றன; வாடகை பேசி, அழைத்து செல்கின்றனர்.
இரவிகுளம் தேசிய பூங்கா, 97 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. மூணாறில் இருந்து மேலும், 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரியவர்களுக்கு, 120 ரூபாயும், குழந்தைகளுக்கு, 90 ரூபாயும் கட்டணம் வசூலித்து, வனத்துறை வாகனத்திலேயே அழைத்து செல்கின்றனர்; கேமராக்களுக்கு, தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாம்பா மான், குள்ளநரிகள், இந்திய காட்டெருமை, விதவிதமான கீரிப்பிள்ளைகள் உள்ளன. அழிந்து வரும் அரிய வகை வரையாடுகளை, இங்கு பாதுகாத்து வருகின்றனர்.
இப்பூங்கா, ஐ.நா.,வின் கல்வி அறிவியல் மற்றும் கலாசார பாரம்பரியமிக்க இடமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இதில், 750 வரையாடுகள் உள்ளன.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை, ஏப்ரல் முதல் ஜூன் வரை, 'சீசன்!' இங்கு, தினமும், சராசரியாக, 2,000 சுற்றுலா பயணியரும், சீசனின் போது, 5,000 பேரும் வருகின்றனர்.
மூணாறில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, மேட்டுப்பட்டி அணை. இங்கு படகு சவாரி, சுற்றுலா பயணியரை வசீகரிக்கிறது. அணை தண்ணீரில் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது.
அணையை ஒட்டி, 'எக்கோ பாயின்ட்' உள்ளது. ஓங்கி உயர்ந்துள்ள யூகலிப்டஸ் மரக்காடுகளின் ஓரம் நின்று, நம் பெயரை உரக்க சொன்னால், எதிரொலிக்கிறது. அணைக்கு செல்லும் வழியில், யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் சாவதானமாக சாலைகளை கடந்து செல்கின்றன. அது கடக்கும் வரை, காத்திருந்து பயணிப்பது, பாதுகாப்பானது.
மூணாறில், மாலை, 6:00 மணிக்கெல்லாம் குளிர துவங்கி விடுகிறது. அதன்பின், சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விடுகிறது. இரண்டு நாள், மூணாறை சுற்றிய களைப்பில், இரவில் அடித்து போட்டது போல துாங்கினோம்.
மூன்றாம் நாள் காலை கிளம்பி, 155 கி.மீ., பயணித்து, மதியம், கோட்டயம் மாவட்டம், குமரகம் அடைந்தோம். இரண்டு நாள், இங்கு முகாம். கோட்டயத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ளது, குமரகம். கேரளாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான, வேம்பநாடு காயல் தான், குமரகத்தின் பிரதான சுற்றுலா பகுதி.
பம்பா, மீனச்சல், மணிமாலா, அச்சன்கோவில், பெரியாறு மற்றும் மூவாற்றுப்புழா என்ற, ஆறு ஆறுகளின் சங்கமமே, இந்த வேம்பநாடு ஏரி. பல திசைகளில் இருந்து ஓடி வரும் தண்ணீர், அழகிய கால்வாய்களாக உருவெடுத்து, பின் ஏரியில் கலக்கிறது. இங்கு, படகு சவாரி செய்வது, உற்சாகமான அனுபவம்.
அடுத்து, நாங்கள் சென்றது, கேரளாவின் முக்கியமான சுற்றுலா தலமான, குமரகம்.
இங்கு வந்து, 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளாத பிரபலங்களே இல்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸ், நடிகர்கள், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மறைந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரபல நடிகர் - நடிகையர், தொழிலதிபர்கள் என, பலரும், ஓய்வுக்கு ஓடி வருவது, குமரகத்திற்கு தான்.
இங்குள்ள ஏரியின் கரைகளில், சிறிதும், பெரிதுமாக, ஏராளமான சுற்றுலா விடுதிகள், 'ரிசார்ட்'கள் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். சில விடுதிகளில், இலவச படகு சவாரி, இலவச மசாஜ் போன்ற சலுகைகள் தருகின்றனர்.
நட்சத்திர அந்தஸ்துள்ள, 'ரிசார்ட்' வளாகத்தில், ஏரி நீர் உள்ளே வரும் வகையில், மதகுகள் அமைத்து, சிறிய ஓடை போன்ற கால்வாய்கள் வெட்டி வைத்துள்ளனர். இந்த ஓடைகள், விடுதி வளாகத்தை சுற்றிலும், தோட்டங்களுக்கு மத்தியில் எழிலாக அமைக்கப்பட்டுள்ளன. இருவர் மட்டும் அமர்ந்து செல்லும், துடுப்பு படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், சுற்றுலா பயணியரே, துடுப்பு போட்டு மகிழலாம்.
- தொடரும்
'அசை' போட வைக்கும் அறுசுவை!
கேரளாவின் சுற்றுலா தலங்கள், ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளன என, கூற முடியாது; நட்சத்திர ஓட்டல்களில் கூட, உணவு வகைகள், சொல்லி கொள்ளும்படி இல்லை.
கேரளத்து சேட்டன்கள், 'மோட்டா' அரிசி எனப்படும், நம் ஊர் பருத்திக்கொட்டை அளவில் உள்ள அரிசி சோற்றையே விரும்பி உண்கின்றனர். குண்டுமணி அளவில் பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், 'தனி ஒருவனாக' தரிசனம் தருகின்றன.
நாம், சன்ன அரிசி சாதம் கேட்டால், தருகின்றனர். அதுவும் அரை வேக்காடு தான். கேட்டதும், வெந்நீரில் போட்டு தருவர் போலும். நன்றாக அசை போட்டு சாப்பிட வேண்டும்.
மட்டன், சிக்கன், 'பிங்கர் பிஷ்' போன்ற மென் மீன் உணவுகளை கூட, சவைத்து சவைத்து, சுவைக்கும் பக்குவத்தில் தான் பரிமாறுகின்றனர்.
பொதுவாகவே, கேரளா உணவுகள், நம் பற்களுக்கு, 'ஓவர்டைம்' பணியைத் தருகிறது. தரமான, 'பில்டர்' காபி எங்கும் கிடைப்பதில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தேயிலை தோட்டங்களுடன் காணப்படும் மூணாறு, நட்சத்திர விடுதிகளில் கூட, டீ சுமாராகவே உள்ளது. ஒருவேளை, தரமான தேயிலை எல்லாம், ஏற்றுமதிக்கு மட்டுமே என, கருதி விட்டனரோ!
எஸ்.ஜெயசங்கர நாராயணன்

